[X] Close

மனைவியின் பெற்றோரை கேலி செய்றீங்களா பாஸ்?


wife-parents

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Jul, 2018 13:29 pm
  • அ+ அ-

நகைச்சுவை என்பது அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும். அதுதான் உண்மையான, ஆரோக்கியமான நகைச்சுவை என்பார்கள். ஆனால், நகைச்சுவையின் சோகம் என்ன தெரியுமா? அடுத்தவரை கேலி செய்து காயப்படுத்துவதுதான் நகைச்சுவை என்றும் ஜாலி என்றும் நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நகைச்சுவை, ஜாலிப் பேச்சு, மகிழ்ச்சியான சம்பாஷணை என்பதற்கெல்லாம் இன்றைக்கு ஒரெயொரு வார்த்தைதான் சொல்லப்படுகிறது. அது ‘கலாய்த்தல்’! இப்படிக் கலாய்க்கிறேன் பேர்வழி என்பது தவறில்லைதான். அதுவே ஒருகட்டத்தில் எல்லையை மீறிவிடக்கூடாது.

நண்பர்களுக்கு இடையேயான கலாய்த்தல், உறவுகளுக்கு இடையே நடக்கிற கேலிப்பேச்சுகள் என எதுவாக இருந்தாலும் சில சமயங்களில், தடக்கென்று எல்லை மீறிவிடுகின்றன. அப்போது யாரை கலாய்க்கிறோமோ சம்பந்தப்பட்ட நபருக்கு, பொசுக்கென்று கண்ணில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தோடும். இன்னும் சிலர், நட்பையே துண்டித்துக் கொள்வதும் உறவையே உதறிவிட்டுச் செல்வதும் என்று நடப்பதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், ‘எவ்ளோ அடிச்சாலும் அழாம இருக்கான். இவன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்’ என்பாரே வடிவேலு. அப்படி அமைதிப்பூங்காவாக இருக்கிற இடத்தில், இன்னும் இன்னுமாய்க் கலாய்ப்போம். கேலி பேசுவோம். அவர் வேறு யாருமல்ல... மனைவிதான்!

நாலு ரசகுல்லாவை ஒரேவாயில் போட்டுக்கொண்டால் எவ்வளவு சந்தோஷமோ... அதைவிட மனைவியின் குடும்பத்தாரை கேலி பேசுவதென்றால், அப்படியொரு உற்சாகம் வந்துவிடும் கணவன்மார்களுக்கு!

மற்ற நேரத்தில் எல்லாம், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மாதிரி சிரிக்கக்கூட செய்யமாட்டார்கள். கையை ரிமோட்டிலும் கண்ணை டிவியிலுமாக வைத்துக்கொண்டு, இடிச்சபுளி மாதிரி உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். ’அப்பா, ஸிலிப் டெஸ்ட் பேப்பர் கொடுத்திருக்காங்கப்பா. ஸைன் பண்ணுப்பா’ என்று சொன்னால், ‘அம்மாகிட்ட வாங்கிக்கப்பா. வேலையா இருக்கேன்’ என்று சீரியஸ் முகம் காட்டுவார்கள். வாயே திறக்காமல்தான் இருப்பார்கள். அப்படி வாயைத் திறந்தால், எறிந்துவிழுவார்கள். கடித்துக்குதறுவார்கள். ‘என்ன அங்கே சத்தம்’ என்று ஏழு தெருதாண்டிக் கேட்பது போல் கத்துவார்கள்.

இப்படியான பன்முக முகங்கள் கொண்டு இருப்பவர்களுக்கு, மனைவியின் குடும்பத்தாரை கேலி செய்யும் தருணம் கிடைத்தால் போதும்... அவ்வளவுதான்... நக்கல் என்ன, நையாண்டி என்ன, கேலி என்ன... குத்தல் பேச்சு என்ன என்று குடைச்சலைக் கொடுத்துவிடுவார்கள்.

’ஊர்லேருந்து அண்ணன் பேசுச்சுங்க. மூணு மாசமா சம்பளம் வரலையாம்’

‘எப்படி வரும்? வேலைக்குப் போனா போதாது. வேலையும் பாக்கணும். உங்க அண்ணன் ஒரு சோம்பேறிப்பய. வேற என்னவாம்?’ என்பார்கள். பிறகு... ‘வேற’ எப்படி வரும் மனைவியிடம் இருந்து?

‘அப்பாவும் அம்மாவும் அடுத்த வாரம் வரேன்னு போன் பண்ணிச் சொன்னாங்க. பசங்க கண்ணுக்குள்ளேயே இருக்காங்களாம்’ என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே, ‘ஆஹா... உங்க அப்பனுக்கு பாசம் பொங்கி வழியுதோ? இப்பலாம் வரவேணாம்னு சொல்லு. இங்கே தண்ணிக் கஷ்டம்னு சொல்லு. ரெண்டு மாசம் கழிச்சு வரச்சொல்லு. உங்க தாத்தா தண்ணியப் பாத்தா அவ்ளோதாண்டா. எருமைமாடு தண்ணில விழுந்தா கணக்கா வேஸ்ட் பண்ணிருவாரு. ஸாரி... ஸாரி... எருமைமாடுன்னு இவரைச் சொன்னா, அப்புறம் எருமைமாடு கோவிச்சுக்கும்’ என்று சொல்லிவிட்டு, வீடு குலுங்க, தொப்பை குலுங்கச் சிரிப்பார்கள்.

‘பசங்களா... கல்யாணத்தன்னிக்கு இவங்க அம்மா, அதான் உங்க பாட்டி செஞ்ச கூத்து தெரியுமா?’ என்று குழந்தைகளிடம் கேட்பார். ‘தெரியும்பா... நூத்திப்பதினாலு தடவை சொல்லிட்டேப்பா’ என்பார்கள்.

ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘அப்ப...’ என்று பிளாஷ்பேக் ஓட்டுவார்கள். நடுநடுவே இவர்களே சிரித்துக்கொள்வார்கள். பாவம் குழந்தைகள்... இந்த வன்முறையின் தாக்கத்தில் தவித்து மருகிக் கிடப்பார்கள்.

மனைவியை, மனைவியின் அண்ணன்மார்களை, அப்பா அம்மாவை, மனைவி வீட்டின் பாத்ரூமை, அந்த கிராமத்தை, வசதியே இல்லாத ஊரை, நான்கு முறை மட்டுமே ஊரை, மனைவி படித்த அரசுப்பள்ளிக்கூடத்தை, பள்ளி ஆண்டு விழாவில் மனைவி போட்ட மயில் வேஷத்தை, அண்ணனின் முகத்தை, அப்பாவின் நடையை, அம்மாவின் சமையலை... என்று எல்லையே இல்லாமல், கலாய் கலாய் என மரணக்கலாய் செய்வார்கள்.

அங்கே... மனைவி முகம் சுருங்கிக்கொண்டே போகும். கண்களை கண்ணீர் நிறைத்து மறைக்கும். ‘எனக்கு சாப்பாடு வேணாம் ஒண்ணும் வேணாம்’ என்று எழுந்துகொள்வார். அதேநேரம், ‘இன்னிக்கி சமைக்கவும் மாட்டேன் ஒண்ணும் மாட்டேன்’ என்று ஒருபோதும் சொல்லமாட்டார்.

‘டேய் பசங்களா. வைச்சுக்கறேண்டி உங்களை! எல்லாரும் உங்க அப்பா கூட சேர்ந்துக்கிட்டு கலாய்க்கிறீங்களா? நைட்டு ஒன்பாத்ரூம்னு போகணும்னு மேடம் என்னைத்தான் எழுப்புவீங்க. சாக்ஸப் போட்டு விடு, இந்த டிராயிங் வரைஞ்சுகொடுன்னு இங்கேதானே வரணும். பாத்துக்கறேன்’ என்று பொய்யாய்க் கோபம் காட்டுவார்கள். இந்த பொய்க்கோபம்தான் அவர்களுக்கான ஆறுதல்!

நகைச்சுவை என்பது எவரையும் காயப்படுத்தாதது. அதுதான் உண்மையான நகைச்சுவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் கணவன்மார்களே! பாவம்... மனைவீஸ்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close