[X] Close

பசங்ககிட்ட பணம் கொடுங்க!


pasangakitta-panam

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Jun, 2018 16:47 pm
  • அ+ அ-

பணமே அவசியம். அத்தியாவசியம். இன்றைக்குப் பணமில்லாது, அதிக அதிகமாகப் பணமில்லாது எதுவும் வாங்க முடியாது. ஆனால் அந்தப் பணமெல்லாம் கார்டுகளாகிவிட்டன. டெபிட், கிரெடிட் கார்டுகளாக மாறிவிட்டன.

இந்த டெபிட், கிரெடிட் கார்டுகளைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். முக்கால்வாசி இடங்களில் இவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள், மருந்துக்கடைகள், துணிக்கடைகள், ஷாப்பிங்மால்கள், சூப்பர்மார்க்கெட் கடைகள் என பல இடங்களிலும் பணப்பரிவர்த்தனைகள் குறையத் தொடங்கிவிட்டன. இதற்கு பதிலாக கார்டைத் தேய்ப்பது என்பது அதிகரித்துவிட்டது.

அதுமட்டுமா?

ஆன்லைன் புக்கிங் என இணையதளத்தில் வியாபாரம் றெக்கைக் கட்டி பறக்கிறது. உடைகள், செல்போன்கள், டிவிக்கள், கடிகாரங்கள் என எலெக்ட்ரானிக் பொருட்களும் ஆடைகளும் ஷூக்களும் விற்பனைக்கு வந்து குவிந்தன. இந்த ஆஃபர், அந்த ஆஃபர் என்று நம்மை வெகுவாக சுண்டியிழுத்தன. மேலும் இந்த வங்கிக் கார்டு என்றால் இத்தனை சதவிகிதம், அந்த வங்கிக் கார்டு என்றால் இவ்வளவு சதவிகிதக் கழிவு என்றெல்லாம் கூவிக்கூவி அழைத்து, வியாபாரத்தில் தான் வைத்திருக்கும் இலக்கு எட்டிப் பயணிக்கின்றன.

போதாக்குறைக்கும், செல்போனில் ஆப் டெளன்லோடு செய்துகொண்டால், நம் வங்கிக் கணக்கை வைத்துக்கொண்டால், டிரான்ஸ்பர் செய்துவிடுவது எளிது. இன்னும் சொல்லப்போனால், பே டி எம் என்று வந்திருக்கிறது. இந்த பே டி எம் மூலமாகவே பணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடலாம்.

கிராமத்தில் உள்ள சலூன்கடைக்குச் சென்றவர் 500 ரூபாயை நீட்டியிருக்கிறார். சில்லறை இல்லீங்களேண்ணே என்று கடைக்கார நண்பர் சொல்லியிருக்கிறார். அடுத்த கேள்வியாக, ‘பே டி எம் இருக்குண்ணே. அதுல வேணா படத்தைப் போடுறீங்களாண்ணே’ என்று சலூன் கடை நண்பர் சொல்ல, அந்த நபர் இல்லியேப்பா என்று அசடுவழிந்தார்.

டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு நாமே சென்று பொருட்களை எடுத்து கூடையில் போட்டுக்கொண்டு பில் செக்‌ஷனுக்கு வருகிறோம். நாலு பொருள் வாங்கச் சென்று ஒன்பது பொருட்களை வாங்குகிறோம். எடுத்துக் கொண்டு, பில் பிரிவுக்கு வந்து, தொகையைச் சொன்னதும் கார்டை ஸ்டைலாக எடுத்துக் கொடுக்கிறோம். பெரிய பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் ஒரு கார்டு தருகிறார்கள். அந்தக் கார்டுக்கு ஒவ்வொரு முறை வாங்கும் போதும் சலுகைகள், பர்சண்டேஜ்கள் உண்டு என்கிறார்கள். இதுபோதாதா நமக்கு?

முன்பெல்லாம், மாதந்தோறும் சம்பளம் குறிப்பிட்ட தேதியில் கிடைக்கும். அப்போது வவுச்சரில் கையெழுத்திட்டு சம்பளக்கவரைப் பெற்றுக்கொள்வோம். அந்தக் கவரை பிரிக்கக் கூட செய்யாமல், பிரித்து எண்ணிப்பார்த்தாலும் அதில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், வீட்டுக்கு எடுத்துச் சென்று, அம்மாவிடமோ மனைவியிடமோ கொடுப்பார்கள். அவர்கள், சுவாமி படத்திலோ சுவாமி மாடத்திலோ வைப்பார்கள். முன்னதாக, சம்பளக் கவரை வாங்கும்போதே, கண்ணில் ஒற்றிக்கொள்கிறவர்களும் உண்டு. அதேபோல் சம்பளக் கவரை வீட்டில் உள்ளவர்களும் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாங்குவார்கள்.

சம்பளக் கவர் என்றில்லை. பணத்தை கண்ணில் ஒற்றிக்கொள்வது மகாலக்ஷ்மியின் அம்சம் அது என்பதற்காக மட்டும் அல்ல. உழைப்பின் பரிசு அது. நம்மையும் குடும்பத்தையும் மேம்படுத்துகிற, நம் அன்றாடங்களுக்குப் பசியாற்றுகிற விஷயமாக காசு பார்க்கப்பட்டது. ஆகவே கண்ணில் ஒற்றிக் கொள்ளப்பட்டது.

இப்போது, வேறொரு காலம். கார்டு இன்றி அமையாது உலகு என்றாகிவிட்டது. பாவம் குழந்தைகளுக்கு சேமிக்கிற பழக்கங்களும் இப்போது இல்லை.

ஆமாம். முன்பெல்லாம் அத்தை வீடுகளுக்கும் தாத்தா வீடுகளுக்கும் குழந்தைகளுடன் செல்வோம். அப்போது குழந்தைகளுக்கு அஞ்சுரூபாய், பத்துரூபாய் என்று கொடுப்பார்கள். அதுவொரு ஆசீர்வாதமாகவே பார்க்கப்பட்டது. குழந்தைகளுக்குப் பிறந்தநாள் மாதிரியான தருணங்களில், தீபாவளி முதலான பண்டிகைகளில், சாக்லெட்டோ சர்க்கரைப் பொங்கலோ, பலகாரங்களோ அக்கம்பக்க வீடுகளுக்கு குழந்தைகள் எடுத்துச் செல்வார்கள்.அந்த வீடுகளில், குழந்தைகளுக்கு பத்துரூபாயோ ஐம்பது ரூபாயோ அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, இயன்ற அளவில் தந்து மகிழ்வார்கள். மகிழ்ச்சிப்படுத்துவார்கள். பசங்களுக்கென்றே மண்ணால் செய்யப்பட்ட உண்டியல் இருக்கும். அதில் அதைப் போட்டு வைப்பார்கள். அந்த உண்டியலில் செலுத்துவதற்குத்தான் வழி இருக்கும். எடுப்பதற்கு வழி இருக்காது. மேலும் அப்படி எடுப்பதாக இருந்தால், செலுத்தும் வழியில் குச்சிவிட்டு எடுக்கவேண்டும். அல்லது உண்டியலை உடைக்கவேண்டும்.

ஆனால், இன்றைக்கு பிளாஸ்டிக் உண்டியல்கள், தகர உண்டியல்கள் வந்துவிட்டன. போடுவதற்கு ஒரு வழி, பணத்தை எடுப்பதற்கு ஒரு வழி என்று சுலபமாகவே இருக்கிறது. ஆனாலும் எத்தனை குழந்தைகளிடம் உண்டியல் இருக்கிறது என்று பார்த்தால் மிகக்குறைவாகிவிட்டது என்பதுதான் வருத்தம்.

தவிர, அத்தைப் பாட்டிவீடுகளுக்கும் அக்கம்பக்க வீடுகளுக்கும் செல்வதும் கொடுப்பதும் பெறுவதும் குறைந்துவிட்டது.

முதலில், பசங்களுக்கு உண்டியல் வாங்கிக் கொடுங்கள். பிறகு உங்களிடம் கிடைக்கிற சில்லறைக் காசுகளை பகிர்ந்து கொடுங்கள். புதிய பத்துரூபாய், புதிய இருநூறு ரூபாய் கிடைக்கும்போதெல்லாம் கொடுப்பது என்று முடிவு செய்யுங்கள்.

பணத்தை அவ்வப்போது எடுத்து கைவிட்டு, விரல்தொட்டு, எண்ணிப்பார்க்கிற வழக்கத்தை ஏற்படுத்துங்கள். கண்ணில் ஒற்றிக்கொள்ளச் சொல்லிக்கொடுங்கள்.

விரும்பிய டாய்ஸை உடனே ஆன்லைன் ஓபன் செய்து, கிரெடிட் கார்டைப் போட்டு, இன்னும் நான்கு நாளில் வரும் என்று சொல்லவே சொல்லாதீர்கள். ‘நீ கேட்ட பொம்மை விலை இவ்வளவு. நான் கொஞ்சம்கொஞ்சமாத் தந்த தொகையைக் கூட்டிக்கிட்டே வா. அந்தத் தொகை சேர்ந்தவுடனேயோ,சேருவதற்கு நெருங்கும் போதோ... மீதிப் பணம் போட்டு வாங்கித் தரேன்’ என்று சொல்லுங்கள். சொல்லி வளருங்கள்.

பால்காரருக்கு, பேப்பர் போடுகிற தம்பிக்கு, அயர்ன்கார ஐயாவுக்கு கார்டெல்லாம் செல்லுபடியாகாது. ரொக்கம்தான். பணம்தான். ஏடிஎம்மில் இருந்து எடுத்துதான் தரவேண்டும். எண்ணிதான் கொடுக்கவேண்டும். ஏடிஎம்ல் இருந்து பணம் எடுங்கள். மனைவியிடமோ அம்மாவிடமோ கொடுங்கள். பால், பேப்பர், அயர்ன் எனக் கொடுப்பதற்கு முன்னதாக, பசங்களிடம் பணத்தைக் கொடுத்து, அதை எண்ணி கொடுக்கச் சொல்லப் பழக்குங்கள்.

குழந்தைகள் வளரும் காலம் இன்னும் மோசமாகிவிடும் போல! பணத்தைக் கண்ணில் பார்க்காத காலம் வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆகவே பணத்தை எண்ணி எண்ணி, கொடுக்கும்போதுதான் பணத்தின் மதிப்பும் உழைப்பின் உன்னதமும் அத்தியாவசியத் தேவைகளும் தெளிவாகத் தெரியவரும்!

சொல்லப்போனால் நமக்குத்தான் தெரியவில்லை... நம் குழந்தைகளாவது தெரிந்து, அறிந்து, உணர்ந்துகொள்ளட்டுமே!

பணத்தை குழந்தைகளிடம் கொடுத்து எண்ணச் சொல்லுங்கள்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close