[X] Close

சண்டே..! அதிகரித்து வரும் பயணங்கள்!


sunday-athikarithu-varum-payanangal

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Jun, 2018 10:56 am
  • அ+ அ-

சண்டே ஹாலிடே! எனவே, அதையொட்டிய குதூகலங்களும் கொண்டாட்டங்களும் இப்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. காரை எடுத்துக்கொண்டு சென்னைக்கு அப்பால் செல்வதோ வாடகைக் காரை புக் செய்துகொண்டு, கோயில்குளம் என்று போவதோ அதிகரித்திருக்கிறது.

கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தையும் குழந்தைகளையும் செம்மையாக பராமரிக்க, பேண முடியும் என்பது இப்போதைய பொருளாதாரக் கணக்கு. கணவன் ஒரு பக்கம் ஓட, மனைவி இன்னொரு பக்கம் ஓட, இருவரும் சந்திக்கும் போது பேசமுடியவில்லையே... என்று ஞானஒளி சிவாஜி பாட்டு கணக்காக, ஞாயிற்றுக்கிழமையை அக்கடா கிழமை, அப்பாடா கிழமை என்பதாக மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இது கடந்த சில வருடங்களில் அதிகரித்தபடியே இருக்கிறது.

சென்னைக்கு உள்ளேயோ புறநகரிலோ கஷ்டப்பட்டு, கடனைஉடனை வாங்கி (வேற வழி) ஒரு வீடு வாங்கிக்கொள்கிறார்கள். கணவரின் சம்பளத்தில் இ.எம்.ஐ., மனைவியின் சம்பளத்தில் குடும்பம், பள்ளி, மருத்துவம் என்று கணக்கிட்டுக்கொள்கின்றனர். நடுவே கணவன் ப்ளஸ் மனைவிக்கு இன்கிரிமெண்ட், இன்செண்ட்டீவ் என வரும். இது வருடத்துக்கு ஒருமுறையோ இரண்டு முறையோதான்! ஆனால் இருபது தடவை கார் லோன் தருவதாகக் கூவிக்கூவி, நாக்கில் தேன் தடவி ருசி காட்டும் வங்கிகள் ஏராளம்.

‘எப்பப் பாத்தாலும்தான் கால் டாக்ஸி புக் பண்ணவேண்டியிருக்கு. நமக்கே நமக்குன்னு ஒரு கார் இருந்துச்சுன்னா, அங்கே இங்கே போகலாம், வயசான உங்க அம்மாவை (ஆஹா) கூட்டிக்கிட்டு கோயில்குளம்னு போகலாம். ஒரு கார் வாங்கிடலாம்ங்க’ என்று மெல்ல ஆரம்பிக்கிற பேச்சு, ஒருநாள் காருக்கு மாலையெல்லாம் போட்டு, காருக்கு முன்னே குடும்ப சகிதமாக நின்றபடி செல்ஃபி  எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்து, குடும்பத்தின் புதிய உறுப்பினராக கார் வந்திருப்பதை பறையறிவிப்பார்கள்.

பிறகென்ன... வாராவாரம் எந்த ஆரவாரமும் இன்றி, திருவண்ணாமலை பக்கமோ செஞ்சி மலைக்கோ மாமல்லபுரத்துக்கோ திருச்சியைச் சுற்றியோ, தஞ்சாவூர் பக்க கோயில்களுக்கோ போய்விட்டு வருவார்கள்.

‘’கார் இருக்குன்னு கோயிலுக்கோ அங்கே இங்கேயோ போகறதில்ல. ஏதோவொரு ரிலாக்ஸ் தேவையா இருக்கு எல்லாருக்குமே. ஒருவித ஸ்ட்ரெஸ்லதான் எல்லாருமே ஓடிக்கிட்டிருக்கோம். ஐ.டி.கம்பெனி, பிபிஓ கம்பெனின்னு முன்னாடி தனியா பிரிச்சுப் பாக்கும்படியா அதோட சட்டதிட்டங்கள் இருந்துச்சு. இப்ப, நம்மூரு கம்பெனிங்க கூட, ஐடி செக்டார்க்கு வந்தாச்சு, ஒரு கார்ப்பரேட் செட்டப்போடதான் ஒர்க்கர்ஸை அணுகுறாங்க. இதுல ரொம்பவே நொந்து நூலாயிடுறாங்க. அது கணவனுக்கா இருக்கட்டும். மனைவிக்கா இருக்கட்டும். ஒரு ஸ்ட்ரெஸ்... ஒரு டென்ஷன்... ஒரு டிப்ரஷன். ரிலாக்ஸ் தேவையா இருக்கு. அதான் இப்போ ஞாயித்துக்கிழமைல, வெளியூர் போற கார்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு’’ என்கிறார் நண்பர் ஒருவர்.

‘’மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் ரூபா வீட்டுக்காக இஎம்ஐ கட்டவேண்டியதா இருக்கு. காருக்கு நாலாயிரத்து எழுநூத்தி நாப்பது ரூபா. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு முன்னாடி சுகமா இருந்தாலும் 20 தேதிக்கு மேல, ‘ஹலோ... ஹலோ’ன்னு பணம் கட்டச் சொல்லி ஒரு தேதியைச் சொல்லும். சென்னைதான் சோறு போடுதுன்னாலும் ஒரு பயம். சொந்த ஊரு, திருநெல்வேலியைத் தாண்டி ஒரு கிராமம். ஊர் பேரைச் சொன்னாக் கூட யாருக்கும் தெரியாது. அவ்ளோ தூரம் காரை எடுத்துக்கிட்டுப் போகமுடியாது. அதனால திருவண்ணாமலைப் பக்கம் காலைல கிளம்பி போயிட்டு, நைட்டு வந்துருவோம். கோயில், மலை, கிரிவலம், ஆஸ்ரமம்னு இதமா இருக்கும் மனசு’’ என்று தத்துவார்த்தமாகப் பேசுகிற அந்த இளைஞருக்கு வயது 36.

’’எங்கிட்ட சொந்தமா கார் இல்ல. ஆனாலும் மாசம் ரெண்டு ஞாயித்துக்கிழமையாவது திருத்தணிப் பக்கமோ, திருவாலங்காடு பக்கமோ, இந்தப் பக்கம் திருவக்கரை, புதுச்சேரின்னோ போயிட்டு வந்துருவோம். ஆறு மணி நேரம், எட்டுமணி நேரம்னு பேக்கேஜ் டிராவலிங்கெல்லாம் இருக்கு. அது கொஞ்சம் கையைக் கடிக்காம இருக்கு. ஒரு ஞாயித்துக்கிழமை இப்படிப் போயிட்டு வந்தா, ஏதோவொரு எனர்ஜி. என்னவோ ஒரு விடுதலை உணர்வு’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

‘’ஞாயித்துக்கிழமையானா, சென்னைக்குள்ளே எங்கே போவீங்க? பீச்சுக்குப் போனா, அங்கே நசநசன்னு கசகசன்னு வெய்யிலு. ஷாப்பிங் மால் பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆயிருச்சு. 200 ரூபா எண்டர்டெய்ன்மெண்ட்டுக்கு 2 ஆயிரத்துக்கு செலவு செய்யணும். தேவையே இல்லாம அதைஇதைன்னு எதையாவது வாங்கணும். சரி, லேட்டா எந்திரிச்சோமா, கறியோ மீனோ எடுத்தோமா, டிவியைப் பாத்தோமான்னு இருக்கமுடியல. அன்னிக்கிதான் பேப்பரை முழுசாப் படிக்கமுடியும். அடிக்கிற வெயிலுக்கு நான் வெஜ் மேல இருக்கிற ஆசை குறைஞ்சிக்கிட்டே வருது. டிவியைப் போட்டாலே, அறுத்தெடுக்கறானுங்க. ஆக, வீட்லயும் இருக்கமுடியல. சென்னைக்குள்ளேயும் சுத்தமுடியல. எங்கே நிம்மதி எங்கே நிம்மதின்னு தேடிக்கிட்டு ஓடவேண்டியிருக்கு. என்னத்த சொல்றது போங்க!’’ என்று அலுப்பும் சலிப்புமாக ஞாயிற்றுகிழமை, பரனூர் தாண்டி, மதுராந்தகம் கடந்து பறந்துகொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close