[X] Close

நோயை விட நோய் பயம் கொடுமை!


disease-no-tension

  • வி.ராம்ஜி
  • Posted: 22 Jun, 2018 17:08 pm
  • அ+ அ-

நோய் நாடி நோய் முதல் நாடி என்பதெல்லாம் பழங்காலம். யாருக்கு, எப்போது, என்ன மாதிரியான வியாதியெல்லாம் வரும் என்று சொல்லவே முடிவதில்லை. கேட்டால் கலிகாலம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடுவார்கள் பலரும். கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கேட்டால், ’ஹும்... எல்லாமே மாறிப்போச்சுங்க’ என்று உதட்டைப் பிதுக்கி, கையைத் திருப்பி, கவலை முகம் காட்டுவார்கள்.

நோயின் தாக்கம் கொடூரமானதுதான். நம் அன்றாட வாழ்க்கை ஸ்டைலையே சொடக்கு மேல சொடக்குப் போடுவதற்கு உள்ளாகவே, திருப்பிப் போட்டுவிடுபவைதான்.

நண்பரின் தந்தைக்கு இதயத்தில் ஏதோ பிரச்சினை. அவ்வளவுதான். இனிமே வேகமாக நடக்கக்கூடாது. அதிர்ந்து பேசக்கூடாது. ‘அப்பா வந்துட்டாரு, டிவி வால்யூமை கம்மியா வைங்க’, எண்ணெய் ரொம்ப சேக்காதீங்க, சாதம் குறைச்சலா இருக்கட்டும், நைட்ல ஆப்பிள் வேண்டாம், தினமும் கீரை இருந்தா நல்லது என்று நண்பர்கள் படுத்தியெடுத்துவிட்டார்கள் அவரை!

’வரக்கூடாது. வந்துருச்சு. அதுக்கு என்ன இப்போ? என்னோட ரொட்டீன் லைஃப்ங்கறது, 47 வருஷப் பழக்கம். முந்தாநேத்திக்கி வந்த ஏதோவொரு வியாதியால, மொத்த வாழ்க்கையையும் தூக்கி எறிஞ்சிட்டு, இந்த நோய் பின்னாடி ஓடணுமா’ என்று மீசை முறுக்கிக் கேட்கிறார் நண்பரின் அப்பா.

ஒருவகையில் இவர் சரிதான். ஆனால், முரட்டுத்தனம் கூடாது இதில்.

இன்னொருவருக்கு ஷுகர். ரேஷன் கடை மாதிரியா இல்ல. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்பு மாதிரி, திகட்டத் திகட்ட இருக்கு. இன்சுலின் இன்றி அமையாது உலகுன்னு ஆகிப்போச்சு. அதனால என்ன. தினமும் இன்சுலின் போட்டுக்கறேன். குறைச்சலா சாப்பிடுறேன். பசிக்கும்போது சாப்பிடுறேன். பஜகோவிந்தம் பாட்டு கேட்டுக்கிட்டே தூங்கறேன். நோ டென்ஷன்... ஒன்லி ரிலாக்ஸ்’ என்று கண்சிமிட்டுகிறவருக்கு அடுத்த வருடம் 60ம் கல்யாணம்.

மெடிக்கல் ஷாப்பில் அந்தப் பெண்மணியைப் பார்த்ததையும் சொல்லியாகவேண்டும். எல்லோரும் அவரைத்தான் பார்த்தார்கள். ‘என்னது இது. மோசமான உலகமாயிருச்சே! எனக்கு ஃபிப்ட்டி ஃபோர் ஆகுது. போனமாசம் வரை ஷுகர் இல்ல. பிபி கிடையாது. இப்ப வந்துருச்சாம். டாக்டர் சொல்றாரு. எப்பவாவது மயக்கம் வரும். சரி விரதம்னு சாப்பிடாம இருக்கோமே. அதான்னு நெனைச்சுக்கிட்டேன். ஆனா ஷுகர்ங்கறான். லோ பிபிங்கறான். ஏன் சார்... இந்த மாத்திரை எதுக்கு? ஷுகர் குறைக்கவா. இந்த சின்னதா இருக்கற மாத்திரை எதுக்கு? மயக்கம் வராம இருக்கறதுக்கா? அங்கே இங்கே, கோயில்குளம்னு போவேன். தனியாவே போயிருவேன். இப்ப போகக்கூடாதுங்கறாங்களே. ஏன்... மயங்கி விழுந்துருவேனா. அப்புறம் எதுக்கு மாத்திரை, டிரீட்மெண்ட், டெஸ்ட்டு...’ என்று அந்த அம்மா சொல்லச் சொல்ல, அங்கிருந்த அனைவருக்கும் எகிறியிருக்கும் பிபி!

ஊரில் ஒரு ஐயா. அவருக்கு எப்படியும் வயசு 80 இருக்கும். நெற்றி நிறைய விபூதி இட்டிருப்பார். திருவாசகம் முற்றோதுதல், உழவாரப்பணி என்று கிளம்பிவிடுவார். அவருக்கு இரண்டு முறை பைபாஸ் நடந்திருக்கிறது. ஆனாலும் மனிதர், உற்சாகப் புலி. ‘ஏன் சோக கீதம் வாசிக்கணும்? எனக்கு தி.க.வைப் பிடிக்காது. ஆனா பெரியாரைப் பிடிக்கும். அவர் மூத்திர பக்கெட்டோட, ஊர் ஊராப் போய், மேடைமேடையா ஏறி, இந்த சமூகத்துகாக, நம்ம தேசத்துக்காக, எவ்ளோ கருத்துகள் சொல்லிருக்கார். இப்படிலாம் ஆயிருச்சேனு முடங்கிப்போடலியே. மூக்குன்னு இருந்தா சளின்னு இருக்கும். மூச்சுன்னு இருந்தா, திடீர்திடீர்னு ஸ்பீடு பிரேக்கெல்லாம் இருக்கும். இருக்கிற வரைக்கும் நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துட்டு நிம்மதியா கிருஷ்ணா ராமான்னு போய்ச்சேந்துடணும்’’ என்று சொல்லிச் சிரித்தார்.

பேரரறிஞர் அண்ணா கூட கேன்ஸரால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அயராமல் உழைத்துக் கொண்டே இருந்தார் என்று படித்ததாக ஞாபகம். எழுத்தாளர் பாலகுமாரனுக்குக் கூட, இரண்டு முறை பைபாஸ் நடந்திருக்கிறது. ஆனாலும் அவர், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கடைசித் தருணங்களில் கூட, எழுதிக்கொண்டிருந்தார், எழுதுவதற்காக படித்துக்கொண்டிருந்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கூட,  ‘என் உடம்பில் 36 இடங்கள்ல காயம் ஏற்பட்டிருக்கு. தையல் போட்டிருக்கு’ என்று சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் பிக்பாஸ், நடுவே அரசியல் என்று இன்னமும் பரபரவென ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்.

நோயையே நினைத்துக் கொண்டிருப்பதுதான் நோயின் முதல் வெற்றி. நோயை, வலியை, வேதனையை புறந்தள்ளிவிட்டால், நோயில் இருந்து மீண்டுவிடுவோம். இல்லையா... நோயால் விளையும் மரணத்தைத் தள்ளிப்போடுகிறோம் என்றார் அறிஞர் ஒருவர்.

இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்துக்கு இல்லாத தோல்வியா. அவர் உடலில் இல்லாத வேதனையா. பைக் ரேஸில் விபத்து. முதுகுத்தண்டு உடைந்து ஆபரேஷன். பட்ட காலிலேயே படும் என்பது போல, பட்ட முதுகுத்தண்டிலேயே பட்டு ஒன்பது முறை ஆபரேஷனாகியிருக்கிறது. போதாக்குறைக்கு, அந்தப் படத்தின் போது கையில் முறிவு, இந்தப் படத்தின் போது காலில் முறிவு என்று நடக்கத்தான் செய்கிறது. நடுவே அவர் சாப்பிட்ட வலிநிவாரணிகளால், வலி குறைந்ததோ இல்லையோ... அவர் குண்டாகி வளர்ந்ததுதான் மிச்சம். பிறகு கடும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஒல்லியானார். இப்போது பழைய உடல்வாகுடன் இருக்கிறார். அடுத்த படம் அடுத்த படம் என்று உத்வேகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிற அஜித்... நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் நோய் பயத்தால் நொந்துநூடுல்ஸாகிக் கொண்டிருக்கிறவர்களுக்கும் எனர்ஜி பூஸ்டர்.

பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசன் என்றொரு எழுத்தாளர். அப்புசாமி, சீதாப்பாட்டிக்கு அப்பா, அம்மா, கார்டியன் எல்லாமே இவர்தான். அந்தக் கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கிய அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர். சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

முன்னதாக, அவருக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தபோது, அவரின் மகனையும் உதவியாளரையும் நர்ஸ் ‘கொஞ்சம் வெளியே இருங்க. இங்கேருந்து டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என்றார். அந்த நர்ஸ் போனதும், ‘டேய்... பேசாம கட்டிலுக்குக் கீழே ஒளிச்சுக்கங்கோடா. நர்ஸ் கண்டுபிடிக்கிறாளான்னு பாப்போம்’ என்று காமெடி செய்ததை, அவர் இறந்தபோது, அழுதுகொண்டே சொன்னார்கள்.

’’உடம்புங்கறது ஒரு மிஷின். ஒரு வண்டி. சில சமயம் டயர் மாத்தணும். டியூப் மாத்தணும். சில சமயம், வீல் புதுசு போடணும். பிரேக் ஷு மாத்தணும். இன்ஜின் பிரிச்சு வேலை செய்யணும். அதுல ஏகப்பட்ட பார்ட் புதுசு போடணும். கட்டக்கடைசியாத்தான் வண்டி லாயக்கில்லைன்னு முடிவுக்கு வருவான் மெக்கானிக். மிஷினுக்கும் அப்படித்தான்!’’ என்று உத்வேகம் பரப்பும் பேச்சுக்காரர்கள், இருக்கத்தான் செய்கிறார்கள்.

உற்சாகமும் உத்வேகமும்தான் வலிநிவாரணிகள். சிரிக்கச் சிரிக்கப் பேசுவதுதான் ஆகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது உண்மைதான். அதேசமயம், நோய் மறந்து வாழும் வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதும் சத்தியவார்த்தைதான்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close