[X] Close

பட்டுகோட்டை பிரபாகர் மாணவர்களுக்கு அட்வைஸ்! என் நாயகன் பரத் வக்கீலானதன் பின்னணி தெரியுமா?


pattukottai-prabhkar-advice

எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர்

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jun, 2018 15:32 pm
  • அ+ அ-

 மருத்துவம் முதலான படிப்பைப் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் போய், தவறான முடிவுகளை எடுக்கும் மாணவர்களுக்கு எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் தன் முகநூல் பக்கத்தில் வருத்தத்துடன் அறிவுரை தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் தன் முகநூலில் எழுதியிருப்பதாவது:

பட்டப் படிப்பு முடித்ததும் சட்டம் படிக்க விரும்பியவன் நான். குடும்ப வர்த்தகத்தின் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலையால் அந்தக் கனவு நிறைவேறவில்லை.

என் துப்பறியும் கதைகளின் நாயகன் பரத் பாத்திரத்தை வக்கீலாக அமைத்ததின் பின்னணியில் இருக்கும் உளவியல் காரணம் இதுதான்.

பட்டம் முடித்த சமயம் நான் எழுத்து, பத்திரிகை, சினிமா என்று நேரம் போதாமல் இயங்கப் போகிறேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

அதுதான் நம் வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ரகசியம்.

மாணவக் கண்மணிகளே... மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்பது நல்ல நோக்கம்தான். ஆனால் அது சாத்தியப்படவில்லை என்றால் மனம் உடைதல் மிகப் பெரிய முட்டாள்த்தனம்.

உங்கள் வாழ்க்கை உங்கள் எதிர்காலம் குறித்து ஒளித்து வைத்திருக்கும் ரகசியம் உங்களுக்குத் தெரியவரும்போது அது நீங்கள் முன்னர் விரும்பியதைவிட அதிகம் விருப்பமுள்ளதாகவும் இருக்கலாம்.

பின்னூட்டத்தில் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார் இப்படி: மருத்துவம் படித்து பிறர் உயிரைக் காக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது என்ன ஒரு முரண்..!

மருத்துவம் என்றில்லை.. எந்தப் படிப்புக்கு ஆசைப்பட்டாலும் அது கிடைக்காமல் போனால் அந்த விருப்பம் என்பது ஒரே ஒரு நாள் அழுகைக்கு மட்டுமே மதிப்பானது.

அடுத்த நாளே புதிய விருப்பம் ஏற்படுத்திக்கொள்வதே அறிவுப்பூர்வமான செயல்.

இவ்வாறு பட்டுகோட்டை பிரபாகர் முகநூலில் எழுதியுள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close