[X] Close

பச்சைகுத்துதல்.. அழிந்துவரும் அழியாத மை


the-disappearing-art-of-pachai-kuthu

  • kamadenu
  • Posted: 02 Jun, 2018 12:45 pm
  • அ+ அ-

இன்றைய இளைஞர்களின் பின்பற்றும் ஃபேஷனின் உச்சபட்சம் டாட்டூ. கை, கழுத்து, முதுகு என விதவிதமான டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். இளம் பெண்களும் டாட்டூவை விட்டுவைப்பதில்லை. ஒரு விரலில்மட்டும் மோதிரம் போல் டாட்டூ எனத் தொடங்கி கொலுசு போல் டாட்டூ என்றெல்லாம் விதவிதமாக டாட்டூ வரைந்து கொள்கின்றனர்.

ஆனால், இந்த டாட்டூக்களுக்கு எல்லாம் தாத்தாவான பச்சைகுத்தும் தொழில் இப்போது நலிவடைந்துவிட்டது.
இந்த பச்சைகுத்தும் தொழிலில் சிறந்தவர்கள் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவும் மதுரையில் கல்மேடு எனும் பகுதியில் வசித்த நரிக்குறவர்கள்தான் ஒரு காலத்தில் இந்த பச்சைகுத்து தொழிலுக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால், இன்றெல்லாம் இந்த பச்சைகுத்தும் தொழிலைவைத்து பெரிதாக ஏதும் சம்பாதித்துவிட முடியாது என்பதால் அவர்களே அத்தொழிலைவிடுத்து வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். சிலர்மட்டும் பாரம்பரியத்தைவிட்டுவிடக்கூடாது என டாட்டுக்கள் பாணியில் எலக்ட்ரானிக் நீடில்கள் மூலம் பச்சை குத்துகின்றனர்.
அப்படி இன்னமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் கல்மேடுவாசி ஒருவர் கூறும்போது, "மூன்று ரேடியோ பேட்டரிகள் போதும். இப்போதெல்லாம் நாங்களும் மெஷின் மூலம் டாட்டூ போடத் தொடங்கிவிட்டோம். அமேசான் ஆப்பில்தான் டாட்டூ நீடில்களை வாங்குகிறோம். அவற்றைவைத்து விதவிதமாக பச்சைகுத்துகிறோம்" என்றார்.

இப்படித்தான் பச்சைகுத்துவோம்..
"ஆரம்பகாலத்தில், தங்களுக்கு விருப்பமானவர்களோ அல்லது இஷ்ட தெய்வங்களின் பெயரையோ பச்சைகுத்திக் கொள்ளவே வாடிக்கையாளர்கள் வருவார்கள். நாங்களும், தாய்ப்பாலில் ஒருவித மூலிகையையும் லாந்தர்ன் விளக்குகளிலும் சாம்பலையும் சேர்த்து மையைத் தயாரிப்போம். அதைக் கொண்டு வாடிக்கையாளரின் கையில் பெயரை எழுதுவோம். தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் பசும்பாலில் மை தயாரிப்போம். எழுதும்போது கருப்பாக இருக்கும் மை உடலில் கலந்தவுடன் பச்சையாக மாறிவிடும்" என்று கூறினார் பச்சைகுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற பெரியவர் ஒருவர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி வலம்வந்தால் நிச்சயம் இந்த பச்சைகுத்தும் தொழிலாளர்களைப் பார்க்க முடியும். அப்படித் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர், "ஓர் எழுத்து பச்சைகுத்த ரூ.10 வாங்குகிறோம். அதுவே கொஞ்சம் அலங்காரமாக செய்ய வேண்டும் என்றால் ரூ.50 வரை வாங்குகிறோம். ஆனால், ஒரு நபருக்குப் பயன்படுத்தும் ஊசியை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவதில்லை" என்றார்.

கல்மேடுவாசிகள் அனைவரது கைகளிலுமே பெயரும், ஊரும் பச்சைகுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது, "நாங்கள் ஒவோர் இடமாக அவ்வப்போது பெயர்ந்துகொண்டிருப்போம். எங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எங்களது பெயரும் ஊரும் தெரிந்தால் எங்கள் உறவுகளிடம் சேர்த்துவிடுவார்கள் அல்லவா? அதற்காகத்தான் நாங்கள் எல்லோருமே பச்சை குத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

பச்சைகுத்துதலில் மருத்துவ நன்மை!
கல்மேடு கிராமத்தில் உள்ள மூத்த மக்கள் சிலர் பச்சைகுத்திக் கொள்வதில் உடல்நலம் பேணும் அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர். ஒருவருக்கு தீராத் தலைவலி இருந்தால் நெற்றிப்பொட்டில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும். நெஞ்சு எரிச்சல் உபாதை இருந்தால் நெஞ்சுக்குக்கீழ் பச்சை குத்திக் கொள்ள வேண்டும். பச்சைகுத்தினால் அது குத்தப்படும் இடத்திலிருந்து அசுத்த ரத்தத்தை எடுத்துவிடுகிறது. மூட்டுவலிகூட பச்சைகுத்தினால் குணமாகும்" என்றனர். ஆனால், இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டாலும் இன்றளவும் சிலர் தலைவலி, மூட்டுவலி தீர சிறிதாக பச்சைகுத்திக் கொள்கின்றனர்.

50 எங்கே 1500 எங்கே..
சாதாரணமாக பச்சைகுத்துபவர்கள் ரூ.50 மட்டுமே அதிகபட்சமாக வசூலிக்கின்றனர். கல்மேடுவாசிகள் பலரும் இவ்வளவுதான் வாங்குகின்றனர். ஆனால், ஏ.சி. அறையில் டாட்டூ போடும் பார்லர்கள் ரூ.1500 வரை வாங்குகின்றன. அதுவும், மையின் நிறம் மாற மாற பணமும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

-ஸ்வாதி நாகராஜன், த்ரிநேத்ரா சேர்மன்  | தமிழில்: பாரதி ஆனந்த்

படங்கள்: ஆர்.அசோக் மற்றும் சிறப்பு ஏற்பாடு

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close