[X] Close

வாங்க... ஒரு காபி சாப்பிடலாம்! - இது காபியின் கதை


a-coffee-bean-is-a-seed-of-the-coffee

  • kamadenu
  • Posted: 22 May, 2018 14:02 pm
  • அ+ அ-

லதா ரகுநாதன்

 இப்போது நம் பழக்கம் நிறையவே மாறி விட்டன. கோக், பெப்சி, டேங், டீ என்று குடிக்கத்தொடங்கிவிட்டோம். ஆனால் சில வருடங்கள் முன்பு வரை வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால், நாம் கேட்கும் முதல் கேள்வி " காபி சாப்பிடறீங்களா?."

 உபசரிப்பிற்கு ஏற்ற ஒரு பானமாக எல்லோராலும் தேர்வு செய்யப்பட்டது இந்தக் காபி. என்னக் காரணத்தினாலோ டீ என்பது காபிக்கு ஒரு படி கீழேதான். ஹோட்டல்களில் விலைப்பட்டியலிலும் காபி விலை டீ விலைக்கு மேல் தான் இருக்கும். 
இப்படி நம்மில் ஊறிய காபியின் வரலாறு, இந்த பானத்தைப்போலவே நமக்கு இப்போதும் ஒரு புதுத் தெம்பு அளிக்கக்கூடியதுதான். 

கால்டி என்ற பெயருடைய ஆடு மேய்ப்பவர் ஒருவர், எதியோப்பியாவில் ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்துவந்தார். அகஸ்மாத்தாக அவர் ஆடுகள் இந்தக் காபி செடியின் இலைகளைச் சாப்பிட்டபின் குதித்தோடியதைப்பார்த்து காபி பானத்தைக் கண்டுபிடித்ததாக கதை உண்டு . இவர் காபிக்கொட்டைகளைக் கடித்துப்பார்த்து கொஞ்சம் உற்சாகம் ஏற்படுவதைக் கவனித்து , அங்கே உள்ள துறவியிடம் எடுத்துச்சென்றாராம். துறவி அவற்றைப்பிடுங்கி, பக்கத்தில் உள்ள நெருப்பில் போட, அப்போது அங்கே எழுந்த மணத்தில் அனைவரும் மயங்கி, வறுத்துக்கிடந்த கொட்டைகளை நெருப்பு அணைவதற்குத் தண்ணீரில் போட , காபி பானம் உருவானதாம்.ஆனால் இது வெறும் கட்டுக்கதை, உண்மையான கண்டுபிடிப்பு ஷேக் அபுல் ஹாசனின் சீடர் ஒமார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அப்த அல் கதிர் என்பவர் எழுதிவைத்துள்ள குறிப்புகள் மூலம் தெரியவருகிறது.  
இதன் பின்னணியை கேட்டால் நீங்கள் திகைத்துப்போய்விடுவீர்கள்.

ஒமார் ஒரு சூஃபி துறவி. தன் பிரார்த்தனை மூலமே வியாதியைக் குணப்படுத்தும் இவர் , ஒருமுறை நாடுகடத்தப்பட்டார். அவர் அனுப்பப்பட்டது ஒரு பாலைவனத்திற்கு. சாப்பிட எதுவும் கிடைக்காமல் பக்கத்தில் இருந்த ஒரு செடிப்புதரின் காய்களைப் பறித்து சாப்பிட்டாராம். கசப்பாக இருக்கவே அவற்றை நெருப்பில் வறுத்தாராம். அப்போது அவை கறுத்து கடினப்பட்டுப்போகவே , அதைச் சரிசெய்ய தண்ணீரில் கொதிக்க விட காபி பானம் பிறந்ததாம். குடித்துப்பார்த்து அவர் உடல் புத்துணர்வு கொள்ள , காபியை ஒரு அதிசய மருந்து என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினாராம். 
ஆக, காபி முதன் முதலில் மருந்தாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். நாளடைவில் ஒரு உற்சாக பானமாகி, பின் நம் அன்றாடத் தேவையாக மாறிவிட்டது. காபியும் போதைப் பொருள் போல் நம்மை அடிமைப்படுத்திவிடும். நமக்குத்தெரிந்த நிறையப் பேர் காலையில் காபி சாப்பிடவில்லை. அதனால் தலைவலியே வந்துவிட்டது என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். காபியில் உள்ள கஃபேன் எனும் மூலப்பொருளுக்கு இந்தப் போதை ஏற்றும் தன்மை உள்ளது. 

காபியின் முதல் ஏற்றுமதி கராச்சியிலிருந்து ஏமன் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. ஏமன் நாட்டில் கடவுள் வழிபாட்டில் கடவுள் பெயரைச்சொல்லும்போது உற்சாகம் ஏற்படுத்தும் பானமாக முதலில் காபியை உபயோகித்தார்கள். சூஃபிகள் இரவு கடவுள் வழிபாட்டின்போது தூக்கம் வராமல் இருப்பதற்குக் காபி குடித்தார்கள்.

மெதுவாக இந்தப் பானம் 1414 ல் மெக்காவிற்கும் , 1500 ல் எகிப்து நாட்டிற்கும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஊடுருவத் தொடங்கியது.  மெக்காவில் 1511ல் இந்தப் பானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சொல்லப்பட்ட காரணம் அதன் உற்சாகப்படுத்தும் தன்மை. அதேபோல் 1532 ல் எகிப்திய மன்னரும் காபிக்கு தடை விதித்தார். 


இந்தக் கால கட்டத்தில் காபி பானம் மெதுவாக இத்தாலி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தலை காட்டத்தொடங்கியது. 
எதியோப்பியாவின் தேவாலயங்களும் காபியை ஒரு முஸ்லீம் பானம் என்று கருதி அதைத்தடை செய்தது.பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசியில்தான் பல தேசங்களில் காபி மீதான தடைகள் நீங்கத்தொடங்கின. 
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் இப்படிப்பட்ட தடைகள் நீடித்திருந்தால் நாம் இப்போது பார்க்கும் நரசுஸ் காபியா பேஷ் பேஷ் விளம்பரத்தின் கீழ் காபி குடிப்பது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்ற சட்டப்பூர்வ எச்சரிக்கை கொடுத்திருப்போம். அப்பா அம்மாவிடம்... யாருக்கும் தெரியாமல் அண்ணா குடிக்கும் காபியைப் பற்றியும் கோள் சொல்லி இருப்பாள் தங்கை. 

இங்கிலாந்து நாட்டிற்குக் காபியின் அறிமுகம் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் நடந்தது.லண்டனில் உள்ள கார்ன்ஹில்லில் முதல் முதல் காபி ஹவுஸ் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது .1654ல் தொடங்கப்பட்ட க்வீன்ஸ் லேன் காபி ஹோஸ் இன்றும் இருக்கிறது. 

பிரான்ஸ் நாட்டில் கிங் லூயி XIV அவர்களின் காலமான 1646-1715ல் இந்தப் பானம் பால் சர்க்கரையுடன் கலக்கப்பட்டு அரேபிய மருத்துவத்தின் ஒரு மருந்தாக அறிமுகம் ஆனது. 

1673 ல் காஃபியாக அறிமுகமாகி பின் கஃபே என்று மாறுதல் அடைந்து தற்போது kaffee யாக ஜெர்மனியில் தொடர்கிறது 
அமெரிக்காவை பொறுத்தவரையில் 1773ல் பாஸ்டன் டீ பார்ட்டிக்குப் பின்னர் டீ அருந்துவது நாட்டுபற்று இல்லாத செயலாகக் கருதப்பட்டு காஃபிக்கு அனைவரும் மாறினர். 

இந்தியாவை பொறுத்தவரையில் பாபா புடன் என்ற துறவியால் 1670ல் அறிமுகம் செய்யப்பட்டு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மலைப்பரதேசங்களில் காபி தோட்டங்கள் அமைக்கத் தொடங்கினார்கள்.  
அவ்வளவுதான். காபி குடிப்பது அதிகரித்தது. உடனே காபியின் மதிப்பும் உயர்ந்தது. 1660ன் தொடக்கத்தில் லண்டனில் உள்ள காபி கிளப்புகள் சமூக கலாச்சார அமைப்புக்களாக அரும்பத்தொடங்கின.இங்கே முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. கலை சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.உயர் ஜாதியின் பானமாக காபி கருதப்பட்டது.இந்தப் பானம் நடுத்தர வர்க்கத்தின் பானமானது பதினெட்டாம் நூற்றாண்டுக்குப்பின்னரே.அமெரிக்கன் ரெவல்யூஷனும் பிரெஞ்ச் ரெவெல்யூஷனும் இதுபோல் ஒரு காபி க்ளப்பில்தான் திட்டமிடுதல் ஆரம்பம் ஆனதாம். 

இன்றும் நாம் இந்தப் பழக்கம் மாறாமல் மிகவும் உயர்ந்ததாக எண்ணப்படும் புத்தகங்களை “ The coffee Table Book “ என்று தான் சொல்கிறோம்.

இந்த பானத்தைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்ட பின் காபி வேண்டாம் ஏதாவது கூல் டிரிங்க் கொடுங்க என்று....

 இனி எப்படிச் சொல்வோம்?

   

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close