[X] Close

’சாகறதுக்குள்ளே செய்யணும்!’  - இப்படி தள்ளிப்போடாதீங்க!


ethaiyum-thalli-podatheenga

  • வி.ராம்ஜி
  • Posted: 17 May, 2018 16:07 pm
  • அ+ அ-

நம் எல்லோருக்குமான டெம்ப்ளேட்டான வசனம் ஒன்று உண்டு. ‘சாகறதுக்குள்ளே இதைச் செஞ்சிடணும்’, ‘சாகறதுக்குள்ளே அதை வாங்கிடணும்’... என்றெல்லாம் சொல்லாதவர்கள் எவரேனும் உண்டா என்ன?

சாவதற்குள் என்கிற வார்த்தைக்குப் பின்னே நம் ஆசைகளையும் அன்பையும் வைத்துக்கொண்டு, ஓடிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

‘வர்ற வியாழக்கிழமைக்குள்’, அடுத்த வாரத்திற்குள், இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். சில விஷயங்களைச் சொல்லும்போது, சாகறதுக்குள்ளே என்று பிரயோகப்படுத்தி டிக்ளேர் பண்ணுகிறோம். ஆனால், இப்படியெல்லாம் சொல்கிற வார்த்தைகள், நமக்கு எதிரானவர்களுக்கானது மட்டுமின்றி நமக்கு நாமே சொல்லிக்கொள்கிற சால்ஜாப்புகள்தான் என்பதை மிகச்சுலபமாக மறந்துவிடுகிறோம்.

ஒவ்வொரு முறை சொந்த ஊருக்குச் செல்லும்போதும் பஸ் ஸ்டாப்பை விட்டு இறங்கி தெருவுக்குள் செல்லும்போது, அங்கே சுவரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வரிசையாய் இருக்கும். இன்னாரின் பாட்டி இறந்துவிட்டார் என்று ஒரு போஸ்டர். இன்னாரின் தந்தை இறந்துவிட்டார் என்று போஸ்டர். முறுக்குமீசையுடன் நெற்றியில் விபூதிக்கீற்றுமாய் ஜம்மென்று இருக்கிறவர், ஏன் இறந்தார் எனும் கேள்வி வரும். தோற்றம் மறைவைப் பார்த்துவிட்டு, ‘அட 56 வயசுதான் ஆவுது. பாவம்யா’ என்று உள்ளே பரிதாபம் ஓடும்.

இறந்தவருக்கு என்னாயிற்று. உடம்புக்கு என்ன. சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லையா? சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் உணவில் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டதோ? உணவுக் கட்டுப்பாடு இருந்தும் கூட, உறவுகளின் கட்டுப்பெட்டித்தனம் நொய்மைப்படுத்திவிட்டதா மனசை?

அந்த முறுக்குமீசைக்கார தந்தையின் எண்ணம் அனைத்தும் நிறைவேறிவிட்டதா? பையன்கள் கரையேறிவிட்டார்களா? அவரின் மனைவி இந்த இழப்பை எப்படித் தாங்கியிருப்பார்? என்றெல்லாம் இறந்தவரின் வாழ்க்கைக்குப் பின்னே நினைப்பு தேடித்தேடி ஓடும்.

‘அவரோட மூத்த பொண்ணு லவ் மேரேஜ். ஜாதிவிட்டு ஜாதி கண்ணாலம் பண்ணிக்குச்சு. அந்த மக மேல அப்படி உசுரு அவருக்கு. அந்தப் பொண்ணைப் பாக்கணும்னு ஆசை அவருக்கு. அவருக்கு பேத்தியும் பொறந்திருக்கு. இப்ப ரெண்டுவயசு ஆச்சு. அந்தப் பொண்ணு மாசமா இருக்கும்போது ‘போய் ஒரு எட்டு பாத்துட்டு வருவோமா’ என்று சம்சாரத்துக்கிட்ட கேக்க, அந்த அம்மாவுக்கு சுர்ருன்னு கோபம் வந்துருச்சு. நெஞ்சில அடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிட்டா. ’சாகற வரைக்கும் அவ நம்ம வீட்டு வாசப்படி வரக்கூடாது. அவ மூஞ்சிலயும் நாம முழிக்கக் கூடாது’ன்னு சொல்லிட்டாப்ல. அப்ப உடைஞ்சி போன மனுஷந்தான்... இப்ப இறந்துபோனப்ப கைப்புள்ளையோட அந்தப் பொண்ணு வந்து நின்னுச்சு. ‘உங்கப்பாவைப் பாரும்மா’ன்னு அழுவுறா. ‘உன்னைப் பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டே இருந்தாரே. இப்படி பாக்காமலேயே போயிட்டாரே...’ன்னு கட்டிப்புடிச்சுக்கிட்டு அழுவுறா. இப்ப அழுது என்னங்க புண்ணியம்’ என்று டீக்கடைக்கார அண்ணன் வருந்திச் சொன்னார்.

இப்படித்தான் தும்பை விட்டு வால் பிடித்த கதையாய் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். சொல்லப்போனால், வாலையும் பிடிக்க முடியாத கதைதான் மரணம்.

எங்கள் ஊரில், பாசமலர் சிவாஜி சாவித்திரி போல் ஓர் அண்ணன் தங்கையைச் சொல்லுவார்கள். அண்ணன் பெங்களூருவில் இருந்தார். வருடத்துக்கு மூணுநாலு முறை அண்ணன் இங்கு வருவார். அதேபோல அந்த சகோதரியும் அண்ணனைப் பார்க்க அடிக்கடி சென்றுவிடுவார். ஒருமுறை தந்தி வந்தது. அண்ணனுக்கு மாரடைப்பு, சீரியஸ் என்று. உடனே கிளம்பிப் போனவர் பனிரெண்டு நாட்கள் அங்கு அண்ணனுடனேயே இருந்தார். ஆனால் 13வது நாள் அண்ணன் இறந்துவிட்டார். எல்லாக் காரியங்களும் முடிந்து எல்லோரும் அவரவர் ஊருக்குச் செல்ல, அந்தச் சகோதரியும் அவரின் வீட்டுக்கு வந்துவிட்டார். வந்தவர், அன்றிரவு தூங்கினார். விடிந்ததும் எழுந்திருக்கவே இல்லை. இறந்துபோனார். அவ்வளவு பாசம். அத்தனைப் பிரியம். இத்தனைக்கும் அவர்கள் ‘சாகறதுக்குள்ளே’ என்று எதையும் தள்ளிப்போடவே இல்லை.

ஆனால், பிரியங்களையும் அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் ஸேஃப்டி லாக்கரில் வைத்து பூட்டியே வைத்துக்கொண்டிருக்கிறோம். இறந்த பிறகு அவர்கள் பற்றி பேசுவதற்காக, பொருட்களை வாங்கி மூடைமூடையாக வைத்திருக்கிற மளிகைக்கடை அண்ணாச்சிகள் போல இதை ஸ்டாக் வைத்துக்கொண்டே இருக்கிறோம். ‘சாகறதுக்குள்ளே...’ என்கிற பட்டியலில், இந்த அன்புக்கான விஷயங்களை சொல்லிவிடவேண்டும் என்று நினைத்து செயல்பட்டால், நல்லது என்பது ஏனோ நமக்குப் புரிவதே இல்லை.

ஏதோவொரு வாய்க்காவரப்புத் தகராறு, நாய் துரத்திய சண்டை, மரத்தின் இலைகள் விழுந்து குப்பையாக்கியதான ஏற்பட்ட கசமுசா, கொடுத்த கடனைக் கேட்டதால் ஏற்பட்ட முட்டிக்கொள்ளல், கொடுத்த கடனைத் திருப்பித் தரவே தராததால் விளைந்த முறிவு, ஆபத்துக்கு உதவாத நிலை, ஆபத்தையே  உண்டாக்கியவர்களுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளுதல் என இம்சைகளுக்கும் ரணங்களுக்கும் அளவே இல்லை.

’உங்களிடம் இவர்களெல்லாம் மன்னிப்பு கேட்கவில்லையே... என்று வருந்துகிறீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் யாரிடமெல்லாம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இருக்கிறதோ, அவர்களிடம் உடனே மன்னிப்பைக் கேட்டுவிடுங்கள். அவர்கள் மன்னிப்பு கேட்கிறார்களோ இல்லையோ, மன்னிப்பு கேட்டுவிடுங்கள். நீங்கள் மனச்சிறையில் இருந்து விடுதலை அடைந்துவிடுவீர்கள்’ என்கிறார் இங்கிலாந்தின் தத்துவ ஞானி ஒருவர்.

’இங்கே சாகறவரைக்கும் என தள்ளிப்போடவேண்டிய ஒரே விஷயம்... சாவு மட்டும்தான்’ என்கிறார்கள் உளவியலாளர்கள். 

ஆகவே, இன்ஸ்டண்ட் உலகில், பாஸ்ட்புட் உலகில், வேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கிற உலகில், தடைகளையெல்லாம் உடைத்துக் கொண்டு பேசிவிடுங்கள். மன்னிப்பையோ நன்றியையோ சொல்லிவிடுங்கள்.

மரணம் வரை தள்ளிப்போடவேண்டாம். மரணத்தின் போல் பார்த்துக்கொள்ளலாம் என்றும் விட்டேத்தியாக இருக்கவேண்டாம்.

இதற்கு தொடர்பான கட்டுரையைப் படிக்க...

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close