[X] Close

”16 வயதில் அப்பாவை இழந்தார்; 32 வயதில் கணவரை இழந்தார்”: துயரத்திலும் கலங்காத தாய் குறித்து மகளின் நெகிழ்ச்சி பதிவு


this-daughter-s-post-about-her-mother-will-warm-your-heart

  • kamadenu
  • Posted: 16 May, 2018 17:31 pm
  • அ+ அ-

கடந்த 13-ம் தேதி அம்மாக்கள் தினத்தை கொண்டாடி முடித்திருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் எங்கெங்கிலும் அம்மாக்களின் மேன்மையை போற்றி எழுதப்பட்ட பதிவுகள் பரவிக் கிடக்கின்றன.

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ எனும் முகநூல் பக்கத்தில் தன் அம்மாவின் கடின உழைப்பு, பலம் குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். 16 வயதில் தந்தையையும், 32 வயதில் கணவரையும் இழந்து கடினப்பட்டு, தடைகளைக் களைந்து முழு பலத்துடன் தன்னை வளர்த்தது குறித்து தன்னுடைய வார்த்தைகளிலேயே அப்பெண் பகிர்ந்த பதிவின் தமிழாக்கம்:

“என் அம்மாவின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும்போது அம்மாவுக்கு வயது வெறும் 16 தான். அவருடைய அப்பா பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதில் இருந்ததால், நாளுக்கு நாள் உடல் அளவில் சோர்வடைந்தார். அதனால், தன் உடன் பிறந்தவர்களை காப்பாற்றும் பொறுப்பை என் அம்மாவே ஏற்றுக்கொண்டார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதி நேர வேலைக்கு சென்றார். அதன்மூலம், மாதம் ரூ.100 மட்டும் தான் சம்பளமாக கிடைத்தது. அதன் மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்துவார்.

பட்டப்படிப்பு முடித்த பிறகு அவருக்கு வைர வியாபாரி ஒருவரிடம் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் என்னுடைய அம்மா தன் தங்கையை படிக்க வைத்தார். தன் தங்கைக்கு திருமணமும் செய்து வைத்தார். அவர்களுக்கு சகோதரியாக, தாயாக, தோழியாக என் அம்மா இருந்தார்.

அவருக்கு திருமணமான சில வருடங்களில் நான் பிறந்தேன். ஆனால், 1999-ம் ஆண்டு என்னுடைய அப்பாவை ஒரு விபத்தில் நாங்கள் இழந்து விட்டோம். 32 வயதில் என் அம்மா கணவரை இழந்தவரானார். அதன் பின் அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு எல்லாவற்றிலும் சிறந்ததொரு வாழ்க்கையை அமைக்க அவர் தவறவில்லை.

அப்பா இறந்து 6 வருடங்கள் கழித்து எங்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு நாங்கள் குடிபெயர்ந்தோம். எல்லா ஆவணங்கள், கடன், எல்லா பிரச்சினைகளையும் அம்மாவே சரிசெய்து முடித்தார். யாராலும் தடுத்து நிறுத்த முடியாதவராக அம்மா இருந்தார். பணிபுரியும் சுதந்திரமான பெண்ணான என் அம்மா, என்னை முன்னிறுத்துவதற்கான வழிகளை எப்போதும் கண்டறிந்து கொண்டே இருந்தார்.

நான் சிறு பிள்ளையாக இருந்தபோது தீபாவளி பண்டிகையின் போது என் அம்மா 10 நாட்கள் விடுமுறை எடுத்தது நினைவிருக்கிறது. அந்த 10 நாட்களும் நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருப்போம். திண்பண்டங்கள், திரைப்படங்கள், கட்டித் தழுவுதல் என மகிழ்ச்சியாக நாட்களைக் கழிப்போம். என்னை சுதந்திரமாக இருக்குமாறு அம்மா அறிவுறுத்துவார்.

ஆனால், நான் அவருடனேயே பிணைந்து கொண்டிருப்பேன். எங்களுடைய பிணைப்பு உடைக்க முடியாதது. அவர் கண்டிப்பானவர். பழமையான வழக்கங்களைக் கொண்டிருப்பவர். நாங்கள் ஒன்றாக இருக்கும்போது எங்கள் வித்தியாசங்களையும் மறந்து விடுவோம். என்னுடைய சிறந்த தோழி அம்மா தான். என் கதையின் ஹீரோ அம்மா தான்.

உனக்கு எங்கே இருந்து இவ்வளவு பலம் கிடைத்தது என ஒருமுறை கேட்ட போது, "இந்த உலகமும், கடவுளும் என்னை வழிநடத்தியுள்ளனர். ஏனெனில் நான் எப்படியும் உனக்கு தாயாகவே இருந்திருப்பேன்"  என்று கூறினார். பலராலும் கனவு காண முடியாததொரு வாழ்க்கையை அம்மா எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். இவை எல்லாவற்றையும் அவர் எப்படி கையாள்கிறார் என எனக்கு தெரியவில்லை. நாள் முழுவதும் வேலை பார்க்கிறார். ஒரு குழந்தையை அவர் மட்டுமே வளர்த்திருக்கிறார். அவர் செய்ததில் பாதியை நான் அடைந்தாலும் கூட நான் ஏதோ சரியாக செய்திருக்கிறேன் என்று அர்த்தம்”

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close