[X] Close

வென்றால் ஒரு முடிவு; தோற்றால் ஒரு வாய்ப்பு: தற்கொலை எதற்குமே தீர்வல்ல!


suicide-not-a-solution

  • kamadenu
  • Posted: 16 May, 2018 09:41 am
  • அ+ அ-

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. முன்புபோல் தேர்வு முடிவுகளை வெளியிட தொலைக்காட்சிகள் முந்திக் கொண்டு பிரேக்கிங் நியூஸ் போடத் தேவையில்லை. ஏனெனில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. இதனால், மாணவர்கள் தத்தம் வீட்டிலேயே சற்றும் பரபரப்பின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு முதலே முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் என்றெல்லாம் பட்டியலிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் பள்ளிகளும் தேர்வு முடிவுகளை வைத்து விளம்பரங்கள் செய்யக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

வெற்றியைத் தீர்மாணிப்பது தேர்வு அல்ல..
நம் வெற்றியைத் தீர்மாணிப்பது தேர்வு முடிவுகள் மட்டுமல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும். மேலும், பிளஸ் 2 தேர்வில் தோற்றுவிட்டால் மீண்டும் அதனை எழுதி தேர்ச்சி பெற அரசாங்கமே வாய்ப்பு அளிக்கிறது.
அப்படி இருக்கும்போது எல்லாமே முடிந்துவிட்டதாக தற்கொலை செய்துகொள்ளத் தேவையில்லை.

பாடம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்..
பொதுவாக தற்கொலை எண்ணங்கள் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத மன வலிமையற்ற குழந்தைகளுக்குத்தான் எழுகிறது. மனவலிமையை பெற்றோர்தான் பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.
பாசத்திற்கும் அதீத அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர்கள் உணர வேண்டும். பாசமுள்ள தாய் தந்தையினர் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து செயல்படுவர். அதீத அன்புள்ள பெற்றோர், குழந்தைகளின் வேண்டுதலுக்கு ஏற்ப செயல்படுவர். அதனால், எதை வேண்டுமானாலும் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் சிறு வயது முதலே குழந்தைகளிடம் தோன்றுகிறது.

இந்த எண்ணம் குழந்தைகளின் மன வலிமையையும் போராடும் குணத்தையும் சிதைக்கிறது. மன வலிமையற்ற குழந்தைகளே வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து, இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கின்றனர். 
பொதுவாக பெற்றோர் ஒரு குழந்தைக்கு அத்தியாவசியமாக தர வேண்டியது தன்னம்பிக்கை, பாசம், சுதந்திரம், பிரச்சினையை எதிர்கொள்ளும் தைரியம், இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொடுத்தல், நன்நடத்தை மற்றும் சமூக அக்கறை. ஒரு குழந்தைக்கு எது தேவையில்லை என்பதை ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும்.

உறவினர்களும் ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல, குழந்தைகளின் தேவையை உணர்ந்து செயல்பட்டால், குழந்தைகள் யாரிடமும் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கமாட்டார்கள்.
ஆனாலும் ஒரு சில மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு முடிவு எதிர்மறையாக இருந்தால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகக் கருதி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

துயரமான நேரங்களில் வாழ்க்கையை நோக்கி சவால் விடுங்கள், வென்றால் ஒரு முடிவு, தோற்றால் ஒரு வாய்ப்பு. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள், நடக்கவில்லை என்றால் மாறும்வரை போராடு. போராட்ட குணம் மட்டுமே நாம் அனைவருக்கும் நம் முன்னோர் விட்டுச்சென்ற ஒரே சொத்து. 

104-ஐ தொடர்பு கொள்ளலாம்..

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 104 சேவை மையத்தில் உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆலோசனை ஜனவரி மாதமே தொடங்கிவிடுகிறது. தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி, ஆரோக்கியமான உணவு முறை என்ன, எப்போது தூங்கவேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், மின்னணு சாதனங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது எப்படி போன்ற பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

தேர்வு நடைபெறும் காலகட்டத்தில் இரண்டாம் கட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சில மாணவர்கள் ஒரு தேர்வை ஒழுங்காக எழுதாவிட்டால் முடங்கிப் போய் அடுத்தடுத்த தேர்வுகளையும் சரியாக எதிர்கொள்ளாமல் போய்விடுவார்கள். அப்படியான மனக்குழப்பத்தில் தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆலோசனைகளை வழங்குகிறோம்.

மூன்றாம் கட்டம்தான் மிகவும் முக்கியமானது. தேர்வு முடிவு வெளியாகும் முந்தைய நாள். தேர்வு முடிவு வெளியாகும் நாள் மற்றும் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து மூன்று தினங்கள் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் 7 உளவியல் ஆலோசகர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பர். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றனர்.

மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்துவிடுபட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நம் வெற்றியைத் தீர்மாணிப்பது தேர்வு முடிவுகள் மட்டுமல்ல.

ஸ்நேகா உதவி மையம்..

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை நிச்சயம் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினால் யாராக இருந்தாலும் மாநில உதவி மையமான 104- உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது 'ஸ்நேகா' தற்கொலை தடுப்பு மையத்தை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close