[X] Close

உங்க வீட்ல ஊஞ்சல் இருக்கா? ஊஞ்சல் ஆசைகள்!


unjal-aasaigal

  • வி.ராம்ஜி
  • Posted: 14 May, 2018 11:48 am
  • அ+ அ-

கிரிக்கெட் ஆடுவதற்கு சிலபேருக்கு பிடிக்கும். வாலிபால் விளையாடுவார்கள் சிலர். கேரம்போர்டு ஆடுவதில் நாட்டம் இருப்பவர்களும் உண்டு. செஸ் விளையாடுகிறவர்களும் இருக்கிறர்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த ஆட்டம் என்றால் அது ஊஞ்சலாட்டமாகத்தான் இருக்கும். ஊஞ்சல்... சொல்லும் போதே, ஊஞ்சலில் நடுநாயகமாக உட்கார்ந்துகொள்கிறது மனசு.

ஊஞ்சல் என்பது தூளியின் இன்னொரு சாயல். அதனால்தானோ என்னவோ, ஊஞ்சலாடும் போதெல்லாம் குழந்தையாகிப் போய்விடுகிறோம். குழந்தைகளுக்கு கவலையோ துக்கமோ, போட்டியோ பொறாமையோ, வலியோ அவமானமோ எதுவுமில்லை. ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறபோதெல்லாம், இவை அனைத்தும் தொலைந்து போவதை, ஊஞ்சலாடும் போதும் ஆடி முடித்த பிறகும் உணர்ந்திருக்கிறீர்களா?

இன்றைக்கும் கிராமங்களில், மரங்களின் கிளைகளில் கயிறு கட்டித் தொங்கவிட்டு, அதில் ஒருதுணியையோ வண்டியின் டயரையோ வைத்து அமர்ந்து, ஊஞ்சலாடும் பொடிசுகளைப் பார்க்கும்போது, அந்தப் பசங்களை இறக்கிவிட்டு, அதில் ஏறி உட்கார்ந்து, நம் பால்யத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிடுகிறோம்.

 எல்லோருக்குள்ளும் ஆடிக்கொண்டிருக்கிறது ஊஞ்சல் நினைவுகள். செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்று ஊஞ்சலாடுகிற ஸ்ரீதேவி, விண்ணிலிருந்து இறங்கிய தேவதையாகத் தெரிந்தார். சிவாஜியும் உஷாநந்தினியும் ஆகாயப்பந்தலில் பொன்னூஞ்சல் ஆடுதம்மா என்று பாடியது போலவே, அவரின் மகன் பிரபுவும் என்னவென்று சொல்வதம்மா என்று ராஜகுமாரனில் ஆடுவார். ஆட்டுவார்.

திருமணம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேக தருணங்களில் மணமக்களை, தம்பதியை ஊஞ்சலில் அமரச் செய்து மெல்ல ஆட்டியபடி, ‘கெளரி கல்யாணம் வைபோகமே...சீதா கல்யாணம் வைபோகமே...’ என்று பாடுவதையும் பாலும்பழமும் கொடுப்பதையும் நேரடியாகவும் திரைப்படம் மூலமாகவும் பார்த்திருப்போம். அப்போது எல்லோருக்குள்ளும் சட்டென்று வந்துவிடும் ஊஞ்சலாடுகிற ஆசை.

அந்தக் காலத்தில் பல வீடுகளில், ஊஞ்சலும் ஊஞ்சலில் மணைப்பலகையும் ஒரு பனையோலை விசிறியும் இருக்கும். ஊஞ்சலில் உட்கார்ந்து கொள்ளலாம். அதேசமயம், தேவைப்பட்டால், ஊஞ்சலில், மணைப்பலகையில் தலைவைத்து, விசிறிக்கொண்டே, ஆடிக்கொண்டே அப்படியே தூங்கிப் போகலாம். தூக்கம் என்பது எப்படி மிகப்பெரிய விடுதலையோ... ஊஞ்சலாடுவதும் அப்படியான விடுதலை என்பதை, ரிலாக்ஸ் என்பதை, மனசு லேசாகிவிடும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள் பெரியவர்கள். அதனால்தான், அந்தக் காலங்களில் வீடுகளில் ஊஞ்சல் வைத்தார்கள்.

ஊஞ்சல் ஆடுவதை விடுங்கள். வீட்டில் ஊஞ்சல் இருப்பதாலேயே மனக் குழப்பங்களும் மனக் கலக்கங்களும் நிவர்த்தியாகிவிடுகின்றன என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். எவ்வளவு பெரிய வலியும் வேதனையும் இருந்தாலும் கலங்கித் தவித்து கதறுகிற நிலை இருந்தாலும், ஊஞ்சலில் ஒரு பத்துநிமிடம் அமர்ந்து ஆடினாலே... எல்லா வலிகளுக்கும் அதுவே மருந்து. அனைத்து வேதனைகளுக்கும் அதுவே தீர்வு என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். 

எழுத்தாளர் ஜெயகாந்தன், ஒருநாவலில், ‘அந்தப் பெரியவர் ஊஞ்சலில் இருந்து இறங்கி, நடந்து உள்ளே சென்றார். ஆளில்லாத ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது’ என்று எழுதியிருப்பார். அந்தப் பெரியவரையும் அவர் இறங்கி நடப்பதையும் அதன் பிறகு அந்த ஊஞ்சல் எவரும் இல்லாமலேயே ஆடிக்கொண்டிருப்பதையும் சட்டென்று நமக்குள் கடத்திவிடுகிற எழுத்து, ஜெயகாந்தனின் ஸ்டைல்.

அதேசமயம் ஜெயகாந்தனுக்குள் அந்த ஊஞ்சல், ஆடிக்கொண்டே இருந்தது போல! அவரே ஒருமுறை சொன்னார்... ‘அந்தக் கதையில் இப்படி எழுதியிருந்தது, மனதுக்குள் தங்கிவிட்டது. பிறகொரு முறை, ஒரு கதை எழுதும் போது, ‘ஆடும் நாற்காலிகள் ஆடிக்கொண்டிருக்கின்றன’ என்று தலைப்பு வைத்தேன். அப்படி தலைப்பு வைக்க, ஊஞ்சலின் பாதிப்பே காரணம்’ என்று குறிப்பிட்டார்.

கம்ப்யூட்டரையும் விஞ்ஞானத்தையும் எடுத்துக்கொண்டு எழுதும் சுஜாதா கூட, ஊஞ்சல் குறித்து ஒரு சிறுகதை எழுதியிருப்பார். படித்து முடிக்கும் போது, ஊஞ்சல் நம்மை அசைத்துப்போட்டுவிடும்.

சிறுவயதில், வீட்டுக்கு எதிர் வரிசையில், சரோஜினி அத்தை வீடு இருந்தது. அத்தை என்றால் அத்தையில்லை. அப்படி உறவு சொல்லி அழைத்த காலம் இப்போது இல்லை. அவர்கள் வீட்டில், நல்ல விசாலமான மர ஊஞ்சல் உண்டு. அந்த ஊஞ்சலில் ஆடுவதற்காகவே அவர்கள் வீட்டுக்குச் செல்வேன். என்னைவிட ஆறேழு வயது அதிகம் கொண்ட அண்ணன் இருந்ததால் அவரிடம் ஒட்டமுடியாது. அதேபோல் என்னைவிட ஆறேழு வயது குறைவாக இருந்த அவரின் தம்பியோ என்னைவிட்டுவிட்டு, அவன் வயதுகொண்டவர்களிடம் விளையாடுவான். எனக்கு ஊஞ்சல் சிநேகிதமானது. எப்போது போனாலும் ஊஞ்சலாடுவதற்குத் தடையேதும் சொல்லமாட்டாள் சரோஜினி அத்தை.

பொருளாதாரப் பேராசிரியை நல்ல தோழி. அவர்களின் வீட்டுக்குப் போனதும் ஊஞ்சலில் பரத்தி வைக்கப்பட்டிருக்கிற, பேப்பர், புத்தகங்களையும், துணிமணிகளையும் இன்ன பிற பொருட்களையும் எடுத்து ஒழுங்குபடுத்தி உட்கார வைப்பார்கள். அரைமணி நேரப் பேச்சு, ஆறுமணி நேரமாகவும் நீடித்தது. அதற்கு பேச்சும் கருத்தும் மட்டுமின்றி ஊஞ்சலும் மிகப்பெரிய காரணமாக இருந்தது.

இப்போது நிறைய பள்ளிகளிலும் பூங்காங்களிலும் ஊஞ்சல் வைப்பது அதிகரித்துவிட்டன. ஆனால் என்ன... முப்பது ஐம்பது குழந்தைகள் சேருகிற இடத்தில் இரண்டே இரண்டு ஊஞ்சல்தான் இருக்கும். அதுவும் தனித்தனியே ஒருவர் மட்டும் உட்காரும்படி செய்திருப்பார்கள். அது இரும்பு ஊஞ்சல். ஆகவே, காலை பத்துமணிக்கு மேல் மதியம் மூணுநாலு மணி வரை உட்காரமுடியாது. அடிக்கிற வெயிலுக்கு பின்னே பழுக்கக்காய்ச்சி சூடு வைத்தது போலாகிவிடும். ஆனாலும் அந்தத் தருணங்களில், ஊஞ்சலுக்கு அருகே நின்று கொண்டு, குழந்தைகள் ஊஞ்சலை மெல்ல ஆட்டுவார்கள். அது முன்னேயும் பின்னேயும் சென்றுவரும். பிறகு வேகவேகமாக ஆட்ட, அது இன்னும் வேகமெடுக்கும். ஆக, ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது ஒரு சுகம். ஊஞ்சலை யாருமே இல்லாமல் ஆட்டுவிப்பது இன்னொரு விதமான சந்தோஷம்.

கடந்த 20 வருடங்களில், வீடுகள் அதிகரித்துவிட்டன. தனித்தனியான வீடுகள் குறைந்துவிட்டன. தாமே இடம் வாங்கி, தாமே நின்று பார்த்துப்பார்த்து கட்டுகிற நிலை இப்போது பெரும்பாலும் மாறிவிட்டது. அடுக்குமாடி குடியிருப்புகள் வரத்தொடங்கியதுமே, நடு ஹாலில் மர ஊஞ்சல் என்பதும் குறைந்துவிட்டன. கூட்டுக்குடும்பம் குலைந்து தனிக்குடித்தனம் அதிகரித்தது போல, ஊஞ்சலிலும் தனிக்குடித்தன அமைப்பு வந்துவிட்டது. அதாவது, மர ஊஞ்சல் குறைந்து, மூங்கில் ஊஞ்சல்கள் விற்பனைக்கு வரத்தொடங்கிவிட்டன. அவ்வளவு ஏன்.. நைலான் நரம்புகளில் கூட விற்பனைக்கு வந்துவிட்டன. அது ஊஞ்சலாகவும் சொல்லலாம். தொட்டில் என்றும் சொல்லலாம். மரத்தில் கட்டி, ஆடுவார்கள். ஆனாலும் இந்த நைலான் ஊஞ்சல்... தயிர்சாதத்துக்கு அப்பளம் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது மாதிரி, அவ்வளவு சுவாரஸ்யமில்லை என்பதே பலரின் நினைப்பு. 

சில வீடுகளில், நடுஹாலில் மூங்கில் ஊஞ்சல், கோட் ஸ்டாண்டில் சட்டை தொங்குவது போல் தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல வீடுகளில், பால்கனி ஏரியாவில், தெருவைப் பார்த்தபடி, ‘யாராவது வந்து உட்கார்ந்து ஆடக்கூடாதா...’ எனும் ஏக்கத்துடன் அங்கே ஊஞ்சல் இருக்கின்றன. பால்கனியில் அமர்ந்து ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருப்பதற்கோ புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதற்கோ நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், மக்கள்.

‘’ஊஞ்சல் வாங்கணும், ஆடணும்னு ரொம்ப வருஷத்து ஆசை. வாங்கியாச்சு. ஆனா உக்கார நேரமில்லாம ஓடிட்டிருக்கோம். பசங்களை படிக்கவைக்கணுமே...’ என்று சொல்பவர்களுக்குள்ளே ஊசலாட்ட வாழ்வின் ஊஞ்சல் தொலைத்த வருத்தங்கள் அழுத்திக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.  

நடுஹாலில் ஊஞ்சல். மர ஊஞ்சல். இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து கொள்ளலாம். ஒருவர் கால்நீட்டி படுத்துக்கொள்ளலாம். அந்த மரங்களில் சில வேலைப்பாடுகள் செய்து, பாலீஷ் போட்டிருப்பார்கள். அது இன்னும் அழகு. சுவருக்கும் ஊஞ்சலுக்கும் பந்தப்பிணைப்பைத் தருகிற உறுதியான சங்கிலிகள், ஆங்காங்கே பல வேலைப்பாடுகளுடன் அசத்துகின்றன. சங்கிலியின் ஒவ்வொரு அடியின்போதும் யானையோ குதிரையோ அகல்விளக்கோ ஏதேனும் இடம்பெற்று, அசத்துவதைப் பார்க்கலாம்.

நூலகம் பெருமாள் எனும் அன்பர் இருக்கிறார். இலக்கிய தாகம் கொண்டவர். எழுத்தாளர்களை மதிப்பவர். அவர் வீட்டில் இருக்கிறது அற்புதமான ஊஞ்சல்.

அவர், எழுத்தாளர்களை அழைத்து, வருடத்துக்கு மூன்று நான்கு முறை விழா நடத்துகிறார். அந்த விழாவுக்கு எழுத்தாளர் தன் வாழ்க்கைத்துணையுடன் (தம்பதி சமேதராக) வரவேண்டும். கூடவே, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என எத்தனைபேரை வேண்டுமானாலும் அழைத்துவரலாம்.

விழாவின் முக்கிய அம்சம்... அந்த எழுத்தாளரை, வாழ்க்கைத்துணையுடன் ஊஞ்சலில் அமரச் சொல்லி, மெல்லியதாக ஆட்டியபடி, விழாவை நடத்துவார். அவர்களும் விழா முடியும்வரை, ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டே பேசுவார்கள். பேசுவதைக் கேட்பார்கள். இதற்கு ஊஞ்சல் உத்ஸவம் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

விழா முடியும்போது, தடபுடலாக நடக்கும் விருந்து, கல்யாணச் சாப்பாட்டுக்கு இணையானது. அவருக்கு ஊஞ்சல் மீதும் ஆசை. எழுத்தாளர்கள் மீதும் மரியாதை. இரண்டையும் இணைத்துப்பிணைத்துவிட்டார் ஊஞ்சல் உத்ஸவத்தின் மூலமாக!  

வீடு வாங்கணும், காரு வாங்கணும், ஏஸி வாங்கணும், வாஷிங் மிஷினு வாங்கணும், டபுள் டோர் பிரிட்ஜ் வாங்கணும், சோபா வாங்கணும் என்றெல்லாம் ஆசைப்படுகிறவர்கள், மர ஊஞ்சல் வாங்கணும் என்று ஆசைப்படுவதே இல்லை.

ஊஞ்சல் என்பது பால்யகால ஆசை. மற்றவையெல்லாம் இப்போதைய காலகட்டத்தின் தேவைகள். பால்ய நண்பர்கள், பால்யத்தின் இடங்கள், பால்யத்தின் தோற்றுப்போன காதல்கள், பால்யத்தின் ஆசைகள்... என சகலத்தையும் மறந்து, சுலபமாக இப்போதைய உலகாயத ஓட்டத்துக்குள் பொருத்திக்கொண்டுவிட்டோம்.

ஒன்றே ஒன்று... மனசைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் மனசுக்குள் இப்போதும் ஆடிக்கொண்டிருக்கிறதுதானே... ஊஞ்சலும் ஊஞ்சல் மீதான ஆசைகளும்!

உங்களுக்கும் ஊஞ்சலுக்குமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close