[X] Close

என் கணவருக்குப் பின்புதான் நான் இறக்க வேண்டும்”:அன்பு தம்பதியரின் நெகிழ்ச்சியான 75 ஆண்டு மண வாழ்க்கை


in-love-for-75-years-this-couple-restores-our-faith-in-marriage

  • kamadenu
  • Posted: 09 May, 2018 17:13 pm
  • அ+ அ-

திருமணம் செய்துகொள்வது கஷ்டம் அல்ல. ஆனால், திருமணம் செய்த முதல் நாளன்று எவ்வளவு அன்பை நம் வாழ்க்கைத் துணை மேல் கொண்டிருந்தோமோ, அவ்வளவு அன்பு வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். வாழ்க்கையின் சுக, துக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அனைத்தையும் சேர்ந்தே அனுபவிக்க வேண்டும். அதே அன்புடன் இருப்பதற்கு பொறுமையும், அர்ப்பணிப்பும் தேவை. 

அப்படி, திருமணமாகி 75 ஆண்டுகளாக மாறாத அன்புடன் இருக்கும் மோசிர் (105) மற்றும் அவரது மனைவி (87) இருவரின் திருமண வாழ்க்கையை ஜிஎம்பி ஆகாஷ் என்ற புகைப்பட கலைஞர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மோசிரின் மனைவி தன் கணவர் மீதான அன்பு குறித்து பகிர்ந்துகொண்டது பதிவிடப்பட்டுள்ளது.

“நான் அவரை திருமணம் செய்து கொள்ளும்போது எனக்கு வயது 12. குதிரை சாரட் வண்டியில் வந்து அவர் என்னை திருமணம் செய்துகொண்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ன்னுடைய ஒட்டுமொத்த கிராமத்தில் இப்படி குதிரை வண்டியில் வந்து யாரும் அந்த காலத்தில் திருமணம் செய்துகொண்டது இல்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமையாக இருந்தது. அப்போது அவர் அந்த குதிரை வண்டிக்கு செலவு செய்த பணத்தின் மூலம் அக்காலத்தில் பெரிய விவசாய நிலமே வாங்கிவிடலாம்”, என பெருமிதம் பொங்க கூறுகிறார் மோசிரின் மனைவி.

மோசிர் எப்பொதும் தன்னுடைய மனைவியை ‘அழகிய மனைவி’ என குறிப்பிடப்படும் வார்த்தையாலேயே அழைக்கிறார். மோசிர் கருப்பு நிறம் கொண்டவர் என்பதால், அவருடைய மனைவியின் நிறத்துடன் ஒப்பிட்டு அவர்களுடைய கிராம மக்கள் கேலி பேசியுள்ளனர். “என் கணவரை பார்த்து ஊர் மக்கள் ‘முத்துக்களால் ஆன நெக்லஸை அணிந்த கருப்பு கல்’ என கிண்டல் பேசினர். இந்த கேலிகளை அவர் கண்டுகொள்ளவே மாட்டார். சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாகவே இருப்பார். எப்போதும் என்னிடம் ‘பார், எவ்வளவு அழகாய் இருக்கிறாய் நீ’ என கூறிக்கொண்டே இருப்பார்”, என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் மோசிரின் மனைவி.

75 ஆண்டுகளாக இந்த அன்புமிகு தம்பதிகள் பிரியவே இல்லை. ஒருமுறை மோசிரின் மனைவி, மூத்த மகனை பார்ப்பதற்காக மோசிரை இளைய மகனின் வீட்டில் விட்டுவிட்டு வெளியூருக்கு சென்றிருக்கிறார். அப்போது கூட, ‘எங்கே என் மனைவி? அவள் தொடர்புகொண்டாளா? என கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் மோசிர்.

“நான் இல்லாவிட்டால் அவர் பைத்தியமாகிவிடுவார். இந்த திருமண வாழ்க்கையில் நாங்கள் பிரிவென்பதை சந்திக்கவே இல்லை. காலையில் ஒன்றாக எழுவோம். ஒன்றாகவே தொழுவோம். நான் சமைக்காவிட்டால் அவரால் சாப்பிடவே முடியாது. நாங்கள் சாப்பிடும்போது இருப்பதிலேயே பெரிய மீன் துண்டை எனக்குக் கொடுத்து விடுவார்.

எங்களால் அதிக காலம் இனி ஒன்றாக இருக்க முடியாது. எங்களுடைய கடைசி காலத்தை நாங்கள் கழித்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு முன்னால் நான் இறக்கக் கூடாது. நான் இல்லாவிட்டால் அவர் தன்னுடைய ‘அழகிய மனைவியை’ எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டே இருப்பார். அவருக்குப் பின்னால் தான் நான் இறக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” இதுதான் மோசிர் மனைவியின் விருப்பமாக உள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close