[X] Close

உள்ளங்கையில் சாதம் ப்ளஸ் அன்பு!   உங்கள் வீட்டில் உண்டா இந்த பரிமாறல்?


ullankaiyil-saadham-plus-anbu

  • வி.ராம்ஜி
  • Posted: 07 May, 2018 15:01 pm
  • அ+ அ-

பகிர்ந்து உண்பதும் சேர்ந்து உண்பதும் பரமசுகம். சுழன்றடித்து ஓடிக்கொண்டிருக்கிற இந்த உலக வாழ்க்கையில், சேர்ந்து சாப்பிடுவதற்கெல்லாம் நேரமே இல்லை. அவ்வளவு ஏன்... சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

சமைப்பது முக்கியம். அதைவிட பரிமாறுவது ரொம்ப ரொம்ப முக்கியம்.

கூட்டுக்குடும்பம் என்றால், இன்றைய தலைமுறையினருக்கு பதில் சொல்லமுடியாத கேள்விதான். ‘அதெப்படி கூட்டுக்குள்ளே எல்லாரும் இருக்கமுடியும். நாமளே இருக்கமுடியாதே’ என்று சொல்லி நக்கலடிப்பார்கள், பசங்க.

அப்பா அம்மா, அண்ணா, தம்பி, அண்ணாவின் மனைவி குழந்தைகள், தம்பியின் மனைவியின் குழந்தைகள், சித்தப்பா மற்றும் அவரின் மனைவி, குழந்தைகள் என்று சிறிய வீடோ பெரியவீடோ... அங்கே மிகப்பெரிய உறவுக்கூட்டம் இருக்கும். அநேகமாக, இப்படியொரு கூட்டுக்குடும்பம் சுந்தர் சி படங்களிலும் ஹரியின் படங்களிலும் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

இந்தக் குடும்பங்களில், பையன்கள் தலையெடுத்து, பட்டணங்களில் வெளியூர்களுக்குப் போய் வேலை பார்க்கத் தொடங்கினார்கள். அதேபோல் வீட்டுப் பெண்களை, வேறொரு ஊரில் திருமணம் செய்துகொடுத்தார்கள். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்று சொல்லப்படும் விடுமுறையின் போது, எல்லோரும் சொந்த ஊரில், தாத்தாபாட்டி வீட்டில் தஞ்சம் புகுவார்கள்.

வீட்டில் பாட்டியோ, அத்தையோ... எல்லாக்குழந்தைகளுக்குமாகச் சேர்த்து, சாதமும் சாம்பாரும் கூடவே நெய்யும் விட்டு, நன்றாகப் பிசைவார்கள். ‘நல்லா நொறுங்கப் பிசைஞ்சு கொடு’ என்று சமையற்கட்டில் இருந்தோ திண்ணையில் விசிறியபடியோ ஆர்டர் வரும்.

மணக்கமணக்க இருக்கிற சாம்பார் சாதத்தை எடுத்து, வரிசைக்கிரமமாக குழந்தைகளின் கையில் கொடுத்துக் கொண்டே, ஏதேனும் கதை சொல்லுவார்கள்.

‘உங்க அப்பாவுக்கு நெத்தில சின்னதா ஒரு தழும்பு இருக்கே. ஏன் தெரியுமா’ என்று ஆரம்பித்து, அந்தக்கதையை சாம்பார் சாதம் முடியும் வரைக்கும் சொல்லுவார்கள். அடுத்து ரசம் சாதத்தை நெய்விட்டுப் பிசைந்து, இன்னொருவரின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘நல்லாச் சாப்பிட்டு, வெயில்ல விளையாடாம, சத்தம் போடாம இருந்தா, சாயந்திரம் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போவேன். உங்க அம்மாவை நாய் துரத்தி விழுந்த இடத்தைக் காட்டுவேன்’ என்று சொல்லிச் சொல்லியே, பேசிப்பேசியே குழந்தைகளுக்குத் தருவார்கள்.

ஒரு குழந்தைக்கு உள்ளங்கையில் உணவைக்கொடுத்துவிட்டு, அடுத்து உள்ள ஐந்தாறு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு வருகிற போது, இந்த முதல் குழந்தை நன்றாக மென்றுச் சாப்பிட்டிருக்கும். தவிர, நல்ல இடைவெளி இருப்பதால், சாப்பிட்டதும் தெரியாது; பசிக்கவும் செய்யும். மேலும் கதை கேட்கிற ஜோரில், எதுவுமே தெரியாது.

ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் என்சைம்கள் சுரக்கின்றன. அது உணவுடன் சேர்ந்து கலந்து உள்ளே செல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஓர் அந்நியோன்யம் பிறக்கிறது. அந்த அந்நியோன்யமானது, அன்பாகவும் பாசமாகவும் பிரியமாகவும் நேசமாகவும் மதிப்பாகவும் மரியாதையாகவும் வெளிப்படுகிறது.

ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்கிறோமே... ஒரு குழந்தையின் கன்னம் கிள்ளுகிறோமே... நன்றாக மார்க் எடுத்த பையனையோ பெண்ணோ, முதுகில் தட்டுகிறோமே... எல்லாமே நல்ல அதிர்வுகளை அவர்களுக்குத் தருகின்றன.

முக்கியமாக, பகிர்ந்து சாப்பிடுகிற எண்ணமும் கதை கேட்கிற பொறுமையும் நன்றாக நின்று நிதானித்துச் சாப்பிடுகிற லாகவமும், உறவுகள் மீது பிரிய நேச மதிப்பு மரியாதைகளும் கூடும் என்பதை எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

இன்றைக்கு இட்லியைக் கூட மிகவும் கஷ்டப்பட்டு, பிரயத்தனப்பட்டு ஸ்பூனில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். எல்லாமே ஸ்பூனுக்கும் நமக்குமான பந்தங்களாகிவிட்டன.

இயக்குநர் பாலுமகேந்திரா, அம்மாவின் சமையல் ஏன் ருசியாக இருக்கிறது தெரியுமா என்று கேள்வி கேட்டு, அவரே பதிலும் சொன்னார். அதாவது, ‘யாருக்கு சமைக்கிறோம் என்பதையெல்லாம் பார்த்துப் பார்த்து அம்மா சமைக்கிறாள்’ என்றார் பாலுமகேந்திரா.

இந்தப் பயலுக்கு கேரட் பிடிக்கும் அந்தப் பயலுக்கு கீரை கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால்தான் செரிமானமாகும், இந்தக் குட்டிக்கு வெண்டைக்காய் சாப்பிட்டால்தான் நல்லது, சோகையாக இருக்கிற அந்தப் பெண்ணுக்கு பீட்ரூட் கொஞ்சம் கூடுதலாத் தரணும்... என்றெல்லாம் பார்த்துப் பார்த்து, ஊர்க்கதையையும் உலகத்துக் கதையையும் அப்பா அம்மாக்களின் கதையையும் சொல்லிக் கொண்டே சாதம் பாதி அன்பு மீதியென உள்ளங்கையில் கொடுத்த சாதத்தின் வாசமும் அந்தப் பாசமும் ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு?

உங்கள் குழந்தைகளுக்கு என்சைமும் பாசமும் பிரியமும் வாஞ்சையும் அன்பும் ஆதுரமும் கலந்த சாதத்தை உள்ளங்கையில் கொடுத்துப் பாருங்கள். நாம் ஒரு தீவு... குழந்தைகள் இன்னொரு உலகம்... என்பதில் இருந்து ஒரு நல்லமாற்றம் வந்தே தீரும்!

அப்படி வருவது இருக்கட்டும்... டிவியில் இருந்தும் வீடியோ கேம்ஸில் இருந்தும் விலகி, உங்களுடன் உங்கள் குழந்தைகள் கொஞ்சம் பேசிப் பரிமாறிக்கொள்ளட்டும்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close