[X] Close

மிடில் கிளாஸ்க்கு முன்னே ஒரு கோடு!


middle-class-munne-oru-kodu

  • வி.ராம்ஜி
  • Posted: 07 May, 2018 13:13 pm
  • அ+ அ-

சமீப காலங்களில், மக்களிடம் உள்ள மனோபாவம் விசித்திரமாகவும் அதேசமயம் மோசமான விளைவுகளைத் தருபவையாகவும் இருக்கின்றன. அதாவது, நடுத்தர வர்க்கத்தினர், தங்களை மேல்தட்டுக்காரர்களாகக் காட்டிக் கொள்கிற நிலை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது.

மேல்தட்டுக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், கீழ்த்தட்டு மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பார்க்கிற நிலை பன்னெடுங்காலமாகவே இருக்கிறது. இந்த நிலையில், எல்லாமே இருக்கிற மேல் தட்டு மக்களும் எதுவுமே இல்லாத கீழ்த்தட்டு மக்களும் ஒருவகையில் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ்கின்றனர். ஆனால், மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி, கைபிசைந்து தவிப்பது மிடில்கிளாஸ் வர்க்கத்தினர்தான் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

மேல்தட்டு மனிதர்களின் நடவடிக்கைகள் நடுத்தர வர்க்கத்தினரைப் போட்டு அலைக்கழிக்கின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். அவர்கள், 42 இஞ்ச் டிவி வாங்கினால், நாமும் வாங்கவேண்டியிருக்கிறது. அவர்கள் பத்து பதினைந்து லட்ச ரூபாய் செலவில் கார் வாங்கினால், ஏழெட்டு லட்ச ரூபாய்க்கு ஒரு காரை தேர்வு செய்து, இரண்டு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, மீதியை இஎம்ஐ - ல் கட்டிவிடத் துடிக்கிறார்கள் நடுத்தர மக்கள்.

தோழி ஒருத்தி சொன்னது, பொளேர் ரகம். ‘முன்பெல்லாம் பள்ளியில் பசங்களுக்குள்ளே ஜாதி பாத்துகிட்டது அங்கங்கே நடக்கும்னு கேள்விப்படுவோம். ஆனா இப்பலாம் ஜாதி பாக்கறது ரொம்பவே ஜாஸ்தியாயிருச்சு. அதாவது பணக்கார ஜாதி, ஏழை ஜாதி. இதை வச்சிக்கிட்டே பசங்களுக்குள்ளே ஒரு வேறுபாடு வருது. இது ரொம்ப வேதனையா இருக்கு’’ என்று வருத்தத்துடன் சொன்னார்.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஒரு குரூப்பாகவும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் இன்னொரு குரூப்பாகவும் இவர்களாகவே பிரிந்து கொள்வதுதான் வேதனை. இப்படி இவர்களுக்குள் இந்த விஷயம் வேரூன்றுவதற்கு, பெற்றோர் பேசிக்கொள்கிற விஷயங்கள் ரொம்பவே அவர்களை பாதிக்கின்றன.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதிலேயே நீயா நானா போட்டிகள் வந்துவிடுகின்றன. அந்தப் பள்ளியில் லட்சங்களில் டொனேஷன் அழவேண்டும். அப்படி அழுது, அதாவது டொனேஷன் செலுத்தி, சீட் வாங்கி, பசங்களைச் சேர்த்துவிட்டால், சமூகத்தில், ஏரியாவில், தெருவில், அபார்ட்மெண்டில் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. ‘நானும் ரவுடிதான்’ என வடிவேலு சொல்வது போல, ‘நாங்களும் மேல்தட்டுதான்’ என்கிற ரகம் இது!

இந்த சமூகமும் சில செயல்பாடுகளும் கூட கழுத்துக்கு கத்தி வைக்காத குறையாக, ‘நீ அப்பர் கிளாஸா, மிடில் கிளாஸா’ என்று பல சோதனைகளை நடத்துகிறது.

முன்பெல்லாம் ஹோட்டலுக்குப் போனால், சாப்பிட்டுவிட்டு, அதற்கான பில்லை எடுத்துச் சென்று கல்லாவில் கொடுப்போம். ஆனால் இப்போது இவை முக்கால்வாசி மாறிவிட்டன. சாப்பிட்ட இடத்திற்கு பில் வரும். அதற்கு பில் ஃபோல்டர் என்று பெயராம். அந்த பில்லுக்கு நீங்கள், பணம் தருவீர்கள், சர்வர் அதை எடுத்துச் சென்று, கல்லாவில் கட்டிவிட்டு, மீண்டும் பாக்கியைக் கொண்டு வந்து தருவார். நீங்கள் அந்த சர்வருக்கு, ஹோட்டல் ஊழியருக்கு டிப்ஸ் வழங்குவீர்கள். முன்பெல்லாம் டிப்ஸ் கட்டாயமில்லை. இப்போதும் கட்டாயமில்லைதான். ஆனால், உங்களின் மேல்தட்டு சிந்தனைக்கு அங்கே ஒரு சவால் விடப்படுகிறது.

முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.

ஹோட்டல் வாசலில் வயதான ஒருவர், வெயிலென்றும் மழையென்றும் பாராமல், வாயில் விசிலோ கையில் ஒரு கொடியோ வைத்துக்கொண்டு இருப்பார். வண்டியை எடுப்பதற்கு ஏதேனும் ஒரு வகையில், அந்தத் தள்ளாத வயதிலும் உதவி செய்வார். இப்போது அவருக்கு நீங்கள் ஐந்து ரூபாயாவது வழங்கவேண்டும். இதுவும் கட்டாயமில்லை. ஆனால் ஒருவித நெருக்கடிக்கு உங்களை ஆளாக்கும்... மேல்தட்டு சிந்தனை.

ஆக, ஒரு ஹோட்டலில் நீங்கள் சாப்பிடுவதற்கு சாப்பிட்டதையும் தாண்டி, மூன்று விதமாக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டும். ஒன்று சர்வருக்கும் மூன்றாவது வாசலில் இருப்பவருக்கும். நடுவே ஜிஎஸ்டி சார்ஜ்.  

வீட்டில் கியாஸ் இருக்கும். பிரிட்ஜ் இருக்கும். ஏஸி இருக்கும். வாஷிங் மிஷின் இருக்கும். 20 வருடங்களுக்கு முன்பு, அநாவசியமாகப் பார்க்கப்பட்டவை, அத்தியாவசியமாகி, நடுத்தர வர்க்க மக்களின் கழுத்துக்கு மேல் கத்தியாக தொங்கி அல்லாட வைப்பதை, மிடில் கிளாஸ் மக்கள் ரசித்து ரசித்துச் செய்வதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

‘நமக்கு இதுக்கெல்லாம் வக்கு இல்லீங்க. முடியாத அப்பாவைப் பாத்துக்கணும். தம்பிக்கு இன்னும் நல்லவேலை அமையலை. அதனால அவங்க குழந்தைகளையும் பாத்துக்கற கடமை இருக்கு. அம்மா வூட்டு வேலை செய்யுது. பொஞ்சாதியும் ஏழெட்டு வீட்ல பத்துப்பாத்திரம் தேய்க்குது. நமக்கு கொளுத்துவேலைதான். அதனால கவுருமெண்ட்டு இஸ்கூல்லதான் பசங்க படிக்கிறாங்க. அத்தப் படிச்சு, மூணு வேளை சோறு துன்னாப் போதும். திருடாம, பொய் சொல்லாம, நல்லவனா வாழ்ந்தாலே போதும்’ என்று போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தென வாழும் கீழ்த்தட்டு மக்களுக்கு, அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து நகருவதே, பெரும் சவால். எனவே அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் அத்தனை சவால்களும் பிரச்சினைகளும். அவர்களுக்கு முன்னே ஒரு கோடு. மேல்தட்டுக் கோடு. பின்னே ஒரு கோடு. கீழ்த்தட்டுக்கான கோடு. கொஞ்சம் பின்னோக்கிப் போய்விட்டால், கவுரவமே குறைந்துவிடும். ‘தோத்துட்டாங்க தோத்துட்டாங்க...’ என்று இந்த உலகமே சொல்லும் என்கிற கவலை. அதற்காக, முன்னே உள்ள கோட்டினைத் தொடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

சொந்தமாய் வீடு, சொந்தமாய் டூவிலர், சொந்தமாய் கார், வாரம் ஒரு முறை ஷாப்பிங், அதுவும் ஷாப்பிங் மாலில். மாதம் ஒருமுறை குடும்பத்தை அள்ளிப்போட்டுக்கொண்டு, காரில் ஒரு சின்ன டூர். தேவைப்படும் போதெல்லாம் ஹோட்டல், ‘போன் செய்தால் போதும்... பீட்ஸா வீடு தேடி வரும்’ டயல் செய்து, வயிறு நிரப்புதல்.

சமூக வலைதளங்களில், படித்த பொன்னான வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது.

‘மிடில் கிளாஸ் காரர்கள், அப்பர் கிளாஸ் போல சுற்றியிருப்பவர்களிடம் காட்டிக்கொள்கிறார்கள். உறவுகளிடமோ, மிடில்கிளாஸ் போலவோ, லோ கிளாஸ் கடனாளிகள் போலவும் சொல்லிக்கொள்கிறார்கள்’ என்று யாரோ எழுதியிருந்தார்கள்.

‘உன் உண்டியல்ல 800 ரூபா சேத்துவைச்சிருக்கியே... கொடும்மா. அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் அப்பா கொடுத்துடுறேன்’ என்று சொல்வதை குழந்தைகள் நம்பத்தயாராக இல்லை. அதேசமயம், கிரெடிட் கார்டு இருக்க கவலை எதற்கு என்று பர்ஸ் முழுக்க, கிரெடிட், டெபிட் கார்டுகள் நிரம்பியிருக்க, வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்... ஹைகிளாஸ் ஸ்டைலில்!

‘இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே...’ என்பது பாம்புக்கும் கருடனுக்குமான வார்த்தைப் போராட்டமா? கிட்டத்தட்ட, மேல்தட்டுக்கும் நடுத்தட்டுக்கும் நடக்கிற மெளனப் போராட்டம்.

மெளனமாக இருப்பதே வெற்றிக்கு வழி...

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close