[X] Close

’மோதி விடாதே... மொத்தமும் கடன்!’ டூவீலர், ஆட்டோ, கார்களில் தத்துவங்கள்! நீங்கள் ரசித்ததையும் சொல்லுங்களேன்!   


two-wheeler-car-auto-words

  • வி.ராம்ஜி
  • Posted: 04 May, 2018 13:01 pm
  • அ+ அ-

படங்கள் : எல்.சீனிவாசன் 

முன்பெல்லாம், கார் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட்டுகளில்  ஒரு போர்டு வைத்து, தலைவர், செயலாளர், பொருளாளர் பேரையெல்லாம் சின்னதாகப் போட்டு, பெரிதாக இருக்கும் கருப்புப் போர்டில், லெனின், ஸ்டாலின், பெரியார், பாரதியார், வள்ளுவர் என அவர்கள் சொன்ன தத்துவங்களை எழுதிவைத்திருப்பார்கள்.

அதேபோல, சில வீட்டு வாசல்களில் கூடா, ஒரு போர்டு வைத்தோ அல்லது சுவரிலேயே கருப்புவண்ணம் பூசி போர்டு போலவோ செய்து, அதில் ஏதேனும் மனதை மலர்ச்சிப்படுத்துகிற, ஊக்கப்படுத்துகிற, உத்வேகப்படுத்துகிற விஷயங்களை எழுதிவைத்திருப்பார்கள்.

பிறகு இந்த விஷயங்களை, முகநூல்களும் வாட்ஸ் அப்புகளும் நிரப்பத் தொடங்கின. பெண்ணின் திருமண வயது 21 என்று எழுதிவைத்த ஆட்டோக்களின் பின்னே உள்ள வாசகங்கள், மற்ற வாகனங்களையும் அதாவது வாகன ஓட்டிகளையும் எழுதத் தூண்டியிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

கடந்த பத்துவருடங்களில், பெரும்பான்மையான வாகனங்களில் பார்த்த வாசகம்... ‘வாழ்க வளமுடன்’தான்! இப்போது புதுப்புது வாசகங்களைப் போட்டு, ஈர்ப்பதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள் ஏராளமான இளைஞர்கள்.

அதற்கு முன்னதாக, லாரியில், வேனில் ’மோதிவிடாதே... மொத்தமும் கடன்’ என்ற வாசகம், என்னவோ செய்கிறது. இன்னும் சிலர்... ‘உங்களின் வழிச்செலவே எங்கள் வாழ்க்கைச் செலவு’ எனும் ஆட்டோக்கார அண்ணன்களும் ஐயாக்களும் எழுதியிருப்பதும் சட்டென்று மனதை கனக்கத்தான் செய்கின்றன.

’காட்ஸ் கிஃப்ட்’ என்றும் ‘ப்ரைஸ் தி லார்ட்’ என்றும் ’அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே’ என்றும் பலரும் எழுதியிருக்கிறார்கள், வாகனங்களில்!

‘ஆமாம்... இது என் தாத்தாவோட ரோடுதான்’ என்று ஆங்கிலத்தில் பலரும் தமிழில் சிலருமாக எழுதிவைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில், ஆட்டோக்களில், ‘சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்று எழுதி வைத்தவர்களின் குணங்களைக் கொண்ட இன்றைய இளைஞர்கள், ‘சேலையைப் பார்க்காதே, சாலையைப் பார்’ என்றும், ‘சாலையைப் பார்த்தால் வாழ்க்கை உண்டு, சேலையைப் பார்த்தால் வாழ்க்கையே போச்சு’ என்றெல்லாம் திகில் கிளப்புகிறார்கள். இது திகிலா, சாபமா என்றே புரிவதில்லை. யார் மேலான கோபம் இது என்று யோசிக்க வைக்கிறது.

இதில், நம்பர் பிளேட்டின் ஓரத்தில், பிள்ளையார் ஸ்டிக்கரையோ பெருமாள் ஸ்டிக்கரையோ பார்க்கிற அதேநேரத்தில், தல என்றும் தளபதி என்றும் பார்க்கமுடிகிறது. ஒரு டூவீலரில், ‘தல - தளபதி’ என்று சேர்ந்திருந்து கண்டு, அப்படியே ஷாக்காகி விசாரித்தால்... அந்தப்பையன்... ‘எனக்கு தலயை விட, தளபதியை விட விஜய் சேதுபதிதான் பிடிக்கும்’ என்றான். பின்னே ஏன் இது... என்றால், ‘ச்சும்மா சார்’ என்று விர்ரென்றான்.

’பாதையைத் தேடாதே, உருவாக்கு’ என்ற வாசகமும் நிறையவே பார்க்கமுடிந்தது. ‘ஊக்கு விற்பவனை ஊக்கு விற்றால், ஊக்கு விற்பவன் கூட, தேக்கு விற்பான்’ என்கிற வாலியின் வார்த்தைகள் ஒட்டியிருந்தார்கள்.

நிறைய வாகனங்களில், பாரதிகளும் மீசைகளும் இருக்க, இன்னும் சில வாகனங்களில், ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்பதையும் பார்க்க முடிந்தது.

அத்தி பூத்தது போல, ‘என் பாஸ் தந்த பரிசு’ என்று பைக்கில் வாசகம் பார்த்த அதேவேளையில், ‘அன்புத்தங்கையின் பரிசு’ என்று எழுதிய வாகனத்தை சர்வ ஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ற அண்ணனையும் அந்தத் தங்கையையும் அவர்களின் பாசத்தையும் கண்டு ஒருநிமிடம் நெகிழ்ந்துதான் போவார்கள் எல்லோரும்!

அதேபோல், நூற்றுக்கு பத்து டூவீலர்களிலும் கார்களிலும் ‘my mams gift', 'my dad gift', 'my parents gift' என்று எழுதியிருப்பதைப் பார்க்கமுடிந்தது. மனைவியின் பரிசு என்றும் எழுதியிருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து, ‘என் மகனின் பரிசு’ என்று எழுதிய வாசகம், மகன் தந்தைக்காற்றும் உதவி!

‘இசை என்பது உள்ளத்தையும் உயிரையும் மேல்நிலைக்கு எடுத்துப்போவதாக இருக்கவேண்டும்’ என்கிற இளையராஜாவின் வாசகத்தையும் அவரின் படத்தையும் பதிந்திருந்ததைப் பார்ப்பவர்கள், ‘அட நம்மாளு’ என்றுதான் நினைத்திருப்பார்கள். ’வாழ்க்கையில் எதிரியே இல்லாமல் வாழ்பவன், வாழ்க்கையே வாழாதவன் என்று அர்த்தம்!’ என்று ஏகப்பட்ட எதிரிகளைக் கொண்டவர்தான் எழுதியிருக்கவேண்டும்.

ஆட்டோ அண்ணன் ஒருவர், ‘ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட, தோற்பது எப்படி என்று யோசித்துப் பார். ஜெயித்துவிடுவாய்’ என்று எழுதியிருந்தார். அந்த டானிக் அண்ணனுக்கு தினமும் யாரேனும் நன்றி சொல்லி நெகிழ்ந்திருப்பார்கள்.

இப்படியாக... வாகன வாசகங்கள், சந்தடியான, நெருக்கடியான சாலைப்பயணத்தில் சற்றே ஆறுதல். ஏதோவொரு சுவாரஸ்யம்.

மனைவியுடன் டூவீலரில் சென்ற அந்தப் பையன் மிக அழகாக, மெதுவாக, சரியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த பைக்கின் பின்னே ‘miss you appa' என்று எழுதியிருந்தது. நிறுத்தி விசாரித்தேன். ‘எனக்கு ஒரு புதுவண்டி வாங்கிக்கொடுக்கணும். எனக்குக் கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு எங்க அப்பாவுக்கு ரொம்ப ஆசை. ஆனா இதுரெண்டுமே பாக்காம, அப்பா இறந்துட்டாரு. அவ்ளோ கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாரு. இப்ப கல்யாணமாயிருச்சு. நாலு மாசத்துக்கு முன்னாடி புதுவண்டியும் லோன்போட்டு வாங்கிட்டேன். ஆனா, அப்பாதான் இல்ல. அதான் ஒரு வலி... சின்னதா பகிர்ந்துக்கிட்டேன்’ என்று சொல்லும்போதே அழுதுவிட்ட அந்தப் பையனை, அவன் மனைவி தோள் இறுக்கி, கைகோர்த்துக்கொண்டார்.

அந்த ஆட்டோக்கார ஐயாவுக்கு எப்படியும் அறுபதுக்கு மேல் இருக்கும். அவரின் ஆட்டோவில் கோவிந்தம்மாள் - ராஜேஸ்வரி என்று எழுதியிருந்தது. ‘யாருங்கய்யா இவங்க’ என்று கேட்டேன். ‘கோவிந்தம்மாள் என் பெரியம்மா. ராஜேஸ்வரி என்னோட அத்தை’ என்றார் அந்தப் பெரியவர்.

‘என்னய்யா... பெரியம்மா பேரு, அத்தை பேரெல்லாம் எழுதி ஒட்டியிருக்கீங்க. அம்மா பேரை விட்டுட்டீங்களே...’ என்றேன்.

‘நாம் பொறந்த நாலாவது மாசமே அம்மா செத்துப்பூட்டாங்க சார். எட்டு வயசுல அப்பாவும் போயிட்டாரு. அனாதையா ஆக்காம, என் பெரியம்மாவும் அத்தையும்தான் அம்மா மாதிரி இருந்து என்னை வளர்த்து ஆளாக்கினாங்க. வீடு வாங்கி, ரெண்டு பொண்ணுங்களையும் கண்ணாலம் கட்டிக் கொடுத்து, பையனை காலேஜ்ல படிக்க வைச்சு, சிகரெட்டு பீடி, தண்ணின்னு எந்தப் பழக்கமும் இல்லாம இருக்கேன்னா... இவங்கதான் காரணம். அவங்களுக்கு நன்றி சொல்ற விதமாத்தான், அவங்க பேரை எழுதிவைச்சிருக்கேன்’’ என்று சொல்லிக் கொண்டே, பர்ஸில் இருந்து அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களைக் காட்டிவிட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டார் அந்த ஐயா!

வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாவே இருப்பதில்லை. வாசகங்கள் ஏதோ வாசகங்கள் என்று கடந்துவிட முடிவதுமில்லை!

இனிய அன்பர்களே! வாகனங்களில், நீங்கள் பார்த்த வித்தியாசமான வாசகங்கள், நீங்களே உங்கள் டூவீலரில் எழுதிவைத்திருக்கும் வாசகங்கள்... ஒரு போட்டோ எடுத்து kamadenumagazine@gmail.com க்குஅனுப்பி வையுங்களேன்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close