[X] Close

திற்பரப்பு போலாமா? கோடைக்கு ஏற்ற ஜில் அருவி


thirparappu-aruvi-kodai-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 04 May, 2018 11:21 am
  • அ+ அ-

நெல்லையில் அருவி உண்டு. அது குற்றாலம். குமரியிலும் அருவி உண்டு. அது திற்பரப்பு. அதனை குமரிக் குற்றாலம் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் குமரி வாழ் மக்கள்.

கன்யாகுமரி மாவட்டத்தில், குலசேகரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திற்பரப்பு. நல்லநாளிலேயே, குமரியின் பாஷையிலும் க்ளைமேட்டிலும் கேரள வாடை, ஜில்லென்று வீசும். அதிலும் இந்தத் திற்பரப்பில் அருவிதான் பிரதானம் என்பதால், ஜிலீராகவே இருக்கும் குளிர்ந்த ஏரியா என்று இதைக் கொண்டாடுகிறார்கள் மக்கள்.

மழை வந்தாலோ, புயல் வந்தாலோ, அருவியில் வெள்ளம் போல் நீர் கொட்டும் என்பதால், அப்போது அருவியில் குளிக்கத் தடை செய்வார்கள். திற்பரப்பு அருவியிலும் இது நடக்கும். என்றாலும் இப்போதைய சீசனில், மழையாவது புயலாவது. திறந்து வைக்கப்பட்ட ஆயிரம் ஷவருக்கு இணையாக, தலையில் தும்பிக்கையெனப் பாய்ந்து வழிந்து ஆசீர்வதிக்கிறது திற்பரப்பு அருவி.

கோதை ஆறு விழுகின்ற இடமே திற்பரப்பு அருவி. அருகில் அழகிய சிவன் கோயிலும் இருக்கிறது. புராதனப் பெருமை கொண்ட சிவன் கோயில் தரிசனமும் விசேஷம்தான். பாண்டிய மன்னன் காலத்தைய, 9ம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இங்கே இருக்கின்றன. தட்சனின் யாகத்தில் இருந்து சிவனாரால் வெளிக்கொண்டு வரப்பட்ட வீரபத்ரர், தட்சனை அழித்தார் அல்லவா. அந்த வீரபத்ரர் இங்கே கோயிலில் இருக்கிறார். அங்கே அருவி நீராடிவிட்டு, அப்படியே அருள்மழையில் நனையலாம்.

குற்றாலம் மாதிரியோ சுருளி அருவி போலவோ பயந்து பயந்து குளிக்கத்தேவையில்ல. கரடுமுரடாகவோ, வழுக்குவது போலவோ, கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நிற்க முடியாது என்றோ திற்பரப்பு இல்லை. மிக விஸ்தாரமான, நீண்டதான இடத்தில், நன்றாக, இரண்டு கைகளையும் விரித்து, அருவியை அண்ணாந்து பார்த்தபடி ஆனந்தக் குளியல் போட்டால், மொத்த வெயிலையும் மறந்தே போய்விடுவோம். வெயிலின் தகிப்பையும் மன்னித்துவிடுவோம்.

மலைகள் சூழ்ந்த பகுதி. சுற்றிலும் தென்னை மரங்கள். கூட்டம்கூட்டமாக தென்னந்தோப்புகள். எப்போதும் நம்மை காற்று தொட்டுக் கொண்டே இருக்கும்படியான இயற்கையின் கொடை. அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அருவிக் குளியல்.

திற்பரப்பு அருவியில் அரைநாள் முழுக்க இருக்கலாம். அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில், பிரசித்தி பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குகைநந்திக்கோயில்கள் இருக்கின்றன. குகையும் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்களும் குகைக்கற்களில் உள்ள சிற்பங்களும் வியக்க வைக்கும். திகைக்கச் செய்யும்.

கன்யாகுமரியில் காலையில் சூர்யோதயத்தைப் பார்த்துவிட்டு, விவேகானந்தா பாறைக்குச் சென்றுவிட்டு, அப்படியே குலசேகரத்தையும் அருகில் உள்ள திற்பரப்பையும் பார்த்துவிட்டு வரலாம்.

பார்த்து விட்டா...? திற்பரப்பு அருவியில் முழுக்க நம்மைக் கொடுத்துவிட்டு, புத்துயிர் பெற்று வரலாம்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close