[X] Close

நாளை முதல் ’அக்கினி நட்சத்திரம்’ - பேரைக் கேட்டதுமே அதிருதுல்ல..!


agni-natchathram-kodai-kaalam-tips

  • வி.ராம்ஜி
  • Posted: 03 May, 2018 15:34 pm
  • அ+ அ-

அக்கினி நட்சத்திரம் என்பது கோடை காலத்தின், மிக முக்கியமான உட்பிரிவுக் காலம். கோடையிலேயே கொளுத்தியெடுக்கும் வெயில், இந்த அக்கினி நட்சத்திர காலத்தில்,  வெயிலின் ஆட்டம் அதகளம் பண்ணும். சுட்டுப் பொசுக்கிற உஷ்ணத்தின் உக்கிரம், ஆக்டோபஸ் கரங்களெனப் பரவித் தாக்கும்.

மழைக்குப் பஞ்சமான நம் தேசத்தில், இந்தக் கோடையில் வியர்வை மழைக்கு மட்டுமே பஞ்சமிருக்காது. ஒருநாளில் ஐந்து லிட்டரேனும் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதையெல்லாம் இப்போதுதான் குடித்து, தாகசாந்தி பண்ணிக்கொள்வார்கள், மக்கள்.

கதிரவன் காலையில் வரும் போது, வெளிச்சம்தான் முன்பு வரும். இப்போது கதிரவனுடன் சேர்ந்த கனல் கக்கும் வெயிலும் வந்துவிடுகிறது. ‘ஏங்க... குளிச்சிட்டு வந்தா உடம்பை துடைக்க மாட்டீங்களா’ என்று வீட்டில் கேட்பதும், ‘நீ வேற, நாலு தடவை துடைச்சாச்சு. இது வியர்வை’ என்று சொல்வதும் எல்லா வீடுகளிலும் பேசுகிற வெயில்கால டயலாக்குகள்.

கிரிக்கெட்டில் செஞ்சுரி போட்டால், குதூகலமாகிவிடுகிறவர்கள் கூட, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் செஞ்சுரியைத் தாண்டிய வெயில் என்று படிக்கும் போதே, ’அதுங்க, எப்ப வேணா நம்மளைத் தாக்க வரும், உஷாரா இருங்க’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

’அட... அந்தக் காலத்துல வெயில்காலம், காத்தடி காலம், மழைகாலம், குளிர்காலம்னு இருக்கும். ஆனா இப்ப, மார்கழில குளிர்காலம் இருக்கு. காத்தடி காலமும் போச்சு, மழைகாலமும் போச்சு. புயல் வந்தாத்தான் மழைன்னு ஆயிருச்சு. ஆனா இந்த வெயில், வருஷம் 365 நாளும் இருக்குது’ என்று கற்றாழை ஜூஸ் குடித்து, உடலைக் குளிர்வித்தபடியே சொல்கிறார்கள்.

‘அப்போ, வேலூருக்குத்தான் வெயில் நகரம்னு பேரு உண்டு. அப்புறம், வேலூர், திருச்சி, சேலம், கரூர், திருவள்ளூர்னு வெயில் நகரமா விரிவாச்சு. இப்ப என்னடான்னா, எல்லா ஊர்லயும் கொளுத்தியெடுக்குது வெயிலு’ என்று தேனிப்பக்கம் இருக்கிறவர்களும் கோவையைச் சேர்ந்தவர்களும் கூட வருந்திப் புலம்புகிறார்கள்.

இதுக்கே இப்படின்னா... நாளை முதல் தொடங்கப்போகும் அக்கினி நட்சத்திர காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம்?

நாளை (மே 4ம் தேதி) முதல், அக்கினி நட்சத்திரம் ஆரம்பம். மையம் கொள்ளும் இந்த வெயில்புயல், இந்த மாதக் கடைசி வரைக்கும் இருந்து, நின்று நிதானமாக, பாரபட்சமே இல்லாமல், எல்லோரையும் எல்லா ஊரையும் வறுத்து, காயப்போட்டு, துவைத்து தொங்கப்போடும்.

என்ன செய்வது... அக்கினி நட்சத்திரத்தின் வேலை அது. அதைச் செவ்வனே செய்கிறது.

நாம் நம்முடைய வேலையைச் செய்வோம்.

இந்த அக்கினி நட்சத்திர காலத்தில், முன்பை விட பாதுகாப்பாக இருப்போம்.

1. சூடான, அதிக காரம் கொண்ட பொருட்களைத் தவிர்ப்போம்.

2. காலையில் எழுந்ததும் நெல்லிமுள்ளி (நெல்லிக்காய்) தண்ணீரையோ அல்லது வெந்தயம் கலந்த தண்ணீரையோ குடிப்போம்.

3. வெயிலால் வியர்வை வழிய, வியர்வையால் நீர்ச்சத்து குறையும். எனவே தர்பூசணி முதலான பழங்களை அதிகம் உட்கொள்வோம். இளநீர், நுங்கு, மோர் என நிறைய சேர்த்துக்கொள்வது உடல் ரீதியான சோர்வில் இருந்தும் சூட்டில் இருந்தும் நம்மைக் காக்கும்.

4. காலை மாலை இரண்டுவேளையும் குளிப்பது மிகவும் நல்லது.

5. வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, குடை எடுத்துச் செல்லுங்கள். எப்போதாவது பயன்படுத்துவது என்பதால் வைத்த இடத்தில் விட்டுவிட்டு காணடிக்கவும் வாய்ப்பு உண்டு. குடையில் கவனம் செலுத்துவது நம் கூடுதல் சாமர்த்தியம்.

6. வயதானவர்கள், பெரும்பாலும் தனியே வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செல்வதாக இருந்தாலும், தலைக்கு தொப்பி, குடை, கண்ணுக்கு கூலிங்கிளாஸ், கையில் தண்ணீர் பாட்டில், மிகவும் அயர்ச்சியாக, உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு மயங்கிவிடுகிற நிலையில் இருந்து தப்பிக்க, சாக்லெட் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பு என பயணிப்பது மிகவும் நல்லது.

7. மதிய உணவின் போது, பெரும்பாலும் மோர்சாதம் சாப்பிடுங்கள்.

8. இன்னிக்கி லீவு. ஒண்ணுவிட்ட சித்தப்பா பையனோட பேரனுக்கு குழந்தை பொறந்திருக்கு. போய் பாத்துட்டு வரலாம்... என்பது மாதிரியான விஷயங்களை, மாலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

9. வேலைக்குச் செல்பவர்களைத் தவிர, மற்றவர்கள் முக்கியக் காரணங்கள் இல்லாமல், வெளியே செல்லாமல், வீட்டில் இருப்பது தவறொன்றுமில்லை.

10. இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் முதலான ஆடைகள் வெப்பத்தை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, நம்மை இன்னும் பாடாய்ப்படுத்தும்.

11. பெரும்பாலும் காட்டன் ஆடைகளையே அணிந்துகொள்ளுங்கள்.

12. மாலை நேரங்களில், கொஞ்சம் காத்தாட நடக்கலாம். ஏனென்றால், காலை முதல் மாலை வரை இருந்த உஷ்ணம் மெல்ல மெல்ல விலகி, ஒருவித குளுமையில் ஏரியாவே குளிர்ந்துதான் போயிருக்கும். அப்போது வாக்கிங் போல சென்றால், உடலுக்கும் குளுமை. தொப்பை குறைந்தது மாதிரியும் ஆச்சு.

செஞ்சுரியை, அதாவது நூறு, நூத்திஒண்ணு, நூத்திரெண்டு என ஸ்கோர் கணக்காக இனி எகிறியடிக்கும், வெயிலின் அளவு. அங்கிங்கெனாதபடி, எங்கும் பரவி, நம்மை திக்குமுக்காடச் செய்யும். நாம்தான் கவனமாக இருக்கவேண்டும். அக்கினி நட்சத்திர காலத்தின், வீரியத்துக்கு உரிய வெயிலின் வில்லத்தனங்களை, சமாளிப்போம்.

’உஷ்... இப்பவே கண்ணக் கட்டுதே!’

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close