[X] Close

சுஜாதா... நவீனத்தின் பாஸ்வேர்ட்!


writer-sujatha-birth-day

  • வி.ராம்ஜி
  • Posted: 03 May, 2018 12:08 pm
  • அ+ அ-

மே-3 : எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள்

அவர் படித்தவரா. ஆமாம் எஞ்சினியர். அவர் பகுத்தறிவுவாதியா... ஆமாம். எல்லாவற்றையும் பகுத்துப் பகுத்துச் சொல்வதில் வல்லவர். அவர் விஞ்ஞானியா. நிச்சயமாக... அவரால் அறிவியலைக் கற்றவர்களும் அறிவியலில் ஆர்வமானவர்களும் பல்லாயிரம். அவர் ஆன்மிகவாதியா. ஆமாம், மனத்தையும் அது செல்லும் திசையையும் அறிந்து ஆய்ந்தவர். அவர் எழுத்தாளரா.... வெகு நிச்சயமாக. நவீனம் என்ற சொல்லுக்கு புதுப்புது அர்த்தங்களையும் வடிவங்களையும் உள்ளடக்கித் தந்தவர். அவர்... சுஜாதா.

ரங்கராஜன்கள் புகழ்பெற்றிருந்த காலத்தில், எழுதத் தொடங்கியவர். பெயர்க்குழப்பம் வந்துவிடுமே என்று எல்லோரும் சொல்ல, தன் மனைவி பெயரை வைத்துக் கொண்டு எழுதினார். இன்றைக்கு எழுத்து நடையைக் கொண்டே, இது சுஜாதா எழுதியது என்று மிகச்சுலபமாகச் சொல்லிவிடலாம்.

வ.வே.சு.ஐயர் தொடங்கி பாரதியார் உட்பட பலரும் நவீனங்களையும் அந்தந்தக் காலகட்டத்துக்குத் தகுந்த எழுத்து நேர்த்திகளையும் தந்தார்கள். அதேபோல், சுஜாதா தந்த நவீனம் என்பது, எழுத்துலகின் உச்சம். எல்லாக காலத்திற்கும் பொருந்துகிற நவீன உத்திகள் அவை என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கவிதை எழுதுவார். நாடகம் போல் உரைநடைக் கதை எழுதுவார். சிறுகதை எழுதுவார். மிகப்பெரிய நாவலைத் தருவார். அவ்வளவு ஏன்... வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் விதம்  கதம்பசாதம். ஒவ்வொன்றுக்கும் ஒரு பாதையைப் பிடித்திருப்பார். அந்தப் பாதையில் இருந்து தடாலென்று அவரே விலகுவார். புதுப்பாதை அமைப்பார். அப்டேட்டுடனே இருக்கிற எழுத்தாள, எஞ்சினிய, விஞ்ஞானி என்று இவரை வியந்து சிலாகிக்காதவர்களே இல்லை.

படிகளில் தடதடத்தான் என்று எழுதுவார். ஜீப் விர்ரென்றது என்று ஜீப்புடன் சென்று நம் எண்ணங்களையும் வேகப்படுத்துவார்.  மாடியில் என்று எழுதாமல்...

மா

டி

யி

ல்

என்று எழுத்திலேயே மாடியையும் படிகளையும் உணர்த்திவிடுகிற வித்தைக்காரர் இவர்.

எதை எழுதினாலும் அதில் இருப்பது ‘சுஜாதா டச்’ என்று கொண்டாடப்பட்டது. ‘ராஜராஜசோழன் சிவாஜிகணேசனாக நடித்த ராஜராஜ சோழன்’ பார்த்தேன்... என்று சிவாஜியைக் கொண்டாடிய விதம், புது தினுசு.

வார இதழ்கள், மாத இதழ்கள் எல்லாவற்றிலும் அவரின் தொடர்கள் வந்துகொண்டிருக்கும். குமுதத்தில் நைலான் கயிறு மாதிரி எழுதினால், விகடனில் கரையெல்லாம் செண்பகப்பூ மாதிரியோ பிரிவோம் சந்திப்போம் மாதிரியோ எழுதுவார். ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை எல்லோரும் கொண்டாடும்படி, மறக்கவே முடியாதபடி செய்தவர் சுஜாதா. கணையாழியில் இவர் எழுதிய கடைசிப்பக்கம் வெகு பிரசித்தம்.  இவர் எழுதிய அந்த ஒரு பக்கத்திற்காகவே, கணையாழியை வாங்கிப் படிக்கத் தொடங்கிய ஜனரஞ்சகப் பத்திரிகை வாசகர்கள் ஏராளம்.

காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, நினைத்தாலே இனிக்கும், ப்ரியா என்று இவரின் கதைகள் படமாக வந்திருக்கின்றன. ஒருகட்டத்தில், இவரே திரைத்துறையில் நுழைந்து, வசனங்கள் படைத்திருக்கிறார். இவரின் வசனங்கள், சினிமாவுக்கு புது ரூட் பிடித்துக் கொடுத்தன. குறும்பு ப்ளஸ் புதுமை ப்ளஸ் உணர்வு என சகலத்தையும் சேர்த்துக் கொடுக்கிற எழுத்து ஜாலம், சுஜாதாட்ஸ் என்றே புகழப்பட்டது.

‘சின்ன தப்புதானுங்களே’ என்று அந்நியன் படத்தில் வசனம் வரும். ‘தப்பு என்ன பனியனா, லார்ஜ், மீடியம்னு இருக்கறதுக்கு’ என்பார்.  அதில் விவேக்கை வைத்துக்கொண்டும் இந்தியனில் கவுண்டமணியை வைத்துக்கொண்டும் இவர் அடிக்கிற லூட்டியும் வசன பியூட்டியும் ரசகுல்லா ரசத்துக்கு இணையானவை.

தமிழகத்தில் கம்ப்யூட்டர் வந்து லேண்ட் ஆவதற்கு முன்பே சுஜாதாவின் வாசகர்களுக்கு கம்ப்யூட்டர் பரிச்சயம். எண்பதுகளின் பிற்பாதியிலும் தொந்நூறுகளிலும் ஏகப்பட்ட பேர் கம்ப்யூட்டர் படிப்பு படிப்பதற்கு அச்சாரம் போட்டதில், சுஜாதாவின் விஞ்ஞான மூளைக்கு பெரும்பங்கு இருக்கிறது.

‘குழந்தையா இருக்கும் போது, தூக்கிக் கொஞ்சும் போது மீசை குத்துதுன்னு அழுவான். அவனுக்காக மீசையையே இழந்த சேனாபதி, இன்னிக்கி அவனையே இழக்கத் தயாராயிட்டேன்’ என்று இந்தியன் தாத்தா சொல்லும்போது, தியேட்டரே கைத்தட்டும்.  தேடித்தேடி மூளைக்காரர்களைக் கண்டு பேசிப் பழக்கமாகிற கமல், பெங்களூருவில் இருந்த சுஜாதாவைச் சந்தித்துப் பேசியதில் நட்பு உதயமானது. பின்னாளில், கமல் விக்ரம் படத்தை எடுப்பதற்கும், சுஜாதாவின் பதவிக்காக நாவலை புள்ளியாக வைத்துக்கொண்டு ஷங்கர், முதல்வன் என்று மிகப்பெரிய ரங்கோலி போட்டதும் சுஜாதாவின் கர்வமில்லாத, எளிமையான அணுகுமுறையையும் அன்பையும் சொல்கிற அவரின் எழுத்தைப் போலான எளிமையானவை.

குசும்பும் குறும்புமாக இவரின் படைப்புகளில் ஆங்காங்கே பொடிமாஸ் தூவுவது, சுஜாவுக்கு மட்டுமேயான கலை. கணேஷ் வஸந்த்களை யாரால்தான் மறக்க முடியும். பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டி என கற்பனை உருவங்கள் போல், கணேஷூம் வஸந்தும் சுஜாதாவின் சீமந்தப்புத்திரன்கள்.

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைத்தவர், சுஜாதா. சரித்திரம் படைத்த பிறகும், சத்தமிடாமலேயே இருந்தவர் எனும் பெருமையும் சுஜாதாவுக்கு உண்டு.

மே 3. இன்று நவீன படைப்புலகின் பாஸ்வேர்டான சுஜாதாவின் பிறந்தநாள். அவரைப் போற்றுவோம்.  

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close