[X] Close

வாக்கு வங்கி அரசியல் ஒன்றும் மோசமான விஷயமில்லை...


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 09:47 am
  • அ+ அ-

ஜெமினி தனா

நான் விஜய் மாதிரி நடிகனாவேன், சச்சின் மாதிரி கிரிக்கெட்டில் சாதிப்பேன், கல்பனா சாவ்லா மாதிரி சயின்ட்டிஸ்ட் ஆவேன், அப்துல்கலாம் மாதிரி வருவேன் என்று குழந்தைகள் சமூகத்தில் உயர்ந்திருப்பவர்களை ரோல்மாடலாகக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாலும் அதிகம் பார்த்து வளர்வது பெற்றோர்களையும்  ஆசிரியர்களையும்தான்! சொல்லப்போனால், உண்மையான ரோல்மாடல் பெற்றோர்தான்!

    வளரும்  குழந்தைகள் களி மண் மாதிரி.. நாம் எப்படியெல்லாம் பிடிக்க நினைக்கிறோமோ அப்படியெல்லாம் வளைந்து கொடுப்பார்கள். ஏன் எதற்கு எப்படியென்ற காரணமின்றி.. நன்மையா தீமையா என்று ஆராய்ந்து பார்க்க குழந்தைகளுக்குத் தெரியாது.. ஆனால் நாம் செய்யும் செயல்கள் அவர்களுக்குப் பிடித்து விட்டால் நம்மை அறியாமல் நாமே அவர்களுக்குள் நுழைந்துகொள்வோம். நாம் செய்கிற செயல்களும் நாம் பேசுகிற பேச்சுகளும்தான், அவர்களுக்குள் நேரடியாகப் பதிகின்றன. அதனால்தான் முழு, முதல் ரோல்மாடல் பெற்றோர்தான் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.  

     பட்டாம்பூச்சியாய் பறக்க விரும்பும் குழந்தைகளுக்கு இறக்கைகளாக இருந்து பாதையையும் அமைத்துத் தருவது  பெற்றோர்களின் கடமை. உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமான  சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் நல்ல எதிர்காலத்தைப் பெறுவார்கள்.

ஆகவே, குழந்தைகள் முன்னே நல்லவற்றைச் செய்யவும் பேசவும் வேண்டும். தவறான பழக்கங்களைக் குழந்தைகள் முன்பு செய் வதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காலங்காலமாக கடைப்பிடித்து வந்தார்கள் முன்னோர்கள். ஆனால்... இந்தப் பழக்கமெல்லாம் நாகரிக, கலாச்சார மாற்றங்களால் அவையும் மாறிப்போயின என்பதுதான் கொடுமை!

   செல்போன் மணி அடிக்கிறது. ”அப்பா ஃபோனை சார்ஜ்ல போட்டு வெளியே போயிருக்கேன்னு சொல்லு” என்று  குழந்தைகளைச் சொல்லச் சொல்லும் அப்பாக்கள், பிள்ளைகளிடம் உண்மையையும் ஒழுக்கத்தையும் எதிர்பார்ப்பது அபத்தம் அல்லவா?

ஒருவகையில், குழந்தைகளைப் பொய் சொல்ல பழக்குகிறார்கள்.   பிரச்னைகளைக் கண்டு நழுவுவதுதான் பாதுகாப்பானது. சில நேரங்களில் சில இடங்களில் பொய் சொல்வது தவறில்லை என்று இரண்டு வகைகளில் குழந்தைகள் இங்கு பாடம் படிக்கிறார்கள்.

 இன்னிக்கு ”மிஸ் ஹோம் வொர்க் கொடுக்கலியே” என்று பொய்யின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கும் பிள்ளைகள் மாட்டிக்கொண்டதும் ”இந்த வயசுல என்ன பொய் சொல்ற பழக்கம்” என்று பிள்ளைகளை அதட்டும்போது அப்பா ”ஃபோனில் இல்லைன்னு சொல்லச் சொன்னது மட்டும் பொய்யில்லையா” என்ற கேள்விகளும் அதைத் தொடர்ந்து வளர்ந்த பிறகு பொய் சொல்லலாம் போல என்பதாகவும் கற்றுக்கொள்வதுதான் ஆரம்ப பாடம்.

   ’ப்ஃரெண்ட்டோட வீட்டு கல்யாணத்துக்குப் போயிருந்தேனே… பார்ட்டியில எல்லாமே ஃபாரின் சரக்குதான்’ என்று பெருமிதத்தோடு அப்பா சொல்வதைக் கண்டிப்பு காட்டாமல் கேட்கும் அம்மாவைப் பார்த்து விசேஷத்தில் பார்ட்டியும் மதுவும் சகஜம் போல  எனும் மனோநிலை குழந்தைகளின் மனத்தில் ஆழ மாக பதிந்துவிடுகிறது. வளர் பருவத்தில் தட்டிக்கேட்கும் போது அப்பாவை போல் பார்ட்டியில் மட்டும்தான் என்று  குற்ற உணர்வே இல்லாமல் சமாளிக்கிறார்கள். ”அப்பாவைப் போல நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்” என்று சொல்லும் போது அப்பாவைக் கவனிக்கும் குழந்தைகள் மற்றவற்றையும்  மனத்தில் பதிய வைத்துக்கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

   மதிப்புமிக்க பொருள் கீழே விழுந்து தவறும்போது ஆவேசம் காட்டாமல், பயந்த குழந்தையை அணைத்து  ”பரவாயில்லை கண்ணம்மா..  நீ சின்னப் பொண்ணுல்ல..அதான் தெரியாம கீழே போட்டு உடைச்சிட்டே… அடுத்த முறை தவறாம  கவனமா இருக்கணும்” என்று அழும் குழந்தையைச் சமாதானத்தோடு கண்டிப்புடன் சொல்லும்போது.. குழந்தைகள் தவறை உணர்வதோடு வளர்ந்த பிறகும் கவனமாகவே  இருப்பார்கள். பிரச்சினைகளைத் தைரியமாக  எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வதோடு ”நான் எங்க அப்பாவைப் போல தைரியமிக்கவள்.. நேர்மையானவள்” என்று ஒவ்வொரு இடங்களிலும் உங்கள் ரோலை நினைவுப்படுத்துவார்கள்.

      ”இந்த வீட்ல மட்டும்தான்  பொருள் வெச்ச இடத்தில இருக்க மாட்டேங்குது” என்று  கையில் அகப்பட்ட பொருளை தூக்கியெறிவது, ஆஃபிஸ் டென்ஷனோடு வீட்டில் எரிந்து விழுவது, ஆத்திரத்தைப் பாத்திரத்தில்  காட்டுவது என்று எப்போதும் கோபத்தோடும் சச்சரவுகளோடும் பெற்றோர்கள் இருப் பதைப் பார்த்து வளரும்  குழந்தைகள் இப்படி இருப்பதுதான் இயல்பு எனும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள்  உளவியல் நிபுணர்கள்..

   சில வீடுகளில் பெற்றோர்கள் வயதானவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதும், அடிப்படையான  உரிமைகள் மறுக்கப்படுவதும் குழந்தைகள் முன்னிலையிலேயே  நடக்கும் போது இதுதான் சரி என்ற  அநியாயங்கள், நியாயங்களாக   குழந்தைகள் மனதுக்குள் தங்கிவிடுகின்றன. வருங்காலத்தில் பெற்றோர்களை இப்படித்தான் நடத்த வேண்டும் போல என்கிற பாடங்களை பெற்றோர்களிடமிருந்து தான் பாடம் படிக்கிறார்கள், நாளையதலைமுறையினர்.

    தாத்தாவின் மடியில் தலைவைத்து கதை கேட்டதும் பாட்டியின் அரவணைப்பில் நிலாவைக்காட்டி சோறு சாப்பிட்ட தலைமுறைகளும்  தங்கள் அடுத்த சந்ததியினருக்கு வழிகாட்ட தவறிவிட்டதே தலைமுறை, பொருளாதாரச் சூழல்களின் மொத்த அதகளம். கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாறும் போதே  குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மட்டுமே உறவாகிப் போனார்கள்.. உறவுகளின் அருமைகளே தெரியாமல் வளர்ந்த குழந்தைகள், உறவுகளைக் கூட அந்நியமாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

       பெற்றோர்களைத் தாண்டி பிள்ளைகள் அதிக நேரம் செலவிடுவது பள்ளிகளில்தான். ஆசிரியர்களின் அன்பு கலந்த கண்டிப்புகள் பிள்ளைகளின் மனதில் அச்சு போல் பதிந்துவிடும். எல்லா குழந்தைகளும் கையில் குச்சியை வைத்துக்கொண்டு ”நான் டீச்சராக போறேன்” என்று ஒருமுறையாவது சொல்வார்கள்.

  பள்ளியில் பாராட்டியதை அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று ஆசையோடு ஓடிவரும் குழந்தைகளிடம் ”அதிகமான வேலைடா செல்லம்.. ரொம்ப டென்ஷனா, டயர்டா இருக்கு… ப்ளீஸ்” என்று  சோர்வைக் காட்டும் மம்மிக்கள்  குழந்தைகளுக்கான ரோல்மாடலில் தானும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

    குடும்ப பட்ஜெட், உங்களுக்கான லட்சியங்கள், ஓய்வு நேரங்களில்  பயனுள்ள பொழுதுபோக்கு, எளிய உடற்பயிற்சி, இயலாதவர்களுக்கு செய்யும் தானம், கண்டிப்பு, செல்லம், மரியாதை இவையெல்லாம் உங்கள் பிள்ளைகளின் கண்பார்வையிலேயே நடக்கட்டும். அப்போதுதான் உங்களைப் பார்த்து வளரும்  பிள்ளைகளும் உங்களை ரோல்மாடலாக கொண்டு எதிர்காலத்தை மேலும் திட்டமிடுவார்கள்.

இந்த விஷயத்தில்... நீங்கள் ரோல்மாடல். கண்ணாடிக்கு முன்னே நிற்பது அவர்கள்தான். ஆனால் அங்கே கண்ணாடியில் தெரிவது நீங்கள்தான்!

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close