[X] Close
 

மனைவி என்ன கணவனைத் திருத்தும் மறுவாழ்வு மையமா?- ஃபேஸ்புக்கில் பொங்கிய உளவியல் நிபுணர்


raising-good-wives-and-bad-husbands-this-kerala-woman-s-viral-post-is-a-must-read

  • பாரதி
  • Posted: 23 Apr, 2018 15:44 pm
  • அ+ அ-

சமூகத்தில் நிலவும் ஆண் பெண் பேதத்தை சுட்டிக்காட்டியும் மனைவி என்பவள் முழுக்க முழுக்க கணவனுக்கு பணிவிடை செய்து பராமரித்து கணவனின் தேவைகளப் பூர்த்தி செய்து அவரை நல்வழிப்படுத்தும் நபராக பார்க்கப்படும் அவலத்தை சுட்டிக்காட்டியும் உளவியல் நிபுணர் ஜசீனா பேக்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.
இறைவி எனும் தமிழ்ப் படத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யாவின் வசனம் ஆண் (ஆ-நெடில்) பெண் (பெ-குறில்) என்பதுபோல் குறுகிய பார்வை கொண்ட ஆண்கள் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு இது.
அவர் பதிவின் மொழியாக்கம் பின்வருமாறு:
பெண்ணே நீ என்னவாக இருக்கிறாய்?
"எனது மகன் குடிக்கிறான். எனது மருமகள் சரியில்லை. அவளால் என் மகனை அவன் குடிப்பழக்கத்திலிருந்து மீட்க முடியவில்லை" என எனது வீட்டுப் பணிப்பெண் என்னிடம் புகார் கூறினார்.
மேலும், "வீட்டிற்கு வரும் மருமகள் திறமையானவளாக இருந்தால்தான் கணவன் நல்லவனாக முடியும்" என்று நியாயத்தீர்ப்பையும் வழங்கினார்.
நீ ஒரு நல்ல பெண்ணாக இருக்க வேண்டும். எல்லோருடைய மரியாதையையும் பெற்றவளாக இருக்க வேண்டும் ஏனெனில் ஒருநாள் நீ இன்னொருவரின் மனைவியாக வேண்டும். குடும்ப நெறிமுறைகளை நீ படித்துக் கொள்ள வேண்டும். ஆனால், ந்ல்ல பெண் என்றால் என்ன??? எதன் அடிப்படையில் இச்சமூகம் ஒரு பெண்ணை நல்லவள் எனப் பட்டியலிடுகிறது.
இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே என் வீட்டுப் பணிப் பெண், "என் மகனுக்குத் திருமணமாகி 8 வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக அவள் என்னதான் செய்து கொண்டிருந்தாள் என்று எனக்குத் தெரியவில்லை. அவளால் என் மகனின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை" என்றார்.
உடனே எனக்கு எரிச்சல் வந்தது. சற்று குரலை உயர்த்தி "28 ஆண்டுகளாக நீ என்ன செய்து கொண்டிருந்தாய். ஏன் உன் மகனைத் திருத்தவில்லை எனக் கேட்டேன்?"
அதற்கு அப்பெண், "நான் ஒரு தாய். எனக்கு சில வரையறை இருக்கின்றன. அவன் நான் சொல்வதைக் கேட்க மாட்டான். அதனால், அவன் மனைவிதான் அவனைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று மிகச் சாதாரணமாகப் பேசினார்.
"உன்னால் 28 வருடமாக திருத்த முடியாத உன் மகனை உன் மருமகளால் எப்படி 8 வருடங்களில் திருத்திவிட முடியும்" என்றேன்.
அப்போதும் அந்தப் பெண் அவள் தவறை உணரவில்லை.
"ஆண்கள் பச்சை மாங்காய் போன்றவர்கள் அவர்களை மனைவிதான் பழுக்கவைக்க வேண்டும். மனைவி சரியாக அமையாவிட்டால் அந்த ஆண் கெட்டுப்போய்விடுவான்" என்றார்.
அப்போது நான் குறுக்கிட்டேன், "உன் மகன் ஒரு குடிகாரன் என்பதை திருமணத்துக்கு முன்னதாகவே அந்தப் பெண்ணிடம் தெரிவித்தாயா?" என வினவினேன்.
அதற்கு அவர், "இல்லை. திருமணம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன்" என்றார்.
இது மாதிரியான அர்த்தமற்ற வாக்கியங்களை நான் பலமுறை கடந்து வந்திருக்கிறேன். இவற்றை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த சமூகத்தில் ஒரு பெண் மனைவியாவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால், மனைவியாவதற்கு அவளுக்கு வைக்கப்படும் அளவுகோலில்தான் சிக்கல் இருக்கிறது. அந்த அளவுகோல் அடிமைத்தனமானதாக இருக்கிறது.
ஆணாதிக்க சிந்தனை நிறைந்த இச்சமூகத்தில், பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் ஆண்களைவிட மனமுதிர்ச்சி பெற்றுவிடுகிறார்கள் என்ற நம்பிக்கை திணிக்கப்பட்டிருக்கிறது. 
ஆனால், மருத்துவத்தின்படி அது உண்மையல்ல. ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயதுக்கேற்ற மனப்பக்குவமே இருக்கும். எனவே, பெண்களை ஆசிரியைகளாக, நல்வழிப்படுத்தும் போதகராக, கணவரைத் திருத்தும் பயிற்றுநராக இச்சமூகம் பார்க்கக்கூடாது.
மனைவி என்ன கணவனைத் திருத்தும் மறுவாழ்வு மையமா?
பெண் குழந்தைகளுக்கு நல்ல மனைவியாக எப்படி இருப்பது என்பதைக் கற்பித்தலுக்குப் பதிலாக, ஆண் குழந்தைகளுக்கு நல்ல கணவராக இருப்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுங்கள். 
திருமணத்துக்கு முன் எந்த ஒரு மாப்பிள்ளையிடமும் அவரது தாத்தாவோ அல்லது பெரியப்பாவோ எப்படி நல்ல கணவனாக இருக்க வேண்டும் எனப் பாடமெடுப்பதில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு மட்டுமே ஊரே கற்றுக்கொடுக்கிறது.
பெண்களே நீங்கள்தான் ஆண் சமூகத்தை சீர்திருத்த வந்த ஜென்மங்கள்போல் யாரேனும் உங்களிடம் பேசினால் நீங்கள் அந்த வலையில் சிக்கி விடாதீர்கள். அவர்களை அவர்கள் அம்மாக்கள் திருத்தட்டும். நீங்கள் மனைவியாக மட்டும் இருந்தால்போதும்.
திருமணத்தில் நடக்கும் தவறு எதுவாக இருந்தால் அதற்கு பெண்ணையும் பெண்ணியத்தையும் குறைகூறுவதை இச்சமூகம் இத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும்.
அவளது விவாகரத்து தவறாக விமர்சிக்கப்பட வேண்டியது அல்ல. புதுமைப் பெண்களே துயரத்தை தூக்கி உங்கள் மேல் சுமத்திக் கொள்ளாதீர்கள்.
இதுதான் நிதர்சனம்.
மீண்டும் சொல்கிறேன்... பெண்களே நீங்கள் கணவனைத் திருத்தும் மறுவாழ்வு மையம் அல்ல.
உங்கள் கணவை திருத்தும் மாற்றும் வளர்க்கும் பேணும் பணி உங்களுடையது அல்ல. 
உங்களுக்குத் தேவை ஒரு வாழ்க்கைத் துணையே.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close