[X] Close

பிளாஸ்டிக் வந்த கதை..!


plastic-vandha-kadhai

  • kamadenu
  • Posted: 22 Apr, 2018 12:33 pm
  • அ+ அ-

லதா ரகுநாதன் 

“இங்கே இருந்த என் கல்யாண வேட்டி எங்கே... காணுமே? “

 “எது..  கிழிஞ்சுபோச்சே, அதுவா.. “

“ஒரு பக்கம் அயர்ன் பண்ணும்போது நெருப்புப்பொறி பட்டு ஒரு சின்ன பொட்டு.. அது கிழிசலா? “

“அந்த வேட்டி இருக்காது.. “

”புரியலை ”

”போன மாதம் குளியலறையில் குளிக்க நிறைய வசதியா நல்லா பெரிசா இருக்குன்னு சொன்னீங்கபாருங்க ,அந்தச் சிகப்புபக்கெட்.... வாசலில் பாத்திரக்காரனிடம் அதைப்போட்டுதான் வாங்கினேன். ”

இந்த டைலாக் இல்லாத வீடுகளே இருக்கமுடியாது. காரணம் நம் பிளாஸ்டிக் மோகம். இந்த பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை. சாமான் வாங்கச்சென்றால் பிளாஸ்டிக் பை உட்கார பிளாஸ்டிக் சேர், சாமான்கள் போட்டு வைக்க பிளாஸ்டிக் டப்பாக்கள், பாத் ரூமின் கதவு பிளாஸ்டிக், மூக்குக்கண்ணாடி ப்ரேம் பிளாஸ்டிக், வாஷிங் மெஷின் பிளாஸ்டிக், குளிர்சாதனப்பெட்டியில் பிளாஸ்டிக்.. பிளாஸ்டிக், பை பிளாஸ்டிக்... ஆக... இது இல்லாத இடமே இல்லை.

இப்படிப்பட்ட சர்வவியாபியான் பிளாஸ்டிக், பல யுகங்களாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் யூகித்தால்.. எப்போதும்போல் அது தவறு. தற்போது நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் சிந்தடிக் வகை. அதாவது இயற்கைப்பொருளாக இல்லாமல், சில பொருட்களைக்கொண்டு, வேதியல் மாற்றம் செய்யப்பட்டு மனிதனால் செய்யப்படுகிறது.

இயற்கையாகவே கிடைக்கும் பிளாஸிடிக் என்பது விலங்குகளின் கொம்பு, விலங்குகளின் பால், சில பூச்சிகள், மரம் செடிகளில் இயற்கையாகக் கிடைக்கிறது.

இந்த வஸ்து முதல் முதலில் 1899ஆம் ஆண்டு ஹான்ஸ் வான் பென்சமென் என்பவரால் கண்டறியப்பட்டது. இந்தஜெர்மானியர் தன்னை அறியாமல் செய்த கண்டுபிடிப்பு. வேறு ஏதோ காரணங்களுக்காக சோதனைக்குழாயில் அமிலங்களை உற்றி குலுக்க, அசந்தர்ப்பமாக இந்த பாலிதீன் எனும் வகை பிளாஸ்டிக் வகை ஒரு பச்சைக்கலர் குழகுழப்பாக சோதனைக்குழாயின் அடியில் கண்டுபிடித்தார்.

இது பாலிதீன் என்பதை அறிந்துகொள்ளாமல் இதற்கு பாலிமெதிலீன் என்றபெயர் சூட்டப்பட்டது. மேலே சொன்னபடி இந்த வஸ்து குழகுழப்பாக இருந்ததால் எதற்கும் உபயோகப்படாமல் நாளடைவில் மறக்கப்பட்டது.

இதற்குப்பின் 34 வருடங்களுக்குப்பின், 1907 ம் வருடம் லியோ ஹென்றிக் பேக்லெண்ட் எனும் பெல்ஜியத்தில் பிறந்த அமெரிக்கரால் கண்டுபிடிக்கப்பட்டு பேக்லைட் எனும் நாமகரணத்துடன் வெளியே சுற்ற ஆரம்பித்தது. இந்தக்கண்டுபிடிப்பும் ஒரு தற்செயலே.

ஓடுகளிலிருந்து செய்யப்படும் ஷெல்லாக் எனும் வகை இயற்கை பிளாஸ்டிக்கிற்கு மாற்று கண்டுபிடிக்க பெனாயிலுடன் போர்மல்டீஹைட் எனும் வேதிப்பொருளை குடுவையில் சூடேற்றும்போது அகஸ்மாத்தாகப் பிறந்தது இந்த வகை பிளாஸ்டிக்.

ஆனால் இந்த பிளாஸ்டிக்கின் உபயோகம் ஒவ்வொரு சமயத்திலும் எதிர்பாராமல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவை பாலிமர் என்று சொல்லப்படும் தொடர்ச்சியான அலகுகளால் உருவாகின்றன.

நாம் இப்போது வெகு சாதாரணமாக வாங்கித் தூக்கிப்போடும் பிளாஸ்டிக் பைகள் ஐம்பது வருடம் முன் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கேள்வி எழலாம். எதனால் வேறு வேறு வருடங்களில் வேறு வேறு நபர்களால் இந்த பிளாஸ்டிக்கின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்டது? பதில் சுலபம். இது ஏழு விதமான தனித்தன்மை கொண்ட வஸ்துவாக உள்ளது.

PET, HDPE, PVC, LDPE, PP, PS , Others  என ஒவ்வொன்றின் உபயோகம் வெவ்வேறு மாதிரி. ஆனால் இந்த வெவ்வேறு தன்மையால் பிளாஸ்டிக் எங்கும் நீக்கமற நிறைகிறது. துணிகளில் இது நைலான் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

1934 ம் வருடம் கரோத்தர் என்பவரால் அவர்ஆராய்ச்சிக்கூடத்தில் பிறந்தது இந்த வகை. நம் நடை, உடை,பாவனை என்று அனைத்தையும் புரட்டிப்போட்ட கண்டுபிடிப்பு. ஆனால் இதைக் கண்டுபிடித்த கரோத்தர் ஒரே ஒரு நைலான் சட்டைகூட போட்டுப்பார்க்காமல் - அதாவது இந்தக் கண்டுபிடிப்பு மார்கெட்டிற்கு வருவதற்கு ஒன்றரை வருடம் முன்பே, பிலடெல்பியா ஹோட்டல் ரூமில் சையனைட் மாத்திரையைச் சிரமமின்றி விழுங்கி சிறப்பின்றி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நைலான உடை சாத்தியப்பட்டதன் முக்கிய காரணம் 1970களில் மக்னீஷியம் க்ளோரட் கண்டுபிடிக்கப்பட்டு பிளாஸ்டிக் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்பட்டதுதான். இதனால் இயற்கையாக பிளாஸ்டிக்கிற்கு இருக்கும் விறைப்புத்தன்மை குறைந்து நெகிழ்வடைந்தது. இதே காலகட்டத்தில் தான் நம்மையும் தன்னுடன் கட்டிப்போடக் கயிறு கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படிப் பல விதத்தில் உபயோகப்படுவதற்கு பிளாஸ்டிக்கின் சில வேதியியல் பண்புகளே காரணம். கெமிகல் ரியாக்ஷன், துருப்பிடித்தல், மிகக்குறைவான மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன், எடை விகிதத்தைவிட அதிக வலிமை, ஒளிபுகுத்தன்மை, ஷாக் ப்ரூப், அதிக வருடம் நீடிப்பு, குறைவான் விலை, தண்ணீர் எதிர்ப்பு, குறைந்த நச்சுத்தன்மை.. இவை எல்லாவற்றிற்கும் மேலாகக் குறைந்த விலையில் உற்பத்தி.

பிளாஸ்டிக் பொருள்களில் விழும் விரிசலைச் சரி செய்ய இப்போதுதான் பெவிகால் பெவிக்யுக் என்று விதம்விதமாக அடைக்கப்பட்ட ட்யூப்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.. ஆனால் முப்பது வருடங்களுக்குமுன், உடைந்த ஒரு பிளாஸ்டிக் பாகத்தை மெழுகுவர்த்தியில் உருகவைத்து இந்த விரிசல் மேல் ஒரு கோட்டிங்க் இட்டுஅதைத் தண்ணீரில் சொய்ங் எனும் சத்தம் எழுப்பக் காட்டிய பக்கெட்டுகள் எல்லோர் வீட்டிலும் அவர்கள் குழந்தையின் ஒருவீர விளையாட்டு. இதை இங்கே சொல்லப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு.

இயற்கை பிளாஸ்டிக்கை வீட்டிலேயே செய்யலாம். இதற்குத்தேவை ஒரு கப் ஆடைப்பால், வினீகர் அல்லது எலுமிச்சைச்சாரு இவைமட்டுமே. ஒரு சாஸ்பேனில் பாலை நிதானத்தில் சூடேற்றவேண்டும். பொங்கும் சூட்டிற்கு கொண்டுசெல்லக்கூடாது. பாலில் சிறிதுசிறிதாக வினீகரை விட்டுக் கலக்கவும். பால் விடுபட ஆரம்பமாகும். இது தான் நாம் உண்ணும் பன்னீர் செய்யும்முறை. பாலில் உள்ள இயற்கை பாலிமர்கள் விடுபட்டு பிளாஸ்டிக்காக மாறுகின்றது. இதைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்தால் குழந்தைகளின் கைகளில் பொம்மையாக, பாலாக, பூந்தொட்டியாக உருவெடுக்கும். இது இயற்கை ப்ளாஸ்டிக்.

இதே போல் சிந்தெடிக் பிளாஸ்டிக்கும் வீட்டில் செய்யலாம். அஸிடோன் எனப்படும் அமிலத்தில் நாம் உபயோகப்படுத்தும் யூஸ் அண்ட் த்ரோ வகை பிளாஸ்டிக் பொருட்களை உடைத்துப்போட்டு ஐந்து நிமிடம் காத்திருந்தால் மோல்டபிள் ப்ளாஸ்டிக் கைகளில்.

இப்படி உலகையே மாற்றிப்போட்ட ஒரு பொருள் இனி காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று நம்பினால், இதுவும் தவறு. காரணம்,  நம் மண்ணில் மறித்துப்போக பிளாஸ்டிக் கழிவுகள் ஆயிரம் வருடம் எடுக்குமாம். இது நாம் தெருவோர பஜ்ஜிக்கடையில் வாங்கித்தின்ன பிளாஸ்டிக் கவரை கீழே விட்டெறிகிறோமே அதற்கு.

வீட்டில் உபயோகப்படுத்தும் பெட் பாட்டில்களுக்கு இன்னும் கூடுதல் ஐநூறு வருடம்.  புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் ப்ளாஸ்டிக் பைகள் விட்டெறியப்படுகின்றது. இவை ரீசைக்கிள் செய்யப்படாமல் நிலத்தில் புதைக்கப்பட்டால்.. நம் பூமி பொன் விளையாது ப்ளாஸ்டிக்காக விளையத்தொடங்கிவிடும்.

அதனால் தான் தற்போது நம் நாட்டில் குறைவான டென்ஸிடி கொண்ட பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே... இந்த பிளாஸ்டிக் தேவைக்கேற்றபடி (தேவைக்கு மட்டும்) சரியாக உயயோகித்து, இன்னும் பல காலம் நீடித்து நமக்கு இன்னும் பல பல பயன்கள் ஈட்டித்தருவது.... நம் கைகளில்தான் இருக்கிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close