[X] Close

'உங்கள் மகன், மகளிடம் மனம் விட்டு எப்போது பேசினீர்கள்?'-


ungal-magan-magalidam-manam-vittu-eppodhu-pesineergal

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Apr, 2018 19:39 pm
  • அ+ அ-

ஒரு வீடு, குழந்தைகளைக் கொண்டுதான் இயங்குகிறது. குழந்தைகளே நம் உலகமாகிப் போகிறார்கள். குழந்தைகளின் சந்தோஷமே, நம் குதூகலம் என்றாகிவிடுகிறது. குழந்தைகள்தான் நம் சொத்துகள். சொத்துகளைச் சேர்க்க வேண்டும் என்பதும் குழந்தைகளுக்காகத்தான்!

ஆனால் கண்களை விற்று ஓவியம் வாங்கிக் கொண்டிருக்கிறோம். கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு மிகப்பெரிய விபத்துக்குப் பிறகு, கொட்டாவி விட்டு, விழித்துக்கொள்ளும் அரசாங்கத்தைப் போல், நாமும் மெத்தனம் காட்டுகிறோம்.

சமீபகாலங்களில், மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை வெறும் சம்பவங்களாகக் கடந்துபோக முடிவதில்லை. இது ஒட்டுமொத்த மாணவர்களின் மனோநிலை. இந்த மனசை நிலைப்படுத்துகிற வித்தையை, திடப்படுத்துகிற மென்சொல்லை, எந்த மென்பொருள்களும் கொடுத்துவிடாது. அது நம்மில் இருந்துதான் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். இங்கே நாம் என்பது... பெற்றோரைச் சொல்கிறேன். மற்றோரையும் துணைக்கு வைத்துக் கொள்வோம். ஆனால் பெற்றோரில் இருந்துதான் மாணவர்களாகிய பிள்ளைகளைக் காக்கும் பொறுப்பைத் தொடங்கவேண்டும்.

செல்போனே தாத்தா, சேனல்களே பாட்டி என்று வளருகின்றனர் நம் குழந்தைகள். அவர்களிடம் பேச நமக்கு நேரமில்லை என்கிறோம். அவர்கள் பேசுவதையும் கேட்பதில்லை நாம். என்ன செய்வது... டி.வி. பார்ப்பதற்கு, முகநூலில் நுழைந்து தன்னையே மறப்பதற்கு, இணையதளத்தில் மூழ்கிக் காணாமல் போவதற்கு ஒதுக்குவது போல், நேரத்தை நம் குழந்தைகளுடன் ஒதுக்குவோம். அதற்கென நேரம் ஒதுக்குவோம். இங்கே... காலம் பொன் போன்றது என்பதையும் குழந்தைகள் பொன்னைவிட உயர்ந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

’ஒருமணி நேரம் டி.வி.யை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால். நல்லது. கைகொடுங்கள். உலகின் அதிசயக்கத்தக்க மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

வீட்டில், உங்களுக்கும் உங்கள் செல்போனுக்கும் இடையே பத்துஇருபது மீட்டர் இடைவெளியாவது இருக்குமா. ரொம்ப ரொம்ப நல்லது. இன்னும் வியக்கத்தக்க மனிதர் நீங்கள். உங்கள் மகனிடம் அல்லது மகளிடம் பேசக் கிடைக்கிற இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். அவர்கள் முகத்தில் ஒளி படர்வதையும் மனதில் அழுந்திக் கிடந்த ஏதோவொன்று எங்கோ போய்விட்டதையும் அவர்கள் மட்டும் அல்ல... நாமே கூட உணரமுடியும்.

இனிய பெற்றோர்களே... அன்பு நண்பர்களே... உங்கள் குழந்தைகளை, அதாவது டீன் பருவத்துப் பிள்ளைகளை பக்குவமாய் பழகி, நாலாவிதங்களையும் நாட்டுநடப்புகளையும் சொல்லிப் புரியவைத்தலே தந்தையின் லட்சணம் என்பதை முதலில் உணருங்கள். கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பதோ, கேட்காத ஆனால் விரும்பிய பொருளை வாங்கித் தருவதோ பிள்ளை வளர்ப்பின் பாசநேச, பிரிய அன்புக்கானவை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இங்கேதான் நாமும் சறுக்கி, நம் குழந்தைகளையும் சறுக்கச் செய்கிறோம்.

மனநல ஆலோசகர்கள் பலரிடம் பேசினேன்.

சின்னச் சின்ன டிப்ஸ்... உங்களுக்காக!

1. வெற்றி பெற்றவர்களின் கதைகளைச் சொல்லுங்கள். தப்பே இல்லை. அதுதான் தன்முனைப்புடன் அவர்களை வெற்றிச் சிந்தனைக்குக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

2. அதேசமயம், தோல்வி அடைந்தவர்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், தோற்றுப்போனவர்களின் வலிகளும் வேதனைகளும்தான் இன்னும் இன்னுமான பாடங்கள்; வாழ்க்கைக்கான வேதங்கள்!

3. ‘கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு’ என்றொரு பழமொழி உண்டு. ஆகவே, கஷ்டப்பட்டுப் படித்தால்தான், கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான், கஷ்டப்பட்டு திறமையுடன் இருந்தால்தான், கஷ்டப்பட்டு வளர்ந்தால்தான், கஷ்டப்படாமல் பின்னாளில் வாழமுடியும் என்பதை உணர்த்துங்கள்.

4. ‘மனம்விட்டுப் பேசினேன்’ என்பதே இப்போது இல்லை. எவரிடமும் நாம் மனம்விட்டுப் பேசுவதே இல்லை. இது தருகிற இறுக்கம், மிகக்கொடியது. மனதை நொய்மைப்படுத்திவிடும். மகனிடமும் மகளிடமும் உள்ள இறுக்கம் தளர்த்துங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். ஒருகட்டத்தில்... காது மட்டும் கொடுங்கள். அவர்கள் பேசுவார்கள். கேளுங்கள்.

5. வீட்டில் விஷமம் செய்யும் குழந்தைகளிடம் ‘இரு இரு... உங்க மிஸ்கிட்ட வந்து சொல்றேன்’ என்கிறோம். பள்ளியில் ஏதேனும் குறும்பு செய்தால், ‘இரு இரு... உங்க அப்பாஅம்மாவை வரச்சொல்லி, ஒருநாள் சொல்றேன் பாரு’ என்கிறார்கள் ஆசிரியர்கள். ‘விசையுறு பந்தினைப் போல்’ உடலையும் மனதையும் வளர்க்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். பந்து மாதிரி உதைத்துக் கொண்டே இருந்தால் என்னாவார்கள்?

6. நாம் நடப்பதிலும் பேசுவதிலும்தான் நம் குழந்தைகளின் தெளிவு இருக்கிறது. நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள். முக்கியமாக, ஆசிரியர்கள் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசினால், அவர்களுக்குள் ஆசிரியர் குறித்த மரியாதை மட்டும் அல்ல... உங்களைப் பற்றிய மரியாதையும் கூட போய்விடும். ஜாக்கிரதை.

7. அதிக மார்க் என்பதே இலக்காகிப் போனதுதான், இந்தக் கல்வித் தொழிலின் மூலதனம். மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். அவ்வளவு ஏன்... படிப்புக்கும் வாழ்க்கைக்கும் கூட சம்பந்தமில்லாமல், ஜெயித்தவர்கள் பலர் உண்டு என எடுத்துச் சொல்லுங்கள்.

8. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன், ஆறாம் வகுப்பு படிக்கிறான். மாதாந்திரப் பரிட்சையில், நூத்துக்கு 94 மார்க் எடுத்திருந்தான். ஆனால் அவனை வீட்டு வாசலிலேயே இரண்டுமணி நேரம் நிற்கவைத்துவிட்டார் அவனுடைய அம்மா. ‘என்னங்க இது... தொந்நூத்தி நாலு மார்க் எடுத்திருக்கான். அவனைப் போய் இப்படி பண்றீங்களே..’ என்று கேட்டேன். ‘இப்ப படிப்புல நாட்டம் குறைஞ்சிருச்சு சார். போன தடவை தொந்நூத்தி ஆறு எடுத்திருந்தான். இப்ப 98 எடுக்கறதா ப்ராமிஸ் பண்ணிருந்தான். அதான் இவனுக்கு இந்தத் தண்டனை’ என்றார் சற்றும் குற்ற உணர்ச்சியே இல்லாமல்! இதுபோன்ற தவறை தயவுசெய்து செய்துவிடாதீர்கள்.

நாம் எடுத்த மதிப்பெண்களையும் நாம் செய்த குறும்புகளையும் மனசாட்சியைத் தொட்டு நினைவுப்படுத்திக் கொண்டால், ‘இதெல்லாம் சப்பை மேட்டர் நமக்கு’ என்பது நமக்கே புரியும்.

9. பள்ளியின் சூழல் அறிந்துவைத்திருக்கிறோமா. ஆசிரியர்களின் மனோநிலையைத் தெரிந்து கொண்டிருக்கிறோமா. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன், பஸ் டிரைவர்களின் பெயரோ, அவரின் வீடோ, அவரின் குடும்பச் சூழலோ தெரியுமா நமக்கு. தெரிந்து கொள்ளுங்கள். அதை குழந்தைகளிடம் பேசப் பேச தெளிவு கிடைக்கும். முக்கியமாக... உங்களுக்கும்!

10. முன்பெல்லாம் நம்மை அடி வெளுத்தெடுப்பார்கள் அப்பாவோ அம்மாவோ! விசிறி மட்டையால் விளாசித் தள்ளிவிடுவார்கள். பெற்றோரிடம் அடிவாங்கியதைச் சொல்ல, ஐம்பது கதைகள், அழகிய திரைக்கதையுடன் ஜோராக இருக்கும். ஆனால் அத்தனை அடியையும் திட்டுகளையும் வாங்கி வளர்ந்து இன்றைக்கு ஜெயித்திருக்கிறவர்கள்தான் நாம். ஆனால் நம் குழந்தைகளிடம் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக, கொஞ்சம் சுள்ளென்று ஒரேயொரு வார்த்தை சொன்னாலே நொறுங்கிப் போய்விடுகிறார்களே... உணர்ந்திருக்கிறீர்களா? அடித்துவிட்டது போல், அடித்து உதைத்து வெளுத்தெடுத்தது போல், கரகரவென கண்ணீர்விட்டு, அரைமணி நேர சீரியலைக் கடந்தும் அழுதுகொண்டே இருப்பதை என்றைக்காவது யோசித்தது உண்டா?

இதற்கு முக்கியக் காரணம்... நாம் அவர்களிடம் எப்போதாவது பேசுகிறோம். அப்படி எப்போதாவது பேசுகிறது திட்டுவதை, அந்த ஒரெயொரு சொல்லை, அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஆக, தவறு அந்த ஒரேயொரு சொல்லில் அல்ல. ஒரேயொரு சொல்லை மட்டுமே அவர்களுடன் எப்போதாவது பேசுவதுதான் இங்கே சிக்கல்!

11. அதனால்தான், ஆசிரியர்கள் திட்டினால் தாங்கமுடியவில்லை. வீட்டில் திட்டினால் ஏற்கமுடியவில்லை. பொசுக்கென உடைந்துவிடுகிறார்கள். வீட்டைவிட்டு, பள்ளியைப் புறக்கணித்து, எங்கோ செல்கிறார்கள். காணாது போகிறார்கள். சிலர், இன்னும் நொந்துபோய், தற்கொலை முடிவுக்கும் ஆளாகிறார்கள்.

முதலில் நம் வீட்டில் இருந்துதான் சிக்கல்களையும் சிடுக்குகளையும் களைந்தெடுக்க வேண்டும். ‘டீச்சர் சரியில்லை சார். எப்பப் பாத்தாலும் சிடுசிடுன்னு இருக்காங்க’ என்று சொல்வதெல்லாம் எஸ்கேபிஸம். தப்பிக்க வேண்டாம். பழியைப் பிறர் மீது போட வேண்டிய அவசியமில்லை. இவற்றையும் குழந்தைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘இந்த உலகமே நம்மள எதிர்த்தாலும், நமக்கு அப்பாவும் அம்மாவும் மிகப்பெரிய துணை’ என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களே செய்த தவறை, அவர்களே சொல்லும் அளவுக்கு, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான தொடர்பு இருக்கட்டும். தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவதுதான் இங்கே பிரச்னை வேர்பிடிக்கக் காரணம்!

வேர் விட்டு வளர வேண்டிய விதைகள் நம் குழந்தைகள். கண்ணீர் விட்டு வளர்த்து, ஆளாக்குகிற முனைப்பெல்லாம் சரிதான். அந்த விதைக்கு உரமிடுங்கள். உரமூட்டுங்கள். வலிமையுள்ளதே எஞ்சும்! வலிமைமிக்கவர்களாக குழந்தைகளை உருவாக்குவதும் ஒருவகையில்... அறம் என உணருங்கள்; உணர்வோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close