[X] Close

உங்கள் பிள்ளைகளின் சமூக வலைதளக் கணக்குகளை கவனியுங்கள்!


ungal-pilaikagalin-social-media-kanakku-watch-it

  • kamadenu
  • Posted: 20 Apr, 2018 19:19 pm
  • அ+ அ-

நீரை.மகேந்திரன்

சமூக வலைதள குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த நாட்களில், அதில் பதின் பருவத்தினர் செயல்பாடுகள் அச்சமூட்டுவதாக உள்ளன.

பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு அதை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று அக்கறை கொள்ளும் அளவுக்கு, அதில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து பெற்றோர்கள் விலகி நிற்கின்றனர். பெற்றோர்கள் இந்த பொறுப்பிலிருந்து விலகி நிற்பதும் இள வயதினரின் சமூகக் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.

சமீபத்தில் வேலூரில் செல்போனுக்கான சக நண்பனையே இரண்டு பள்ளி மாணவர்கள் கொலை செய்துள்ளனர் என்பது அதன் உச்சம். செல்போன் மற்றும் அதன் பயன்பாடுகள் தரும் அழுத்தம் பதின் வயது குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் மன அழுத்தம் குறித்து தொடர்ச்சியாக மருத்துவ உலகம் சுட்டிக் காட்டி வருகிறது.

இது தொடர்பாக மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

''முதலில் தொழில்நுட்ப வசதிகளின் நன்மை தீமைகள் குறித்து பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி இருக்கிறோமா என்பதைவிட, பெற்றோர்களுக்கு அது குறித்து போதிய அறிவு இருக்கின்றதா ? என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.

பேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் மனநிலை, பக்குவம், பாலியல் விஷயங்களை தங்களிடம் பகிர்ந்துகொள்ளும் போக்குகளை பெற்றோர்கள் உருவாக்குவதில்லை.

ஆனால் நேரமில்லை என்கிற காரணங்களை முன் வைத்து குழந்தைகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும், உதவவும் முடியாமல் பெற்றோர்கள் உள்ளனர். அதாவது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வே முதலில் அவசியமானதாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் லைக் குறைந்தால் வளர்ந்தவர்களே மன நெருக்கடிக்கு ஆளாகும் போது சவால்களை எதிர்கொள்ளும் பருவத்தில் ஒவ்வொரு லைக்கிற்கு பின்னும் அவர்களுக்கு அழுத்தங்கள் கூடுகின்றன முன்பை விட இந்த முறை அதிக லைக் வாங்க வேண்டும் என அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. இந்த அழுத்தங்களைத்தான் நாம் கவனிக்கத் தவறுகிறோம்.

பெரும்பாலான பதின் பருவத்தினர் பேஸ்புக் பயன்படுத்துவதால் தங்களுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். பள்ளிகளில் பிற மாணவர்களை விட பேஸ்புக்கில் அதிக லைக் வாங்க வேண்டும், அதிக படங்கள் பகிர்ந்துகொள்வது பெருமை என்று நினைக்கிறார்கள்.

இந்த வயதில் தமது பேஸ்புக் பக்கத்தில் அறியாத நூற்றுக்கணக்கானவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். நண்பர்களின் எண்ணிக்கை பெருமை. ஆனால் அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளை அவர்கள் உணர்வதில்லை. பெற்றோர்களும் அதனை அறிவதில்லை அல்லது கண்டுகொள்வதே இல்லை.

பதின் பருவத்தில் பேஸ்புக் தரும் மன அழுத்தத்தை சரியான நேரத்தில் அறிந்து கொள்ளவில்லை என்றால் அது அவர்களின் எதிர்காலத்தையே பாதிப்படையச் செய்துவிடும். அதனால்தான் இங்கு பெற்றோருக்கும் அடிப்படை புரிதல் உருவாக்க வேண்டும் என்கிறேன்.

உரையாடல் களம்

சமூக வலைதளங்கள் நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் உரையாடுவதற்கான ஒரு பாலம்தான் என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும்.

தேவையில்லாமல் குடும்ப புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை இடுவதும், அறிமுகம் இல்லாத நண்பர்களை இணைப்பது, அதிக லைக் வாங்க வேண்டும் என்பதற்காக அபாய செல்ஃபி எடுப்பது, தனிப்பட்ட முகவரி, செல்போன் எண் அளிப்பது போன்றவை பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது என்கிற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் இயங்குவதை குறைக்கவும் செய்யுங்கள்.

இதை பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக செய்யவும் கூடாது என்பதும் முக்கியம்.

தீர்வு என்ன?

பெற்றோர்களும் தமக்கான ஒரு வலைதளக் கணக்கை வைத்துக் கொள்வது நல்லது. இதில் பிள்ளைகளை இணைத்துக்கொண்டு அவர்களது நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.

உங்களை இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்கள் அழுத்தத்திற்கு ஆட்பட வாய்ப்புள்ளது என உணரத் தொடங்குங்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்'' என்றார் மனநல ஆலோசகர் ராஜ மீனாட்சி.

'அப்படி என்னதான் இருக்கு அந்த கருமத்த வச்சிட்டு, வந்து சாப்பிடுடா' என்று அலப்பறை செய்வதைவிட கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close