[X] Close
 

பனை விசிறி... உங்க வீட்ல இருக்கா? விசிறி இதம்... விசிறி தானம் புண்ணியம்!


panai-visiri-idham-punniyam

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Apr, 2018 17:02 pm
  • அ+ அ-

கை மேல் பலன் உண்டு என்று சொல்வோமே. இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ... நிச்சயம் விசிறிக்கு ரொம்பவே பொருந்தும்.

விசிறி இல்லாத வீடுகளே இல்லை என்ற காலமெல்லாம் உண்டு. இப்போது கூட, வீட்டுப் பரணில், பீரோவின் மேலே என்று விசிறிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். ஆனால், ‘பொறுத்தது போதும் மனோகரா... பொங்கி எழு’ என்கிற விதமாக, ‘ரெஸ்ட் எடுத்தது போதும்... விசிறி வீச வா’ என்று விசிறியை அழைக்கும் காலம் இது. கோடை காலம்.

விசிறிகளில் எத்தனையெத்தனையோ வகைகள் இருக்கலாம். பிளாஸ்டிக் விசிறிகள் கூட இருக்கின்றன. ஆனால் பனையோலை விசிறியின் குளுமை, எத்தனை டன் ஏ.ஸிக்கும் ஈடாகாது.

வீட்டில், எல்லா அறைகளிலும் மின்விசிறி இருக்கும். போதாக்குறைக்கு டேபிள் ஃபேன், ஃபெடஸ்டல் ஃபேன் என்று அபூர்வ சகோதரர்கள் கமல் ரேஞ்சுக்கு, குள்ளமாகவும் உயரமாகவும் இருக்கும். ‘இந்த வெயிலுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்’ என்று படுக்கையறையில், ஏஸியை வாங்கி மாட்டியிருப்போம். ஆனால் என்ன? மின்சாரம் இருந்தால்தானே இவையெல்லாம் வேலை செய்யும். கையே மின்சாரம், கையே சுவிட்ச், கையே ஃபெடஸ்டல்... என பனைவிசிறியின் காற்று, தாலாட்டுப் பாடும்.

அப்போதெல்லாம் வீட்டில், எட்டுப்பத்து விசிறிகள் இருக்கும். கூட்டுக்குடித்தன காலம் என்பதால், விசிறியும் கூடித்தான் இருக்கும். சுள்ளென்று வெயில் பட்டையைக் கிளப்ப, முந்தாநேத்து வைத்த பழையதில் கொஞ்சம் உப்பு போட்டு, நன்றாக திரவ உணவுபோலாக்கி, மாங்காய்த்தொக்கையும் சின்ன வெங்காயத்தையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால், வயிறே மண்பானை அளவுக்கு (அய்யய்யோ... நான் சைஸைச் சொல்லலீங்க), ஜில்லுன்னு குளிர்ந்து போயிரும்.

கொஞ்சநேரம் கழித்து, ஒரு துண்டை எடுத்து, தண்ணீரில் நனைத்து, நன்றாகப் பிழிந்து, அதை விரித்து, அதில் படுத்துக் கொண்டு, நாமே நமக்கு விசிறியாக இருப்பதும் நமக்கு நாமே விசிறிவிட்டுக் கொள்வதும் அடடா ரகம். அற்புத அனுபவம். ஒருகையில் விசிறிக்கொண்டிருக்க, இன்னொரு கையால் புத்தகத்தைத் தாங்கிக் கொண்டு படித்துக் கொண்டே இருக்க... எப்போது தூக்கம் வந்தது... எப்போது கண்களை மூடினோம்... எப்போது தூங்கிப்போனோம் என்பதெல்லாம் அந்த விசிறிக்கே மட்டுமே தெரிந்த ரகசியம்.

கோடை காலம், மின்சாரம் எப்போது வேண்டுமானாலும் நிறுத்துவார்கள். ஆகவே விசிறியின் உதவி, வீட்டுக்குத் தேவை. அடிக்கடி ஹோமம், பூஜை என்று செய்பவர்கள் வீட்டில், எப்படியும் நான்கைந்து விசிறிகளாவது இருக்கும். ஹோமபலன்களில், இதுவும் அடக்கம் போல!

வருடந்தோறும் காலண்டர் தருவது போல, டைரி கொடுப்பது போல, திருப்பதி போயிட்டு வந்தேன் இந்தாங்க லட்டு... பழநிக்குப் போயிட்டு வந்தேன், இந்தாங்க பஞ்சாமிர்தம்... என்பது போல, கோடை வந்துவிட்டால் நண்பர் ஒருவர், ஐம்பது விசிறி வாங்கி, அவர் தெருவில் உள்ள பலருக்கும் வழங்குவார். ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டதற்கு, ‘விசிறி எல்லாருக்கும் உதவி. உபயோகமா இருக்கும். போதாக்குறைக்கு, விசிறி தானம் பண்றது மகாபுண்ணியம்’ என்று சாஸ்திர ரீதியாக விளக்கினார்.

இன்னொரு நண்பர் இருக்கிறார். அவருடைய குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கித் தந்திருக்கிறார். அவ்வப்போது, புதிய பத்துரூபாய் நோட்டு, ஐந்து ரூபாய் காயின் என்று தந்துகொண்டே இருப்பார். குழந்தைகளும் போட்டுக் கொண்டே வருவார்கள். கோடை காலத்தில், உண்டியல் திறக்கப்படும். அதில் எவ்வளவு காசு இருக்கிறதோ கூட கொஞ்சம் பணம் போட்டு, நூறு விசிறிகள் வாங்கி, குழந்தைகள் கையாலேயே பார்க்கிற வயதான பெரியவர்களுக்கும் பாட்டியம்மாக்களுக்கும் அக்கம்பக்கத்தாரும் என வழங்கச் செய்வார்.

விசிறியால் குளிர்ந்துபோவது இருக்கட்டும். இப்படி விசிறி தருபவர்களாலும் குளிர்ந்து போவார்கள் அவர்கள்!

முதலில் உங்கள் வீட்டில் விசிறி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் வீட்டில் எல்லோருக்கும் ஆளுக்கொரு விசிறி வாங்குங்கள். அப்படியே, உங்களால் முடிந்த அளவுக்கு விசிறிகள் வாங்கி, பலருக்கும் வழங்குங்கள்.

விசிறியின் காற்றும் இதம். விசிறியைத் தருவதும் புண்ணியம்.  

 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close