[X] Close

'என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா..!’ - ஜனகராஜா நீங்கள்?


en-pondatti-oorukku-poyitta-janagaraj

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Apr, 2018 11:46 am
  • அ+ அ-

கோடைகாலம் வந்துவிட்டால், இரண்டுவிஷயங்கள் பேசுபொருளாகிவிடும். ஒன்று... வெயில். இன்னொன்று... மனைவியும் குழந்தைகளும் லீவுக்கு ஊருக்குச் செல்வது!

வருடம் 365 நாளும் ஒரு மிஷின் போல் உழைத்துக் கொண்டிருக்கும் மனைவியருக்கு, இந்தக் கோடை மாதம்தான் குதூகலமான மாதம். அக்கடா என்று குழந்தைகளை சாக்காக வைத்து, ஊருக்குப் போய் கொஞ்சமே கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆகலாம்.

ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் பர்மிஷன் செய்து, ‘கிராண்டட்’ என்று கையெழுத்து சம்மதங்களைத் தந்துவிடமாட்டார்கள் கணவன்மார்கள்.

‘காலைல எழுந்ததிலேருந்து பசங்களுக்குப் பாத்துப்பாத்து செய்யணும். உங்களுத் தேவையானதை பண்ணிக் கொடுக்கணும். வீடுவாசலைப் பாத்துக்கணும். அக்கடான்னு ஒரு நாலுநாள் எங்கேயாவது போகமுடியுதா’ என்று ஜனவரியிலிருந்தே பிட்டைப் போடுவார்கள் பெண்கள்.

‘ஏன் இப்படி அலுப்பும்சலிப்புமா புலம்பறே. ஏப்ரல் மேல ஸ்கூல் லீவு விட்டதும் போயிட்டுவாயேன். யாரு வேணாம்னு சொல்றது?’ என்று அக்கறையுடன் சமாளிப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் உற்சாகம் பீர்பாட்டில் திறந்த எபெக்ட் சத்தம் கேட்கும்.

‘ஊருக்குப் போறேங்கறே. உங்க ஊரு பொட்டக்காடு. அங்கே போய் என்ன செய்வே. பசங்களுக்கும் போரடிக்கும். நல்ல ஊருடி உங்க கிராமம்’ என்று ஊரைக் குத்திக்காட்டுவார்கள்.

ஆனால், சொந்த ஊர் எப்படியிருந்தாலும் சொர்க்கம்தான். இப்போது நம்மை அடையாளம் கண்டு பேசுபவர்கள் குறைவுதான் என்றாலும் கூட, சொந்த ஊரில் தெருவில் நடப்பதே கம்பீரம்தான்.

பெட்டிக்கடைக்கார தாத்தா, பூ விற்கும் பாட்டி என்று யாரிடமாவது ‘நல்லாருக்கீங்களா? என்னைத் தெரியுதா?’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, குசலம் விசாரிப்பது, குதூகலப் பெருமைதான். ‘பரவாயில்லியே... மறக்காம இருக்கியே...’ என்று அவர்கள் நெகிழ, சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் பிளாஷ்பேக்கில் மூழ்குவார்கள். பசங்களிடம்... விளையாடிய இடம், அடிவாங்கிய இடம், அழுதுகொண்டே உட்கார்ந்த கோயில் மண்டபம், சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த குளக்கரை... என பார்க்கப் பார்க்க உள்ளம் லேசாகும்.

சரி... இந்த எபிசோடு இப்போது எதற்கு?

பரீட்சை முடிந்து, விடுமுறையும் விட்டாச்சு. ஊருக்குப் போக போனமாதமே டிக்கெட்டும் போட்டாச்சு. மனைவியையும் குழந்தைகளையும் ஸ்டேஷன் வரை சென்று, பிளாட்பாரம் வரை சென்று, ரயிலுக்கு அருகில் நின்று, சோகம் வழிய, டாட்டா காட்டி வழியனுப்பி வைத்தாயிற்று. சென்னை எக்மோரில் எடுத்த ரயில் தாம்பரம் கூட தாண்டியிருக்காது., ‘ஐ மிஸ் யூ’ மெசேஜ் போட்டு, ஹாட்டின் சிம்பள் பறக்கவிட்ட அதேகையுடன்... ‘எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா....’ என்று ஜனகராஜ் மாதிரி கத்தாத குறையாக, முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவார்கள்.

நண்பர்களுக்கு போன் பறக்கும். பஞ்சதந்திரம் ஸ்டைலில், அவசரம் அவசரமாக கான் - கால் போட்டுப் பேசுவார்கள்.

‘ஒருத்தன் சரக்கு வாங்கிட்டு வருவான். இன்னொருத்தன் சைடுடிஷ் வாங்கிட்டு வந்துருவான். நான் பக்கத்துல இருக்கிற கடைல, சுடச்சுட டிபனை வாங்கிவைச்சிருவேன்.

எட்டாவது படிக்கும்போது லவ் பண்ணின பொண்ணை, புருஷனோடயும் குழந்தைங்களோடயும் பாத்ததை ஒருத்தன் சொல்லுவான். கண்ணதாசன் பாட்டுகளா எடுத்துவிடுவான் இன்னொருத்தன். கமல் ரஜினில ஆரம்பிச்சு, ஸ்ரீதேவி மரணத்துக்கு இரங்கல் தெரிவிச்சு, மோடி மேல கோபப்பட்டு, வெயிலை சமாளிக்கமுடியலைன்னு புலம்பித்தள்ளி, ஆபீஸ் பிரச்சினையை பெருசாக்கி, கடன் தொல்லையிலேருந்து எப்ப மீள்வேனோன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி... ஊருக்குப் போனாத்தான் பொண்டாட்டிக்கு சார்ஜ் ஏறினா மாதிரி. பொண்டாட்டி போயிட்டா, இப்படி நண்பர்களோட இருக்கறதே நமக்கெல்லாம் சார்ஜ்தான்’ என்றார் நண்பர் ஒருவர்.

இன்னொரு நண்பர் சொன்னது வேற லெவல்.

‘இந்த உலகத்துல எல்லாப் பொண்டாட்டிங்களும் பிரம்பு எடுக்காத டீச்சர் மாதிரி. ஊருக்குப் போனவ, நிம்மதியா இருக்கவேண்டியதுதானே. அவளும் இருக்கறதில்ல. நம்மளையும் இருக்கவிடுறதில்ல. காலை அஞ்சுமணிக்கு போன். பதறியடிச்சு எடுத்தா, ‘ஏங்க, மணி அஞ்சாயிருச்சுங்க. எழுந்திருக்கலையா?’ன்னு ஒரு கேள்வி. ஆறு மணிக்கு இன்னொரு போன். ‘காய்ச்சின பால் வைச்சிருக்கேன். அதை எடுத்து காபி போட்டுக் குடிங்க. பால் வந்துருச்சா. அதைக் காய்ச்சி, பிரிட்ஜ்ல வைச்சிட்டுப் போங்க’ அப்படின்னு ஒருபோன். ஏழு மணிக்கு ‘குளிச்சீங்களா. ஹீட்டர் போட்டீங்களா. ஆஃப் பண்ணிட்டீங்களா. மறக்காம ஆஃப் பண்ணிருங்க’! அடுத்தாப்ல, பால்கனியைத் திறந்தீங்கன்னா, மறக்காம பூட்டிருங்க. கியாஸ் ஆஃப் பண்ணியாச்சான்னு பாத்துக்கங்க’ என்று அடுத்த போன். ‘இவளை ஊருக்கு அனுப்பிச்சது தப்பாப் போச்சுங்க...’ என்று அலுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்னொரு நண்பர். அப்படியே உல்டா. ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, இவரிடமிருந்து மனைவிக்குப் போன் பறந்துகொண்டே இருக்கும். ’பீரோ சாவியை எங்கே வைச்சே?’, ‘இபி கார்டு ஒரு இடத்துல வையுன்னு எத்தனைதடவை சொல்லிருக்கேன்?’, ‘ஊருக்குப் போகப்போறோம்னுதான் முன்னாடியே தெரியுமே. அப்புறம் எதுக்கு பிரிட்ஜ் கொள்ளாத அளவுக்கு காய்கறிங்களை வாங்கி அடைச்சி வைச்சிருக்கே?’, ‘கொசுவத்தி தீர்ந்துருச்சுன்னா வாங்கிவைக்கமாட்டியா? எங்கிட்டயாவது சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல. இன்னிக்கி தூக்கம் போச்சு போ’ என்று தடுக்கிவிழுந்தால் போன் போடுவார்கள்.

எப்போதும் எதற்கெடுத்தாலும் எல்லா வேலைகளைச் செய்வதற்கும் மனைவி இருக்கிறாள் என்பதுதான் இங்கே மிகப்பெரிய சிக்கல். ஊருக்குப் போனாலும் கூட, முதல் ரெண்டுநாலு நாட்கள், உற்சாகமாகவே கழியும். ஆனால் அடுத்தடுத்த நாளில், ‘பாவம் அவரு... ஹோட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்காது. என்ன செய்றாரோ... எப்படிச் சமாளிக்கிறாரோ...’ என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.

‘’மனைவி இருக்கறவரைக்கும்தான் அது வீடு. அப்புறம் அது பேச்சிலர்ஸ் ரூம் மாதிரியாயிரும். தினமும் வீடு கூட்றதுக்கே, அவங்களுக்குக் கோயில் கட்டணும். இந்தப் பக்கம் குப்பையைக் கூட்டிக்கிட்டே போனா, தடக்குன்னு அந்தப் பக்கம் கொஞ்சம் அப்படியே விட்ருவேன். காலை எந்திரிச்சோமா, காபியைக் குடிச்சோமா, காலைக்கடன்களை முடிச்சோமா, குளிச்சோமா, டிபன் சாப்பிட்டோமா, வேலைக்குக் கிளம்பினோமான்னு இருந்துட்டு, காலைல எந்திருச்சு, நாமளே காபி போட்டு, வீடு மொத்தமும் கூட்டிப்பெருக்கி, பூஜை ரூம்ல விளக்கேத்திவைச்சிட்டு, அந்த விளக்கு, மலையேறுற வரைக்கும் காத்திருந்து, லைட், ஃபேனையெல்லாம் ஆஃப் பண்ணிட்டோமானு ஒருதடவைக்கு ரெண்டுதடவை பாத்துட்டு, வீட்டைப் பூட்டிட்டு போறதுக்குள்ளே, அப்படியொரு டென்ஷன். பிபி எகிறிரும் போங்க.

ஆனா, என்ன பண்றது? ஊர்ல இருக்கிற எங்க அப்பாஅம்மாவும் அவங்க அப்பாஅம்மாவும் அவளையும் குழந்தைங்களையும் பாத்தாலே பாதி தெம்பாயிருவாங்க. ஒருபத்துப்பதினஞ்சு நாள் இவங்களையெல்லாம் கூட இருந்து பாத்துக்கிட்டோம்னு அவளுக்கும் மனசளவுல இருக்கிற குற்றவுணர்ச்சி வடிஞ்சு போயிரும். குழந்தைகளை சாக்கா வைச்சி, மனைவிக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்ததுல, எனக்கும் நிம்மதி’’ என்று செண்டிமெண்ட் கலந்து நெகிழ்ந்து சொன்னார்.

‘’முத ரெண்டுநாள்தான் ஜாலி ரவுசு எல்லாமே. மூணாவது நாள் டயர்டாயிருவோம். முத நாள் தண்ணியடிச்சிட்டு, அடுத்த நாள் ஆபீஸ்ல சரியாவும் வேலைபாக்க முடியாது. அதேபோல, காலைல டிபனுக்கு ஒரு கடை, மத்தியானம் சாப்பாட்டுக்கு ஒரு கடை, நைட்டு டிபனுக்கு ஒரு கடைன்னு சுடச்சுட, செம டேஸ்ட்டோட நாலுநாள் சாப்பிடலாம். நல்லா சப்புக்கொட்டி சாப்பிடலாம். அப்புறம் காசும் கன்னாபின்னானு செலவாகுதேடா சாமீன்னு ஒரு நெனைப்பு, மண்டைக்குள்ளே கிர்ருங்கும். மனைவி ஞாபகம் வந்துரும்.

ஆனா என்ன... மனைவி இருக்கும் போது, அவ சமைக்கும்போது, உப்பு போடலை, காரம் ஜாஸ்தி, சாம்பார் தண்ணியா இருக்கு. இட்லி ஏன் இப்படி கல்லுமாதிரி இருக்குன்னு திட்டிக்கிட்டே இருப்போம். கத்திக்கிட்டே இருப்போம். அவ ஊருக்குப் போயிட்ட அஞ்சாம்நாள்லயே, மனசு, மனைவிக்கு நன்றி சொல்லும். மனைவிங்கறவ, அம்மா மாதிரி. சாமீ மாதிரி. குலசாமி மாதிரி. பக்கத்துல இருக்கும்போதே அவளோட அருமை தெரிஞ்சிருச்சுன்னா, பொண்டாட்டி ஊருக்குப் போயிருக்கிற ஒவ்வொரு நாளும் நரகம்தான். செம கொடுமைங்க அது!

‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ எனும் ஆரம்ப அதகளம் போகப்போக, ஸ்ருதி குறைந்து, ‘என் பொண்டாட்டி இன்னிக்கு ஊர்லேருந்து வர்றா’ என்று குதூகலத்துடன் கொண்டாடச் செய்யும் என்கிறார்கள், அனுபவஸ்தர்கள்.

நீங்க எப்படி?

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close