[X] Close

மனசை லேசாக்கும் ஈஸி சேர்! உங்க வீட்ல இருக்கா?


easy-chair-manasai-lesakkum

  • வி.ராம்ஜி
  • Posted: 18 Apr, 2018 17:43 pm
  • அ+ அ-

நாற்காலிக் கனவுதான் குழப்பத்தையும் மன அமைதியின்மையும் தரும். ஆனால் நாற்காலி என்பது எப்போதுமே மனதுக்கு சாந்தத்தையே அள்ளி வழங்கும். அதிலும் தனியிடம் பிடித்திருப்பது ஈஸி சேர்.

அந்தக் காலத்திலெல்லாம் எல்லார் வீடுகளிலும் இந்த ஈஸி சேர் சர்வ நிச்சயமாக இருக்கும். உட்கார்ந்துகொள்ளலாம். ஆனால் நாற்காலி கிடையாது. படுத்துக் கொள்ளலாம். ஆனால் பெஞ்ச் அல்லது கட்டில் கிடையாது இது. அப்படியும் இப்படியும் இல்லாமல், சாய்ந்துகொண்டிருக்க, அப்படியொரு சுகானுபவத்தைக் கொடுக்கவல்லது ஈஸி சேர்.

ஈஸி சேர் என்பது அந்தக்காலத்தில் மரத்தால் செய்யப்பட்டு மிகக் கனமாக இருக்கும். ஒரு குழந்தையைத் தூக்குவது போலெல்லாம் தூக்கிவிடமுடியாது. இரண்டு பக்கமும் உள்ள கைப்பிடியே, நம் கைகளை விட கனம் பொருந்தியதாக இருக்கும். இந்த கைப்பிடிக்குக் கீழே இன்னொரு கைப்பிடி போல, அதே அளவுக்கு நைஸாக, லேசாக எட்டிப்பார்த்தபடி இருக்கும். அதை, தனியே இழுத்தால், இந்தப் பக்கம் கைப்பிடிக்கும் அந்தப்பக்க கைப்பிடிக்கும் பாலம் அமைத்தது போல இருக்கும். மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டதும் நாம் விழாமல் இருப்பதற்கு ஒரு கொக்கியைப் போடுவோமே... அதேபோல் இந்த இரண்டுகைப்பிடிக்கும் நடுவே, பாண்டிச்சேரி பார்டர் செக்போஸ்ட்டில் உள்ள கேட் போல் நிற்கும்.

ஆனால் இதன் பயன் என்ன தெரியுமா?

இதில் புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம். எழுதலாம். சாயந்திர நேரத்தில், சுடச்சுட பஜ்ஜியோ ரவாகிச்சடியோ சாப்பிடலாம். பேரனையோ பேத்தியையோ இந்தக் கட்டையில் உட்கார வைத்துக் கொண்டு, கொஞ்சுவார்கள் தாத்தாக்கள்.

காலப்போக்கில், வீடுகள் சுருங்குகிற வேளையில், இந்த ஈஸிசேரும் சுருங்கித்தான் போனது. ஈஸிசேரை மடக்கி, பீரோவுக்குப் பின்னே வைத்துக்கொள்ளலாம். ஒரு ஸ்ட்ரெச்சர் போலான அமைப்பில், மூன்று பல் வரிசைகள் இருக்கும். மேல் பகுதி ஸ்ட்ரெச்சரில் உள்ள கால்களை, இந்த பல் வரிசையில் மூன்றாவதிலோ ரெண்டாவதிலோ முதலாவதிலோ வைத்துக் கொள்ளலாம். அதற்குத் தக்கபடி, நன்றாக சாய்ந்து, நடுவாந்திரமாக சாய்ந்து, லேசாக சாய்ந்து என்று மூன்று விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கில்லித்தாண்டு ஞாபகம் இருக்கிறதா? சின்ன கழி, பெரிய கழி. இதில் பெரிய கழி இரண்டு கொடுப்பார்கள். நாம் உட்காருவதற்கான, சாய்ந்துகொள்வதற்கான துணியின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் அந்த உருளைக்கழிகளை செருகுவதற்கு வழி இருக்கும். அந்தக் கழிகள்தான்... அந்தத் துணியில் சாய்ந்திருக்கும் நம்மை அரவணைத்துக் காக்கும் வல்லமை கொண்டவை.

எனக்குத் தெரிந்து, கிராமங்களிலும் கிராமங்களையொட்டி உள்ள நகரங்களிலும் நிறைய வீடுகளில், மதிய நேரங்களில், இந்த வெயில்காலப் பொழுதுகளில், மரத்தடியில் ஈஸிசேரைப் போட்டுக்கொண்டு, கையில் பனையோலை விசிறியை வைத்து விசிறிக் கொண்டு, அப்படியே தூங்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட, தாயின் மடி தருகிற அமைதிக்கு நிகரானது என்று அனுபவித்தவர்கள் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்கள்.

நவீனங்கள் எனும் பெயரில், ஒவ்வொரு விஷயங்களும் பொருட்களும் புனரமைக்கப்பட்டுக் கொண்டே வரும் அல்லவா. அப்படித்தான் ஈஸிசேரும் புதிதாக புனருத்தாரணம் செய்யப்பட்டது. இப்போது உள்ள ஈஸிசேர்... உண்மையிலேயே தூக்குவதற்கு ஈஸியான சேர்தான். ஒருவித அலுமினியத்தில் செய்யப்பட்ட, மிக மிக இலகுவான இந்த ஈஸிசேர்... யார்வேண்டுமானாலும் தூக்கி, மடக்கி, சாய்த்து வைக்கலாம்.

கொசுத்தொல்லை இல்லையெனில் (ஹலோ... எந்த ஊர்ல கொசு இல்ல) இந்தக் கோடையின் இரவுகளை, வாசலில் ஈஸிசேர் போட்டு, அதில் படுத்தபடியே தூங்கிக் கழிக்கலாம். அப்படி ஈஸிசேரைப் பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

அப்போது எல்லா வீடுகளிலும் இருந்த ஈஸி சேர், இப்போது கொஞ்சம்கொஞ்சமாக குறைந்து காணக்கிடைக்காத அரிதான பொருளாகிவிட்டதுதான், வேதனை.

‘சொந்தமா வீடு வாங்கணும். ஹால்ல பிரமாண்டமான சோபா வாங்கணும். ஊஞ்சல் வாங்கணும். பசங்க எழுதறதுக்கு டேபிள் மேட் வாங்கணும். டேபிள் பேனுக்கு ஒரு ஸ்டூல் வாங்கணும். சின்னதா ஒரு குட்டி ஸ்டூல் வாங்கணும்’ என்றெல்லாம் கனவுப் பட்டியல் போடுகிறவர்கள், ஒரு ஈஸிசேர் வாங்கணும் என்று பட்டியலுக்குள் சேர்க்கவே இல்லை என்பதும் பெருந்துயரம்தான். சொல்லப்போனால், ஈஸிசேர் தரும் கனவுகள், சொல்லிமாளாதவை என்பது அனுபவித்தால்தான் புரியும்.

ஊரில் இருக்கிற அப்பாவுக்கோ அம்மாவுக்கோ, வயதான மாமனார் மாமியாருக்கோ, ஆபீஸ்ல, வண்டில, வீட்லன்னு உக்கார்ந்து உக்கார்ந்து முதுகு வலி என்று புலம்பி வருந்துகிற அண்ணன்களுக்கோ, அக்கம்பக்கத்து நண்பர்களுக்கோ... அவ்வளவு ஏன் உங்களுக்கே உங்களுக்காக ஒரு ஈஸி சேர்... வாங்கித்தான் பாருங்களேன். அதில் சாய்ந்துதான் கண்மூடி இருங்களேன்.

பால்யங்கள், சீரியல் பல்பு வெளிச்சமென கண் சிமிட்டும். வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மாயக்கரமென மருந்து தடவும். வலி போக்கும். மனசை லேசாக்கும். ‘டேக் இட் ஈஸி’ என்று இருக்கச் செய்யும். அதனால்தான் அதற்கு ஈஸிசேர் என்றே பெயர் வந்திருக்கும்!

ஈஸி சேர்... வாங்கறது கஷ்டமான விஷயமும் இல்லை; விலையும் அதிகமில்லை!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close