[X] Close

'சம்மர் க்ளாஸ்’னு குழந்தைகளை படுத்தாதீங்க!


summaer-class-kuzhadhaigalai-paduthatheenga

  • வி.ராம்ஜி
  • Posted: 18 Apr, 2018 14:08 pm
  • அ+ அ-

’அப்பாடா... விட்டாச்சு லீவு’ என்று சைலண்ட் மோடில் இருந்தபடி, பரிட்சை எழுதிய மாணவக் கூட்டம், இப்போது அலப்பறை மூடுக்கு கொஞ்சம்கொஞ்சமாக வந்துகொண்டே இருக்கிறது. ஆனால், அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில், மீண்டும் ம்யூட் ஆப்ஷனை இயக்கத் தயாராக இருக்கிறார்கள் பெற்றோர்கள்.

அலாரம், யுனிபார்ம், முதுகை கூனாக்கும் புத்தகப்பை, அம்மாவின் அன்பைச் சுமந்து கலந்து வரும் சாப்பாட்டுப்பை, காலுக்கு இறுக்கமா  சாக்ஸ், ஷூ, வேன் பயணம், ஸ்கூல், படிப்பு, படிப்பு, எழுத்து, எழுத்து, டெஸ்ட், டெஸ்ட்... என்று புத்தகத்தோடு புத்தகமாக, மிஷினோடு மிஷினாக ஒரு வருடம் கடும் உழைப்பு காட்டியவர்களுக்கு, அந்தப் பிஞ்சுப் பசங்களுக்கு, இந்த வெயில்காலம்தான் உற்சாகமான காலம். ரிலாக்ஸ் காலம். கொண்டாட்டமான காலம். 

வீட்டில் கிரிக்கெட் பேட் இருக்கும். ஆனால் விளையாடக்கூடாது. வீடியோ கேம்ஸ் ரிமோட் உட்பட அப்படியே புத்தம்புதுசாக இருக்கும். ஆனால் தொடக்கூடாது. டிவி இருக்கும். பார்க்கக்கூடாது. ஃபுட்பால், வாலிபால், பேஸ்கட் பால் என கேட்டதெல்லாம் வாங்கித் தந்திருப்பார்கள். ஆனால் இந்த ஒரு வருடத்தில் விளையாடவே விட்டிருக்கமாட்டார்கள். படிப்பு, படிப்பு, படிப்பு.

காலையில் ஸ்கூலுக்கு ஏழு மணிக்கே கிளம்பி, மாலையில் நாலரைக்கு வீட்டுக்கு வந்து, அஞ்சரைக்குக் கிளம்பி, ஏழரை வரை டியூஷன் அட்டெண்ட் பண்ணி, அரைத்தூக்கத்திலேயே சாப்பிட்டு, காலையில் எழுந்து... என்று தவ வாழ்க்கை வாழும் சின்னஞ்சிறுசுகளின் பொடிசுகளின் உலகம் இப்படியாக பெற்றோர்களால், உண்டாக்கப்பட்டிருக்கிறது.

சரி... பரிட்சை முடிந்தது. பள்ளியும் விடுமுறை விட்டாகிவிட்டது. அந்த கிரிக்கெட் பேட், வாலிபால், பேஸ்கட் பால், வீடியோ கேம்ஸ், கேரம்போர்டு, டிவி என முழுக்க முழுக்க, இந்த ஒன்றரை மாதங்களை, இஷ்டத்துக்கு ஆடிக் களித்துவிடவேண்டியதுதானே!

‘அதெப்படி... இதோ... உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும் கலைகளில் சிறந்துவிளங்கவும் கோடைகால பயிற்சியைத் தொடங்கியிருக்கிறோம் என்று கூவிக்கூவி அறிவித்துவிடுகிறார்கள். இந்த டெய்லி பேப்பருக்குள் பிட் நோட்டீஸை வைத்துத் தருகிற வித்தையையும் யுக்தியையும் கண்டுபிடித்தவன் மீது, குழந்தைகளுக்கு அப்படியொரு கோபம் வரும்.

அபாகஸ் பயிற்சி என்று ஒரு பிட் நோட்டீஸ் தலையைச் சுழலச்செய்யும். பிரெஞ்ச் கோச்சிங் என்று ஸ்டைலான ஆங்கிலத்தில், கண்ணைக்கவரும் காகிதத்தில் அசத்தி ஈர்க்கும். தியாகய்யர் படமோ எம்.எஸ்.சுப்புலட்சுமி படமோ போட்டு, கோடை கால கர்நாடக சங்கீத வகுப்பு என்று மிருதங்கம் வாசிக்கும். இன்னொன்று... சல் சல் என்று பரதப் பயிற்சிக்கு அழைப்பு விடுக்கும். ‘உங்கள் குழந்தைதான் நாளைய அப்துல்கலாம். எளிய முறையில் கம்ப்யூட்டர் பயிற்சி’ என்று விஞ்ஞானபூர்வமாக அறிவித்து, நாலாங்கிளாஸ் குழந்தையின் மூளைக்குள் ராக்கெட் விடுவார்கள்.

’அப்பாடா... விட்டாச்சு லீவு...’ என்று சட்டை, கன்னமெல்லாம் இங்க் வழிய, முகம், கை, தலைமுடி என எல்லா இடங்களிலும் ஜிகினாக்கள் டாலடிக்க, சந்தோஷமும் கூத்துமாகக் கொண்டாடியதை கட்டியம் கூறும். ஆனால் அந்த உற்சாக பலூனில் ஊசியைக் குத்த தயாராக இருப்பார்கள் பேரண்ட்ஸ்.

அபாகஸ் முதல் கம்ப்யூட்டர் வரையிலான பயிற்சிகள் ஒருபக்கமும் நீச்சல் தொடங்கி கராத்தே வரையிலான பயிற்சிகள் இன்னொரு பக்கமும் பாட்டு, பரதம், மிருதங்கம் என பயிற்சிகள் ஒருபக்கமும் என ஜலதரங்க ஆலாபனை எட்டுகட்டை ஸ்ருதியில் பாடுகிற விதமாக இருக்கும் பசங்களுக்கு!

’சாக்லெட் வாங்கித் தரணும், பிஸ்கட் வாங்கிக் கொடுக்கணும், தொப்பி வாங்கித் தரணும்’ என்பது போல, ‘குழந்தையை நீச்சல் கத்துக்க அனுப்பணும்’ என்பார் அப்பா. ‘மியூஸிக் கத்துக்கத்தான் அனுப்பணும்’ என்பார் அம்மா. இந்த மிகப்பெரிய யுத்தத்தின் முடிவில், ‘ஏன்... ரெண்டுமே கத்துக்கட்டுமே...’ என்று போட்டியானது டிராவில் முடிய... அங்கே அம்புப்படுக்கையில் விழுந்துகிடக்கும் பீஷ்மரைப் போல, பெட்ரூமில் சிங்சாங்குடனும் சோட்டாபீமுடனும் தன் மனசைச் சொல்லி அழுதுகொண்டிருப்பார்கள் குழந்தைகள்.

‘எனக்கு நீச்சல் கத்துக்கணும்னு சின்ன வயசுலயே ஆசை. ஆனா எங்க ஊர்ல கிணத்துல இறங்கித்தான் கத்துக்கணும். பயம். முடியலை. அதான் பையனை சேத்துவிடலாம்னு ஒரு இது...’ என்று செண்டிமெண்டகப் பேசி, பழைய நினைவுகளில் மூழ்கி, நீச்சலடிப்பார் கணவர்.

மனைவி மட்டும் என்ன? ‘ஹூம்... பாட்டு கத்துக்கணும், பரதம் கத்துக்கணும்னு எனக்கு ஆசை. டான்ஸ் கத்துக்கிட்டு என்ன பண்ணப்போறேன்னு தாத்தா திட்டுறார். பெரிய பி.சுசீலா. பாடப்போறாளாம்னு பாட்டி திட்டுறாங்க. வா... என் கூட அடுப்படிக்கு வந்து சமையலைக் கத்துக்கோன்னு அம்மா சொல்லிட்டாங்க. என் ஆசை, லட்சியம், விருப்பம் எல்லாமே அந்த அடுப்புலயே கருகிப்போச்சு’ என்று பாலசந்தர் படத்தின் ஹீரோயின் மாதிரி, பஞ்ச் வைத்து, டச் வைத்துப் பேசுவார் மனைவி.

தங்களுடைய ஆசை நிறைவேறவில்லை என்று சொல்லிச் சொல்லியே, அந்த ஆசைகளையெல்லாம் குழந்தைகளின் மீது திணித்தால், பாவம்... அவர்களின் ஆசையை எப்போது அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் என்று உணருவதே இல்லை.

காலை எழுந்ததும் நீச்சல், பிறகு ஹிந்தி வகுப்பு, மதியத்திற்கு மேல் பரத வகுப்பு, மாலையில் பிரெஞ்ச் கற்றுக்கொள்ள... என்று வகைதொகை தெரியாமல், அல்லுசில்லெல்லாம் பெயர்வது போல், நாலாவகுப்புகளிலும் சுழற்றிச் சுழற்றி அடித்தால்... குழந்தைகள் என்ன ஹார்ட் டிஸ்க்கா? ஏற்று ஏற்று என்று ஏற்றிக்கொண்டே போவதற்கு?

போதாக்குறைக்கு, டக்கென்று அடுத்தவருடப் பாடங்களை கர்மசிரத்தையாக வகுப்பு எடுக்கிறேன் பேர்வழி என்று வறுத்தெடுக்கிற பள்ளிகளும் தன் பங்குக்கு நோண்டிநொங்கெடுக்கும்.

எக்ஸ்ட்ரா ஆக்டிவிடீஸ், எக்ஸ்ட்ரா ஆக்டிவிடீஸ் என்று இங்கிலீஷில் சொல்லிச் சொல்லியே, அவர்களுக்குத் தேவையான, முக்கியமான, அவர்கள் விரும்புகிற விஷயங்கள் அனைத்துமே எக்ஸ்ட்ராவா என்னத்துக்கு இதெல்லாம் என்றாகிவிடுவதுதான், கொடுமையிலும் கொடுமை!

இதில் விளம்பரங்களின் தொல்லை வேறு. ‘என் பேரன் சயிண்டிஸ்டா வருவான்’, ‘என் பையன் ஆர்க்கிட்டெக்டா வருவான்’, என் பையன் சூப்பர் ஸ்டாரு, என் பையன் மியூசிக் ஸ்டாருன்னெல்லாம் கிளப்பி விடுறாய்ங்கப்பா.

குழந்தைகளை, குழந்தைகளாகவே வளரவிடுங்கள். கோடை விடுமுறையை, ஸ்பெஷல் வகுப்புகளுக்கான காலகட்டமாக மாற்றிவிடாதீர்கள். இப்பொது விளையாடாவிட்டால், எப்போதுதான் விளையாடுவார்கள்.

குழந்தைகளெல்லாம் கூடி, ஓடியாடி விளையாடவேண்டாமா? ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொள்வதன் உன்னதம் அவர்களுக்குத் தெரியவேண்டாமா? ஒரு கிரிக்கெட் ஆட்டத்திற்கும் கேரம்போர்டு ஆட்டத்துக்குமே நம்மையும் தாண்டி இன்னும் சிலரோ இன்னும் ஒருவரோ தேவை என்றாகிற சூழலில், கூடிப் பயணிப்பதை வாழ்க்கை மிக இலகுவாகச் சொல்லித் தருகிறதே... அதையெல்லாம் கற்றுக் கொடுக்கவேண்டாமா? சொல்லப்போனால், இந்தக் கோடை விடுமுறைகளில், இதையெல்லாம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்பது போல், கம்ப்யூட்டர், ஹிந்தி, பிரெஞ்சு என்று கற்றுக்கொள்ளவோ, பரதம், மிருதங்கம், கராத்தே என்று கற்றுக்கொள்ளவோ என்று இருவேறு திசைகளில் பெற்றோரே பயணிக்கிற குழப்பம் கும்மியடிக்கிற நிலையில், அந்தக் குழந்தைகள் எப்படி, எதை, எவ்விதம் புரிந்து உணர்ந்துகொள்வார்கள்?

குழந்தைகளை குழந்தைகளாகவே விடுங்கள். குழந்தைகளை குழந்தைமையோடே அணுகுங்கள். வளருங்கள். வளரவிடுங்கள்!

சம்மர் க்ளாஸ்னு படுத்தாதீங்க!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close