[X] Close

பேசுறோம்... மனம் விட்டுப் பேசுறோமா?


pesurom-manam-vittu-pesuroma

  • வி.ராம்ஜி
  • Posted: 18 Apr, 2018 12:02 pm
  • அ+ அ-

ஐம்புலன்களுடன் ஆறாவதாக ஒரு புலனும் சேர்ந்து விட்டது. ஆமாம்... நமக்கெல்லாம் ஆறாவது புலனே, முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் ஆகி, முதலிடத்துக்கு வந்துவிட்டது. அந்த ஆறாம் புலன்... செல்போன்.

போன் என்பது பேசுவதற்கும் பேசுவதைக் கேட்பதற்குமான விஷயத்திற்கு மட்டுமே பயன்பட்டதெல்லாம் அந்தக்காலம். இப்போது போனும் கையுமாக, போனும் காதுமாக இருப்பவர்களே அதிகம். இருப்பதே அதிகம்.

லேண்ட்லைன் மட்டும்தான் அப்போது. எல்லார் வீடுகளிலும் போன் இருக்காது. அதேபோல் எல்லாருக்குமே பிபி நம்பர் இருக்காது. நாலு வீடு தள்ளி இருக்கிற ஏதோவொரு மாமா வீடு, யாரோ ஒரு அக்கா வீடு என அவர்கள் வீட்டு போன்நம்பரைத்தான், சொந்தங்களுக்குக் கொடுத்திருப்போம். ஏதேனும் அவசரம் என்றால், எஸ்.டி.டி. பூத்துக்கு வந்து, டயல் செய்வார்கள். இன்னார் வீட்டின் சொந்தக்காரர். இந்த ஊரிலிருந்து பேசுகிறேன். கொஞ்சம் அழைக்கமுடியுமா. பத்துநிமிடம் கழித்துப் பேசுகிறேன் என்று போனை வைத்துவிட்டுக் காத்திருப்பார்கள். அதற்குள் அவர்கள் வீட்டுக்குச் சேதி போயிருக்கும். அவர்களும் வந்து காத்திருப்பார்கள். பேசுவார்கள். நலம் விசாரித்துக் கொள்வார்கள்.

அப்போது லேண்ட்லைன் கேட்டு பதிவு செய்யவேண்டும். அப்படிப் பதிந்தால், கிடைப்பதற்கு இரண்டு மூன்று வருடங்களாகலாம். இந்த லேண்ட்லைன், கார்டுலெஸ் போனாகவும் உருவெடுத்தது. வீட்டுக்குள்ளேயே ஹாலில் பேச ஆரம்பித்து, அடுப்பங்கரை, கொல்லைப்பக்கம், வீட்டுத்திண்ணை வரை என ரவுண்டுகட்டி பேசலாம். இன்றைக்கு உலகையே ரவுண்டுகட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள், செல்போன்களில்!

‘மாப்ளே... வீட்லேருந்து கிளம்பும் போது போன் பண்ணு. நான் குளிக்கப் போறேன். வழில வந்துட்டிருக்கும் போது போன் பண்ணு. நான் சாப்பிட்டு முடிச்சிடுறேன். அப்புறம் அந்த பிள்ளையார்கோயில் வந்ததும் போன் பண்ணு. தெருமுக்குக்கு வந்துடுறேன்’ என்று போனில் பேசிக்கொண்டே குளித்து, சாப்பிட்டு, கிளம்பி, ரோட்டுக்கும் வந்து விடுகிறார்கள்.

பேசுவதற்கும் பேசுவதைக் கேட்பதற்கும் மட்டுமே பயன்பட்டது போல இன்றைய செல்போன் இல்லை. டைரியில் போன்நம்பர்களை எழுதி வைத்துக் கொள்கிற அவசியமில்லை. செல்போனிலேயே பெயர் போட்டு பதிந்துகொள்ளலாம். பிறந்தநாள் மாதிரியான முக்கிய தினங்களுக்கு ரிமைண்டர் செட் செய்யலாம். கைக்கு கடிகாரம், அலாரத்திற்கு டைம்பீஸ் என்றெல்லாம் அவசியமே இல்லை. செல்போன் எப்போதும் நேரம் காட்டும். காலையில் அலாரம் அடிக்கும்.

யாருக்கும் கடிதம் எழுதவேண்டிய அவசியமில்லை. தந்தி கொடுக்கவும் இப்போது முடியாது. போனை எடுத்து விஷயம் பேசலாம். அல்லது போனில் டைப் செய்து, மெசேஜ் அனுப்பலாம்.

கணக்குப் போடுகிற கால்குலேட்டர், டேப்ரிகார்டர் வேலைச் செய்யும் விதமாக, டெளன்லோடு செய்த பாடல்கள், வீடியோ கேம்ஸ் விளையாட்டை, இதிலேயே செய்யலாம் என்கிற நிலை, அவ்வளவு ஏன்... இரண்டரை மணி நேர படத்தையே டெளன்லோடு செய்து, பார்த்துக்கொள்ளலாம்.

வீட்டுக்கு மின்கட்டணம், அமேசானில் டிஷர்ட், மெயில் ஓபன் பண்ணி செக் செய்துகொள்ளலாம். ஊரில் இருக்கும் அப்பத்தாவிற்கோ, அம்மாவோ மாமியாரோ... யாரிடமோ வாங்கித் தந்த கடனுக்கான வட்டித் தொகைக்கோ போனிலேயே நம் அக்கவுண்ட்டில் இருந்து தொகையை டிரான்ஸ்பர் செய்யலாம். ‘ஏங்க குப்புசாமி தெரு எங்கே இருக்கு’ என்று யாரிடமும் கேட்காமல், கூகுள் ஓபன் செய்து, ரூட் பிடிக்கலாம்.  நியூஸ் படிக்கலாம். நியூஸ் கேட்கலாம். முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களின் வலையில் விழலாம். அத்துடன் பேசவும் செய்யலாம்.

இங்கே, எதற்கெடுத்தாலும் போன், போன், போன். ஷாப்பிங் மால் செல்வது முதல், சலூன் கடைக்கு செல்வது வரை செல்போனின்றி நாம் இருப்பதே இல்லை. முன்பெல்லாம், செல்போனை மட்டுமே தூக்கிக் கொண்டு சென்றோம். இப்போது செல்போன், செல்போன் சார்ஜர், சார்ஜ் எனும் சக்தியை சேமித்து வைத்துக் கடத்துகிற பேங்கர், அந்தப் பேங்கர் சேமிப்பு கரையும் சமயத்தில் சார்ஜ் ஏற்றிக்கொள்கிற வயர் ஃபிளக்... என அதையும் தூக்கிக் கொண்டு சுமக்கிறோம்.

நம்மூரில் ஏதேனும் ஒரு தெருமுனையில், ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டாப்பில், பஸ் ஸ்டாண்டில், தியேட்டர் வாசலில், சாலையோரத்தில், உங்களால் ஒரு அரைமணி நேரம் நிற்க முடியுமா. முடியுமெனில், இப்படியும் அப்படியும் செல்பவர்களில் எத்தனைபேர் போனில் பேசிக்கொண்டே போகிறார்கள் என்பதை, துல்லியமாக அல்ல தோராயமாகக் கூடச் சொன்னால் போதும். நின்று பாருங்கள்; மிரண்டு போவீர்கள். தோராயமாக அல்ல... மிக மிகத் துல்லியமாகவே அந்த பயனாளிகளைச் சொல்லிவிட முடியும்.

நின்று பேசுகிறார்கள். நடந்தபடி பேசுகிறார்கள். சாலையைக் கடந்தபடி பேசுகிறார்கள். ரயிலில் தொங்கிக்கொண்டே பேசுகிறார்கள். பஸ்சில் நின்றுகொண்டே பேசுகிறார்கள். டூவீலர் ஓட்டிக் கொண்டே பேசுகிறார்கள். டூவீலரில் பின்னால் உட்கார்ந்து கொண்டே பேசுகிறார்கள். கார் ஓட்டியபடியே பேசுகிறார்கள். பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

வீட்டுக்கு வந்தால் பேசுகிறார்கள். அலுவலகத்தில் பேசுகிறார்கள். சதாசர்வகாலமும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதிலென்ன காமெடி என்றால்... வீட்டுக்கு வந்ததும் அலுவலக நண்பர்களிடம் பேசுகிறார்கள். அலுவலகத்தில், வீட்டாரிடம் பேசுகிறார்கள். ஆனால் வீட்டிலும் அலுவலகத்திலும் நேரடியாகப் பேசிக்கொள்வதெல்லாம் மணிரத்னம் பட டயலாக்குகளாகிவிட்டன.

அப்படியே நேரடியாக வந்து முகம் பார்த்து பேசத் தொடங்கினால் கூட, ‘மாப்ளே... கோச்சுக்காதே. கொஞ்சம் வேலை இருக்கு. எதுவா இருந்தாலும் சாயந்திரம் போன்ல பேசு’ என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படியே மாலையில் பேசினாலும், ‘டக்குன்னு சொல்லு. டிராபிக்ல நிக்கிறேன்’ என்று நானூறு வார்த்தை பேசுகிற விஷயத்தை, இரண்டே வார்த்தையில் கேட்டுமுடித்துவிடுவார்கள். ஆனாலும் யாரோ யாரிடமோ போனில் வெகுநேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இங்கே ஒரு வேதனை... யாரும் யாரிடமும் மனம் விட்டுப் பேசுவதே இல்லை. ‘என்னங்க... டல்லாப் பேசுறீங்க. ஆபீஸ்ல எதுனாப் பிரச்சினையா?’ என்று மனைவியே கேட்டால் கூட, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. அப்படியே பிரச்சினைன்னாலும் உனக்குப் புரியாது. ஐ மேனேஜ்...’ என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிடுகிறார்கள்.

எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசிவிடமுடியாதுதான். ஆனால், நம் மனதின் ஏக்கங்கள், துக்கங்கள், அவமானங்கள், வலிகள், வேதனைகள், ஆசைகள், கனவுகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், சந்தோஷங்கள், உயரங்கள் என்பதையெல்லாம் சொல்வதற்கு, நம் கம்ப்யூட்டரில் தனித்தனி ஃபோல்டர் கிரியேட் பண்ணி வைத்துக்கொள்வது போல, இந்த ஒவ்வொன்றையும் சொல்ல ஒவ்வொருவர் நமக்கெல்லாம் இல்லையா என்ன?

அப்பா அம்மாவிடம் சொல்ல, அண்ணன் தங்கையிடம் சொல்ல, மனைவியிடம் சொல்ல, மாமனார் மாமியாரிடம் சொல்ல, குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ள, நண்பர்களிடம் சொல்ல, அலுவலக நண்பர்களிடம் சொல்ல, பால்ய நண்பர்களிடம் சொல்ல, பக்கத்துவீட்டுக்காரர்களிடம் சொல்ல, மளிகைக்கடை அண்ணாச்சியிடம் சொல்ல, சலூன் கடை தம்பியிடம் சொல்ல... அந்தத் தனித்தனி ஃபோல்டர்கள் போல, மனம் விட்டுப் பேசிக்கொள்ள, நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் எத்தனையெத்தனையோ விஷயங்கள் குவிந்துகிடக்கின்றன.

இந்த மன இறுக்கம், மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், டென்ஷன், டிப்ரஷன், கவலை, சோகம், துக்கம், அவமானம், வலி, துரோகம் என்பதெல்லாம் சொன்னால்தான் குறையும். சொல்லச் சொல்லத்தான் குறையும். கேட்டால்தான் குறையும். கேட்கக் கேட்கத்தான் குறையும். ஆனால் நாம் சொல்வதும் இல்லை. கேட்பதும் இல்லை.

‘அவனுக்கு என்ன பிரச்சினைன்னே தெரியலப்பா. அமுக்கான் மாதிரி உம்முன்னே இருந்தா எப்படிப் புரிஞ்சிக்கமுடியும்? மனசைத் தொறந்து பேசினாத்தானே பாரம் குறையும்’ என்று ஒருவர் சொல்வதற்குப் பின்னே,அன்பும் பேரன்பும் பொதிந்து கிடக்கின்றன.

இந்த அகண்ட உலகில், மூவாயிரம் நாலாயிரம் பேர்களின் நம்பர்களைப் பதிந்துவைத்திருக்கிற உங்களுக்கு, மனம் விட்டுப் பேச எத்தனை பேர் இருக்கிறார்கள். மனம் விட்டு உண்மையைச் சொல்லுங்கள். அல்லது நீங்களே உங்களுக்கு சொல்லிக் கொள்ளுங்கள். அந்த போன்புக்கிலோ அந்த போனையெல்லாம் தாண்டியோ மனசுக்கு நெருக்கமான நபர், மனம் விட்டுப் பேசலாம் என்று நினைக்கிற நண்பர், இவரிடம் மனம் விட்டுப் பேசினால் நிம்மதி கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடிய மனிதர்... நிச்சயம் இருப்பார்கள்.

பேசுறது... பேசிகிட்டே இருக்கறது முக்கியமில்லை. மனசை விட்டுப் பேசுறோம்ங்கறதுதான் மிகப்பெரிய ஆறுதல். மனம் விட்டுப் பேசுவோம்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close