[X] Close

அமெரிக்கால 40 லட்சம்... நம்மூர்ல 10 லட்சம்! மன உளைச்சல், டிப்ரஷன், டென்ஷன்..!


tension-depression-strees-america-reserch-60-000-dollor

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Apr, 2018 16:25 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் சமீபத்தில் நடத்திய ஆய்வைப் பார்த்துவிட்டு, நிறையபேர் பிபி எகிறி, சொந்தபந்தங்களுக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார்கள். காரை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் வீடுகளுக்கும் சொந்தக்காரர்கள் வீடுகளுக்கும் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

ஏன்... என்னாச்சு?

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 24 வயதில் இருந்து 89 வயதுக்காரர்கள் வரை அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமா? மொத்தம் 3,617 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

டென்ஷன், டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்றெல்லாம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறவர்களிடம் ஏன், எதனால் இதெல்லாம் என்றுதான் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆய்வின் முடிவைப் பார்த்துவிட்டு, பல்கலைக்கழக பேராசிரியர்களே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.

‘உங்களுக்கு டென்ஷன் அடிக்கடி ஏற்படுகிறதா?”

‘நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா?’

‘’டிப்ரஷன் உங்களுக்கு எதற்கெடுத்தாலும் வருகிறதா?’

அட... ஆமாம்பா ஆமாம்.... என்று எகிறி, இன்னும் டென்ஷனாகியிருக்கிறார்கள்.

சரி... இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? அவர்களின் ஆண்டு வருமானம் 60,000 டாலருக்கும் கீழே இருக்கிறதாம்!

ஆமாம். 60,000 டாலருக்குக் கீழே சம்பளம் வாங்கினால், எப்படிக் குடும்பம் நடத்துவது? உப்பு, புளி, மிளகாய் வாங்கணும், வாராவாரம் சினிமாவுக்குப் போகணும், மனைவியோ குழந்தைகளோ நினைக்கும் போதும் கேட்கும் போதும் ஷாப்பிங் போகணும், மாலுக்குப் போகணும், நாலு காசு சேக்கணும். ஆனா வருஷத்துக்கு 60,000 டாலர் கூட சம்பளம் வராத நிலைல, என்னத்த பண்றது? என்ன பண்ணப் போறோமோ... என்றெல்லாம் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் அமெரிக்க வாழ் தம்பதிபெருமக்கள்.

சொந்த வீடு, டூவீலர், சொகுசான கார், பசங்களுக்கு நல்ல படிப்பு என்றெல்லாம் நினைப்பதும் அந்த நினைப்பை செயல்படுத்த உழைப்பதும் அமெரிக்காவாக இருந்தாலென்ன... அமைந்தகரையாக இருந்தாலென்ன. எல்லோரும் மனிதர்கள்தானே.

’’மனைவி வேலைக்குப் போயிட்டுதான் இருக்காங்க. ஆனாலும் அவங்களுக்கு ரெண்டு வருஷமா இன்கிரிமெண்ட்டே போடலை. எனக்கு போட்டாங்க. ஆனாலும் பெரிய ஹைக்கெல்லாம் கிடைக்கலை. நாலு வருஷமா சொந்தமா வீடு வாங்கணும்னு ஆசை. ஆனா இப்போதைக்கு வீடு வாங்கற விஷயத்துக்குள்ளே போனா, சுத்தமா லாக்காயிருவோமோனு பயமா இருக்கு. நினைக்கும் போதே டென்ஷன் எகிறுது’’ என்று கணவன்மார்கள் பலரும் இதேவிதமாக, ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது, காசுதான் சந்தோஷம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லைதான். பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று இங்கே கூட சொல்லிவைத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனம்தான். அதேசமயம், பொருளாதாரத்தில், தங்களை மேல்தட்டுக்காரர்களாகவே காட்டிக்கொள்கிற மனோநிலை, நம்மூரைப் போலவே அங்கேயும் இருக்கிறதா? அல்லது அமெரிக்க நாகரீகம் போல, அவர்களின் சிந்தனைகள் நமக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதா? என்று தெரியவில்லை.

ஆண்டுக்கு 60,000 டாலர் என்பது கிட்டத்தட்ட நம் நாட்டு மதிப்புப்படி வருடத்துக்கு 40 லட்சம் ரூபாய். அமெரிக்காவில் சராசரியாக ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் என்பதே 40 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால்தான், நிம்மதியாக, சந்தோஷமாக, உற்சாகமாக, கேளிக்கைக் கொண்டாட்டங்களுடன் வாழமுடியும். அப்படி இயலாத நிலையில், அதாவது வருடத்துக்கு 40 லட்சத்துக்கும் குறைவான வருமானம் என்பதாலேயே, எப்போதும் படபடப்புடன் இருக்கிறார்கள். ஒருவித மன அழுத்தத்துடனேயே வலம் வருகிறார்கள். எவருடன் கலகலவெனப் பேசாமல், மன இறுக்கமாகவே இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் டென்ஷனாகவே பேசுகிறார்கள். இதனால் உடலும் மனமும் இன்னும் இன்னும் மோசமாகிக் கொண்டிருப்பதாக ஆய்வு முகத்தில் அறைந்து சொல்கிறது.

அங்கே ஆண்டுக்கு 40 லட்சம்... நம்மூரில் 6ல் இருந்து 10 லட்சம் என்று வைத்துக் கொள்ளலாம். மாதம் 50,000 சம்பளம் வாங்கி, வருடத்துக்கு 6 லட்சம் வாங்குபவர், ‘என்னத்த சொல்றதுங்க... வாங்கற சம்பளம், வாய்க்கும் வயித்துக்குமே சரியிருக்கு’ என்று  இங்கே புலம்புகிறார்கள்.

‘இந்த சம்பளம்லாம் பத்தாதுங்க. பசங்களை நல்ல ஸ்கூல்ல சேக்கணும். ஃபீஸ் கட்றதுக்குள்ளாறயே தாவு தீர்ந்துருது. இதுல சொந்தவீடாவது காராவது...’ என்று அங்கலாய்த்துக் கொள்கிறவர்களை நம்மூரில் நிறையவே பார்க்கலாம்.

‘எங்க வீட்டுக்காரரும் எதுக்கெடுத்தாலும் டென்ஷன் ஆயிருவாரு. மாசம் பொறந்து சம்பளம் வந்ததும் பத்தாம்தேதி வரைக்கும் காச்சுமூச்சுன்னு கத்திக்கிட்டே இருப்பாரு. வட்டி கட்டி, தவணை கொடுத்து, ஸ்கூல் வேனுக்கு கொடுத்து, பால்காரருக்கு கொடுத்து, மளிகைக்காரருக்குக் கொடுத்து எல்லாம் முடிச்சாத்தான் அக்கடான்னு ஆவாரு. ஆனா பத்தாம்தேதிக்குப் பிறகுதான் நம்ம டென்ஷன் எகிறும். பிபி தாறுமாறா ஓடும். பசங்க கேக்கறதை வாங்கித்தரமுடியாது. அவருகிட்ட கேட்டா வள்ளுவள்ளுன்னு வுழுவாரு. ரெண்டுசைடுலயும் மாட்டிக்கிட்டு, டென்ஷனு, டிப்ரஷனு வந்து சமாளிக்கறதுக்குள்ளே இன்னொரு பிறவியே எடுத்து வந்தது மாதிரி இருக்கும்’’ என்று சொல்லும் நம்மூர்ப் பெண்களின் புலம்பலும் வேதனையும் மெகா சீரியலுக்கான ஒன்லைன்.

சரி... அமெரிக்காவில் 60,000 டாலருக்குக் கீழே சம்பளம் வாங்குபவர்கள் யாருமே நிம்மதியாக இல்லையா?

இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

அப்பாடா... யாரது?

ஆண்டுதோறும் 60,000 டாலர் சம்பளம் வாங்குகிற, திருமணமாகாதவர்கள் எந்த மன உளைச்சலும், வேதனையும், டென்ஷனும், டிப்ரஷனும் இல்லாமல் இருக்கிறார்களாம்.

ம்க்கும்... அதானே பாத்தேன்... என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறீர்கள்தானே!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close