[X] Close

'கமர்கட்டு’ ஞாபகம் இருக்கா?


cumarcut-ninaivugal

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Apr, 2018 11:31 am
  • அ+ அ-

புத்தகக்கட்டுடன் பள்ளிக்குச் சென்ற ஞாபகங்கள் இருக்கிறதோ இல்லையோ... அப்போது சாப்பிட்ட கமர்கட்டு, இன்னும் கரையாமல் அப்படியே மனசுக்குள் இருக்கின்றன என்கிறார்கள் பலரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

நம் மனசுக்குள் கம்ப்யூட்டர் போல், பல ஃபோல்டர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஃபோல்டருக்குள்ளும் ஓராயிரம் விஷயங்கள், சுவை மாறாமல் இருக்கின்றன. இன்னொரு விஷயம்... கம்ப்யூட்டரில் கூட டெலிட் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால், எவ்வளவு காலமானாலும் அப்படியே சிந்தாமல், சிதறாமல் இருக்கும் பால்யங்கள்... உண்மையிலேயே சொர்க்க நாட்கள்தான் என்றால் அதில் பொய்யே இல்லை.

பள்ளிக்கூட வாசல்தான் கமர்கட்டின் விற்பனை மையம். அண்ணாச்சி கடையின் மளிகைக்கடையில் கூட கிடைக்காத கமர்கட்டு, இத்துணூண்டு பெட்டிக்கடையிலும் பள்ளிக்கூட காம்பவுண்டுக்கு வெளியே மரத்தடியிலும் மட்டுமே கிடைக்கும், அதிசய இனிப்பு மிட்டாய்.

ஒரு சாக்கை விரித்திருப்பார் பாட்டி. அதன் மேலே ஒருபாதியில் பாட்டியம்மா உட்கார்ந்திருக்க, மறு பாதியில், சின்னச் சின்ன ஹார்லிக்ஸ் பாட்டிலில் கலர்கலராய் மிட்டாய்கள் வானவில்லெனக் காட்சி அளிக்கும்.

பள்ளிக்கூடத்திற்குள் நுழைவதற்கு முன்பே, பாட்டியம்மாளிடம் ஆஜர் சொல்லுவார்கள் வாண்டுகள். ஜவ்வுமிட்டாய்க்கும் கமர்கட்டுக்கும் தான் கமல் ரஜினி போட்டியே! ’வேணாம்டா. ஜவ்வுமிட்டாய் சாப்பிட்டா, நாக்கெல்லாம் கலராயிரும். வாத்தியார்கிட்ட மாட்டிக்குவோம். கமர்கட்டை வாங்கிப் போட்டுக்குவோம்’ என்பார்கள் சிலர்.

‘ஜவ்வு மிட்டாயாவது பக்கத்துல வந்து, நாக்கைப் பாத்தாதான் கலர் மாறியிருக்குன்னு தெரியும். ஆனா கமர்கட்டு போட்டுக்கிட்டிருந்தோம்னா, ஒரு பக்க கன்னம், உப்பலா இருக்கும்டா. ‘என்ன நாயே திங்கறே...’னு ஸ்கேலாலயோ வெளுத்துருவாருடா கணக்கு வாத்தியார்’ என்று சரியாக கணக்குப் போட்டு சொல்வார்கள்.

‘வாங்கறதா இருந்தா வாங்குங்க. இல்லேன்னா கிளம்புங்க. கூட்டமா இருந்தா, ஹெட்மாஸ்டரு வந்து, கடையை எடுக்கச் சொல்லிருவாருடா. அப்புறம் எம் பொழப்புல மண்ணுதான்’ என்று பாட்டியம்மா அலுத்துக் கொள்வார்.

ஒருவழியாய், அபரிமிதமான வெற்றியை கமர்கட்டு பெறும். ‘மூணாவது பீரியடுதான் கணக்கு வாத்தியார் பீரியடு. அதனால கவலையே இல்ல. கமர்கட்டே வாங்கிருவோம்’ என்று தீர்மானம் போட்டு, நிறைவேற்றி, முன்மொழிந்து வழிமொழிந்து, கமர்கட்டின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியிருப்பார்கள். பிறகு, கமர்கட்டை வாயிலேற்றியிருப்பார்கள்.

கமர்கட்டின் முதல் ஸ்பெஷலும் தனித்துவமும் என்ன தெரியுமா? மலையையே பெயர்த்தெடுக்கும் மாவீரன் கூட, கமர்கட்டை பல்லால் கடிக்கவே முடியாது. கடிக்கவும் கூடாது. கமர்கட்டு கடித்துச் சாப்பிடும் விஷயம் அல்ல. மெல்ல மெல்ல கரையவேண்டும். அந்தக் கரைதல்தான் கரையும் போது வருகிற இனிமைதான் கமர்கட்டின்  ஜெயித்தலுக்குக் காரணம்.

’காக்கா கடி’ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. நாங்கெல்லாம் காக்கா கடி கடிச்சு, பகிர்ந்து சாப்பிட்ட பரம்பரையாக்கும் என்று சொல்பவர்கள்தான் ஏராளம். காசு குறைவாக இருந்து, ஒரேயொரு கமர்கட் வாங்கி, அதை இரண்டுபேர் கடித்துச் சாப்பிடுவார்கள். சட்டையின் கீழ்ப்பகுதியில் கமர்கட்டை வைத்து, சட்டையின் மேல்பகுதியில் கடிப்பார்கள். அதை இருவராகப் பங்கிட்டுக் கொள்வார்கள்.

அதெப்படி? மலை பெயர்க்கும் மாவீரர்களால் கூட கடிக்க முடியாது என்றீர்களே என்று சிலர் கேட்கலாம். அங்கே நட்பும் பாசமும் பலத்தைத் தந்திருக்கும். அதுதான் பால்ய பலம். பால்யத்தின் பலம்.

கன்னங்கரேலென்று இருக்கிற கமர்கட், அதிக தித்திப்பு இல்லாமல் ஆனால் தித்தித்திப்புடன் இருப்பதுதான் அதன் இரண்டாவது ஸ்பெஷாலிட்டி. வாங்கி, வாயில் போட்டுக் கொண்டால், கமர்கட்டு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து காணாமல் போவதற்கு எப்படியும் முக்கால்மணி நேரமாகும். ஆக, ஒரு பத்து இருபது பைசா கமர்கட்டு, நமக்கு முக்கால்மணி நேரம் சந்தோஷத்தைத் தருகிறது.

காலப்போக்கில், பாட்டியம்மாளுக்கு கடை வைக்க பள்ளிக்கூடங்கள் அனுமதி தரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருட்கள் வரத் தொடங்கின. கலர்கலர் பேப்பர்களில் அச்சிடப்பட்ட அந்த பாக்கெட்டுகள், கடைகளில் சரம்சரமாய் தொங்கி,  சுண்டி இழுத்தன.  போதாக்குறைக்கு டிவி வரத்தொடங்கியது. அதில் அடிக்கடி இதற்கான விளம்பரங்களும் வந்துகொண்டே இருக்க, பசங்களின் மனதில் ரொம்ப எளிதாக, இவையெல்லாம்  வந்து உட்கார்ந்து கொண்டன. உள்ளே உட்கார்ந்திருந்த கமர்கட்டு குண்டுகள், உருட்டி கீழே தள்ளப்பட்டன. சில வருடங்களில் ,கமர்கட்டின் தயாரிப்புகளும் குறைந்துவிட்டன. பிறகு முற்றிலுமாக அழிந்துவிட்டன.

ஆனால், கமர்கட்டு இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. நிறைய கடைகளில் சின்னச் சின்னப் பேக்கிங்கில், அதே கருமை நிறக் கண்ணாவாக நம்மை ஈர்க்கிறது கமர்கட்டு. இப்போது இரண்டே ரூபாயில், தித்திக்க தித்திக்க, மணக்க மணக்க கிடைக்கிறது கமர்கட்டு. தேங்காய்த் துருவல், வெல்லம், கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் ஏலக்காய் என்று கலந்து மணந்து சுவைந்து, தித்திக்கத் தித்திக்க வந்துகொண்டிருக்கிற கமர்கட்டு ஞாபகங்கள் உங்களைப் போலவே உங்கள் குழந்தைகளுக்கும்  வரவேண்டாமா? கமர்கட்டு வாங்கிக் கொடுங்கள்.

என் நண்பர் ஒருவர் கூட, அவரின் குழந்தைகளின் பிறந்தநாளின் போது, கமர்கட்டு பாட்டிலே வாங்கி வந்து, வகுப்பில் கொடுக்கச் சொன்னார். அன்று மாலை வீடு திரும்பிய குழந்தைகள் டைரியைக் காட்டினார்களாம். அதில், பள்ளி ஆசிரியை, நல்லவிஷயம். பழசை மறக்காத எண்ணம், செயல் என்றெல்லாம் சொல்லி கமர்கட்டையும் குழந்தைகளின் பெற்றோரையும் பாராட்டி எழுதி அனுப்பியிருந்தாராம்.

இந்த கமர்கட் செய்வது ஒன்றும் கம்பசூத்திரமெல்லாம் இல்லை என்கிறார்கள்.

கமர்கட்டு எப்படிச் செய்வதாம்?

கமர்கட்டு செய்வது இப்படித்தான்!

தேங்காய்ப்பூ ( : ¾ அல்லது ½ கப் 

தேங்காய்ப் பால் : 1 டேபிள் ஸ்பூன் (திக்கான பால்)

உருண்டை வெல்லம் :  நன்றாகப் பொடித்தது 1 கப் 

ஏலக்காய் பொடி : 1 சிட்டிகை (கொஞ்சூண்டு)

நெய் : 2  டேபிள் ஸ்பூன் 

சரி... அடுத்து?
முதலில் வாணலில் 1 டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்ப்பூவை நன்கு சிவக்கச் சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். 
அடுத்து அதே வாணலியில், சிறிது நீர் விட்டு உருக்கி மணல் இல்லாமல் வடிக்கட்டி எடுக்கவும்.
பிறகு, அந்த வெல்ல கரைசலில் தேங்காய்ப்பால், ஏலப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து பாகு போல் நன்றாகக் காய்ச்சவும்.  அதாவது, நீரில் விட்டால் வெல்லம், முத்து போல் நிற்க வேண்டும். கையால் அழுத்தினால் கரையாமல் அழுந்த இருக்கவேண்டும்.
அந்த பதம் வரும் பொது தேங்காய்ப்பூ, நெய் சேர்த்து கை விடாமல் கிளறுங்கள். ஓரம் எல்லாம் பூத்து சுருண்டு வரும். அதை இன்னும் சற்று சுருளச் சுருள ஆகவேண்டும். தேங்காய்ப் பால் சேர்த்து பாகு காய்ச்சுவதால்... கல் போல பாகு முற்றிப் போகாது. அதேசமயம் அதற்காக ரொம்ப சுருளவும் ஆக்கிவிடாதீர்கள். அப்புறம் கமர்கட்டை எடுப்பதற்கு சுத்தில்தான் தேவைப்படும் என்று எச்சரிக்கிறார் கமர்கட்டை செய்து பார்த்த என் தோழி ஒருவர்.

அடுப்பை அணைத்து சூடு ஆறியதும், கை பொறுக்கும் சூடு இருக்கும் போது, கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டை உருண்டையாகப் பிடிக்கவும்.
 அப்புறம் என்ன... கடையில் கிடைக்கும் சுவை விட மேலாக இழுபடும் கமர்கட்டு ரெடி.

இதுக்கெல்லாம் எங்கே... டைமே இல்லீங்களே... என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு, நிறைய கடைகளில் கமர்கட்டுகள் கிடைக்கின்றன. யார்கண்டது? போறபோக்கில், அமேசானும் பிளிப்கார்டும் கூட போட்டிபோட்டுக் கொண்டு, கமர்கட்டை கூவிக் கூவி விற்றாலும் ஆச்சரியமில்லை.

பல்லு இருப்பவர்கள் பகோடா மட்டுமல்ல... கமர்கட்டும் சாப்பிடலாம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close