[X] Close
 

’சாணை பிடிக்கிறதேய்..!’  மழுங்கி வரும்  சாணை பிடிக்கும் தொழில்!


saanai-pidikkirathey-whet-stone

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Apr, 2018 15:50 pm
  • அ+ அ-

பழைமையான தொழில்கள் ஏராளம். ஆனால் என்ன... அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நசிந்துகொண்டே வருகின்றன. அப்படியொரு தொழில்தான் சாணை பிடிப்பது.

இந்தக் காலத்து இளவட்டங்களுக்கு அதாவது இப்போதைய தலைமுறைக்கு  இது அதிசயம்தான். அவ்வளவு ஏன்... அந்தக் காலத்திலேயே கூட சாணை பிடிப்பவருக்குப் பின்னாடியே ஓடுவார்கள் பையன்கள்.

சாணை பிடிப்பது என்பது, வீட்டில் உள்ள கத்தி, அரிவாள், அரிவாள்மனை முதலானவற்றை கூர் தீட்டுவது.

சைக்கிளின் ஒரு சக்கரம். அந்தச் சக்கரத்தில் பெடல். அதை அப்படியே  மரப்பலகையால், ஸ்டூல் வடிவிலான பலகையாக்கி இணைத்து, மேற்பகுதியில் இரும்பைக் கூர்மையாக்குகிற வட்டக்கருவி. இதுவும் இவர்களின் கால்களும் முதுகும்தான் மூலதனம்.

‘அக்கா... அரிவாமனை கொஞ்சம் கொடுங்களேன். கூர் மொத்தமும் போச்சு. இந்த சாணை பிடிக்கிற அண்ணன் வந்தா சொல்லுங்களேன்’ என்பார்கள் அப்போது.

‘சாணை பிடிக்கிறதேய்... சாணை பிடிக்கிறதேய்...’ என்று தோளில் மிஷினை தூக்கிக் கொண்டு நடந்தே வருவார்கள். இன்னும் சிலர் சைக்கிளில் கேரியரில் வைத்துக் கொண்டு, ‘சாணை பிடிக்கிறதேய்’ என்று சப்தமிட்டபடியே வருவார்.

ஒரு தெருவுக்குள் நுழைந்தால், எப்படியும் ஆறேழு வீடுகள் கத்திகபடா, அரிவாள்மனை, முருங்கைக்காய் முதலான காய்களையும் இலைகளையும் கொடிகளையும் பறிக்கிற கொக்கி போன்ற அலகு கொண்ட தொறட்டி ஆகியவற்றை எடுத்துவந்துவிடுவார்கள்.

கைகளில் கத்தி, மிஷின் பெடலில் கால். காலால் பெடல் செய்யச் செய்ய, சாணை பிடிக்கும் சக்கரம் கிருஷ்ணர் கையில் உள்ள சக்ராயுதம் ரேஞ்சுக்கு சுழலும். அதில் கத்தியின் பகுதியை லேசாக வைத்தாலே, தீப்பொறி பறக்கும்.

அந்த தீப்பொறி உலகின் எட்டாவது அதிசயமாக, பசங்களால் பார்க்கப்படும். அரைமணி நேரத்தில் ஆறேழு வீட்டுப் பொருட்கள், பளிச்சென்று, புதிது போல், கூர்மையாக்கிக் கொடுத்ததும் திரும்பவும் ‘சாணை பிடிக்கிறதேய்... சாணை பிடிக்கிறதேய்...’ என்று குரல் நாலு தெரு தாண்டியும் கேட்கும். இந்த முறை சாணை பிடிக்கும் அண்ணன் அமைதியாக இருக்க, அவரின் பி.ஆர்.ஓ.க்கள் போலாகிவிடுவார்கள் ஏரியா பையன்கள்.

அதுமட்டுமா? நாலு தெரு வரை அவருடனேயே போவார்கள். சம்பளம் இல்லாத ரெப் போல, அவருக்காக குரல் கொடுத்து ஆட்கள் பிடிப்பார்கள். ‘யேய் கணேசு... வீட்ல சாணை பிடிக்கணுமான்னு கேளுடா’ என்பார்கள். ‘மாமா... மரம் வெட்டுற அறுவா முனை மழுங்கிக் கிடக்குன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சொன்னீங்களே. சாணை பிடிக்கிற மாமா வந்திருக்காங்க’ என்று ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்து கத்திவிட்டு வருவார்கள்.

அவர்களுக்கு மீண்டும் சாணை பிடிப்பதையும் அப்படிப் பிடிக்கிற போது, சின்னச் சின்னதாய் பறக்கிற, கோடுகோடாகப் பறக்கிற தீப்பொறிகளைப் பார்க்கவேண்டும். அதுதான் அவர்களின் இலக்கு. ஆனால் சாணைப் பிடிப்பவர்களுக்கு அதுதான் வாழ்க்கை.

’’எனக்குத் தெரிஞ்சு சாணை பிடிக்கிறவர் எங்க ஊர்ல இருந்தார். தினமும் ஒவ்வொரு ஏரியாவா போவாரு. ஒருநாளைக்கு அம்பது அறுபது கிலோமீட்டர் வரை போயிட்டு வருவார். அந்த வருமானத்தை வைச்சே, காசு சேத்து பசங்களை படிக்க வைச்சாரு. பொண்ணூங்களை கட்டிக் கொடுத்தாரு. எப்பவோ பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு இடம் வாங்கினாரு. அந்த இடத்துல பாதியை வித்தப்ப, இடம் வாங்கின காசை விட கூடுதலாவே கைக்கு வந்துச்சு. அந்தக் காசைப் போட்டு, மனைவியோட நகைகளையெல்லாம் வித்து, சின்னதா, அழகா ஒரு வீடு கட்டினாரு’’ என்கிறார் நண்பரின் தந்தை.

ஆனால் இன்றைக்கு, சாணை பிடிக்க வேண்டுமா என்று கேட்டு வருகிறவர்கள் குறைந்துவிட்டனர்.  சொல்லப் போனால், கண்ணில் தென்படுவதே இல்லை.

‘இப்பலாம் வியாபாரம் சுத்தமா படுத்துப் போச்சுங்க. டெய்லருங்களே கத்தரிக்கோல் கொடுப்பாங்க. சாணை பிடிக்கச் சொல்லுவாங்க. ‘இன்னிக்கி ஒரு டெய்லர் கடையாவது கிடைக்கணும்டா சாமீன்னு வேண்டிக்கிட்டுதான், மிஷினை தோள்ல தூக்குவோம்.

இப்ப, டெய்லர் கடைகளே குறைஞ்சிருச்சு. எல்லாம் ரெடிமேடாயிருச்சுங்களே’’ என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார்கள் சாணை பிடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.

’எல்லாம் ரெடிமேடாயிருச்சு. கத்திகபடாவும் ரெடிமேடாயிருச்சு. கத்தியோ, அரிவாமனையோ முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்றாங்க. அப்புறம் கடைல காசு கொடுத்து வாங்கிடுறாங்க. துரு பிடிக்காத வரைக்கும் இரும்பு, எத்தனை தலைமுறைக்கு வேணும்னாலும் யூஸ் பண்ணலாம்னு சொல்லுவாங்க. எங்க தொழில்தான் துருப்பிடிச்சுப் போயிருச்சு’’ என்று சொல்லும் பாய் அண்ணா, கத்திக்கு, அரிவாள்மனைக்கு இருபது ரூபாயில் இருந்து நாற்பது ரூபாய் வரைக்கும் வாங்குகிறார். 

ஆனால் என்ன... நாற்பது சொன்னால், முப்பது , இருபத்தி ஐந்து  என்று பேரம் பேசுகிறார்கள். சாணைப் பிடிக்க பொருட்கள் தருவதும் குறைவு. அப்படியே தந்தாலும் பேரம் பேசியே விலையைக் குறைப்பவர்கள் அதிகம்.’’ என்று புலம்பலும் வருத்தமுமாகச் சொல்லுகிறார்கள்.

அன்றைக்கு... சாணை பிடிக்கும் போது கிளம்புகிற தீப்பொறி, அதிசயம். இன்றைக்கு சாணை பிடிக்க வருபவர்களே அதிசயமாகிப் போனார்கள். 

‘சாணை பிடிக்கிறதேய்... சாணை பிடிக்கிறதேய்...’ குரல் கேட்டால், அவர்களுக்கு ஏதேனும் வேலை கொடுங்கள். நீங்கள் முதலாளி ஆகிவிடுவீர்கள். அந்தத் தொழிலையும் தொழிலாளியும் காத்த புண்ணியம் உங்கள் குடும்பத்தை கூராக்கும்; சீராக்கும்!

 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close