[X] Close

உங்கள் கால்ஷீட் கிடைக்குமா? ஞாயிறில்... குழந்தைகளுக்காக!


sundayil-kidsukku-callsheet

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Apr, 2018 11:34 am
  • அ+ அ-

வாரவிடுமுறை என்பது, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஓய்வு. உடலுக்கு மட்டுமா? மனசுக்கான எனர்ஜி பூஸ்டர்... இந்த விடுமுறையும் விடுமுறையில் ஓய்வும்தான்.

ஆனால் எப்படிக் கழிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது புத்துணர்ச்சியும் எனர்ஜியும்.

‘ஞாயித்துக்கிழமை எப்படா வரும்னு காத்துக்கிட்டே இருப்பேன். ஏன்னா, அது எனக்கே எனக்கான நாள்’ என்பவர்கள் இங்கு அதிகம்.

‘ஞாயித்துக்கிழமை எப்படா வரும்னு காத்துக்கிட்டிருப்பேன். ஏன்னா, மத்த நாளெல்லாம் டப்பால அடைச்ச சோறுதான் சாப்பிடுறோம். அன்னிக்கிதான், தட்டு வைச்சு, சுடச்சுட வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம், மிளகு ரசம், புடலங்கா கூட்டு, முடிஞ்சா கொஞ்சம் பருப்புத் துவையல்னு வெளுத்துவாங்கலாம்’.

‘சண்டே அன்னிக்கி காலைல எழுந்ததும் முத வேலை, பக்கத்துல இருக்கிற மீன் கடைக்குப் போயிருவேன். கொடுவாவோ, சங்கராவோ, வஜ்ஜிர மீனோ எதுனா இருந்தா அள்ளிப்போட்டு வாங்கியாந்துருவேன். அதைக் கழுவி, சுத்தம் பண்ணி, சின்னச் சின்னதா ஒரே சைஸ்ல நறுக்கி, அழகா கொடுக்கறதுக்கே அரைநாளாயிரும். அதுக்கு உண்டான மசாலாக் கலவைல நாமதான் ஸ்பெஷல். சமையற்கட்டுக்குள்ளே புகுந்தேன்னா, மணக்க மணக்க சுடச்சுட இறக்கி வைக்க, மதியானம் ரெண்டு மணி ஆயிரும்.’ என்று சமையல் புராணம் பாடுபவர்களும் இருக்கிறார்கள்.

‘அந்த வாரம் வந்த எல்லாப் புத்தகங்களையும் அப்பப்ப வாங்கிருவேன். ஆனா, படிக்கத்தான் நேரமே இருக்காது. அதனால, ஞாயித்துக்கிழமை அன்னிக்கி எல்லாப் புத்தகங்களையும் எடுத்து வைச்சிக்கிட்டு, எல்லாத்தையும் படிச்சு முடிச்சா, சாயந்திரம் ஆறு மணியோ ஏழு மணியோ ஆயிரும்’ என்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர்... மன்னிக்கவும் பலர்... சொல்வது யூனிக்கான  விஷயம்.

காலைல லேட்டா எந்திரிக்கணும். எழுந்திருச்சு, லேட்டா டிபன் சாப்பிடணும். அப்புறம் ஒரு தூக்கம். அதுக்குப் பிறகு, லேட்டா மதியானச் சாப்பாடு. முடிச்ச கையோட ஒரு தூக்கம். சாயந்திரம் எந்திரிச்சு ஒரு குளியல். அப்புறம் எட்டுமணிக்கு சாப்பாடு. ஒன்பது மணிக்கு தூக்கம். அப்பதான் ஒருவாரம் ஃபுல்லா வேலை பாக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறீர்கள்தானே. அல்லது கேட்டிருக்கிறீர்கள்தானே.

இப்படியான விஷயங்கள் கொண்டுதான் ஞாயிற்றுக்கிழமையைக் கழிக்கிறோம். ஞாயிறு விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

எல்லா ஞாயிறும் நமக்காகத்தான். எல்லா ஞாயிறு விடுமுறையும் உங்களுக்கானதுதான். அதேசமயம்  மனைவியும் குழந்தைகளும் கூட உங்களுக்கானவர்கள்தானே. அவர்களுக்கும் நேரம் ஒதுக்கித்தான் பாருங்களேன்.

மனைவியிடம் கூட பேசுவதற்கு நேரம் ஒதுக்கிவிடுகிறோம். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு முடித்து, கொஞ்சம் பேசத்தான் செய்கிறோம். ஆனால் நீங்கள் வரும் நேரத்தில், குழந்தைகள் தூங்கிவிட்டிருப்பார்கள். இல்லையெனில், அவர்களிடமும் நீங்கள் பேசியிருப்பீர்கள். பேசுவீர்கள்.

ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும் நீங்கள் வேலைக்குச் செல்லாமலும்  இருக்கிற  ஒரே நாள்... ஞாயிற்றுக் கிழமைதானே!

மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் இருக்கின்றன. மூன்று ஞாயிற்றுக்கிழமைகளை வேண்டுமானால் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஞாயிறை, ஒரேயொரு ஞாயிறை மட்டும்  உங்கள் குழந்தைகளுடன் இருக்கக் கொடுங்களேன்.

காலையில் பேப்பரை மடியில் வைத்துக் கொள்வதற்குப் பதிலாக குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை அருகில் வைத்திருப்பதற்கு பதிலாக, பசங்களை  பக்கத்தில் அமரவைத்துக் கொள்ளுங்கள். நீங்களே கூட அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொள்ளுங்கள்.

பள்ளி குறித்துக் கேளுங்கள். பாடங்கள் குறித்து கேளுங்கள். நண்பர்கள் குறித்து கேளுங்கள். இந்த வாரம் சாப்பிட்ட உணவெல்லாம் என்ன என்று பட்டியலிடச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு நீங்கள் குளிப்பாட்டி விடுங்கள். தலைக்கு ஷாம்பு போட்டு, நன்றாகக அலசுங்கள். எதற்கெடுத்தாலும் அம்மாதான் செய்யணும் அம்மாதான் செய்யணும் என்று சொல்லும் குழந்தைகள், ‘அம்மாவுக்கு குளிப்பாட்டி விடவே தெரியலப்பா’ என்று சொல்லுவதைக் கேட்கலாம். அது வேறொன்றுமில்லை. உங்கள் அன்புக்கும் ஸ்பரிசத்திற்கும் குழந்தைகள் இப்படித்தான் நன்றியைச் சொல்லும். ‘’ரொம்ப தேங்க்ஸ்பா...’ என்று குழந்தைகள் பிறகு வெட்கப்பட்டுக் கொண்டே கழுத்தை கட்டிக் கொள்ளும்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஊட்டி விட்டிருக்கிறீர்களா? யாரேனு ம் ஊட்டிவிடுவதை குழந்தைகள் விரும்பும். அதேபோல், யாருக்கேனும் ஊட்டிப் பாருங்கள். உங்கள் மனதுக்கே அது இதம் தந்து என்னவோ செய்யும்.

வீட்டில் கேரம் போர்டு இருக்கிறதா? கடைசியாக எப்போது எடுத்தீர்கள்? எப்போது விளையாடினீர்கள்? இந்த ஞாயிறில், உங்கள் குழந்தைகளுடன் கேரம் விளையாடுங்கள்.

மாலையில், அவர்களுடன் பாட்மிண்டன்  விளையாடுங்கள். கிரிக்கெட் விளையாடுங்கள்.

படிப்பு பற்றி பேசும் போது உங்கள் பள்ளிக்காலங்களைச் சொல்லுங்கள். ஆசிரியரிடம் வாங்கிய பாராட்டை மட்டுமில்லாமல், வாங்கிய அடியையும் கூட சொல்லுங்கள். அவர்கள் படிப்பில் எப்படி என்று பேசுகிற வேளையில், நீங்கள் எப்படியான மதிப்பெண்களையெல்லாம் எடுத்தீர்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்கள், அவர்களுக்கும் உங்களுக்குமான சம்பவங்கள், திரைப்படங்கள், போட்டிகள், விளையாட்டுகள், வலிகள் என எல்லாவற்றையும் கேலியாகவும் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் உண்மையாகவும் சொல்லுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கானப் புத்துணர்ச்சி நாள். எனர்ஜி பூஸ்டர். குழந்தைகளிடம் உங்களையும் உங்களின் ஞாயிற்றுக்கிழமையையும் ஒப்படைக்கிற அந்த நாள்... ஒரு பத்து வயது குறைந்திருப்பதாக உணருவீர்கள். இன்னும் இன்னும் எனர்ஜி கூடியிருப்பதைப் புரிந்து கொள்வீர்கள்!

இந்த ஞாயிறு... உங்கள் கால்ஷீட்டை... உங்கள் குழந்தைகளுக்காக ஒதுக்கமுடியுமா? ஒதுக்கித்தான் பாருங்களேன். கால்ஷீட் கொடுத்துதான் நேரம் ஒதுக்குங்களேன்!

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close