[X] Close

ப்ரியா, காயத்ரி, ஐஸ்வர்யா, ரேஷ்மா, காந்திமதி, கோமதி, அலமு, மெய்யம்மை!


names-kaalam

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Apr, 2018 15:18 pm
  • அ+ அ-

பெயர்களை, வெறும் பெயர்களாக மட்டுமே கடந்துவிட முடியுமா என்ன? சாத்தியமே இல்லை. ஒருவரின் பெயரும் பெயருக்குப் பின்னே உள்ள விஷயங்களும் சுவாரஸ்யங்கள் நிறைந்தவை.  குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் பெயர் வைத்தார்கள் என்பது பற்றிப் பார்ப்போமா?

தாத்தா, பாட்டி, குலசாமி

ஆண் குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயர், பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயர் வைப்பது ஒருகாலத்தில் இருந்தது. குலதெய்வத்தின் பெயரில் இருந்து பொதுவாக எடுத்து, இருபாலினத்தவருக்கும் வைத்த காலமும் உண்டு. அம்மா வழி தாத்தா, அப்பா வழி தாத்தா என இரண்டுபேரையும் சேர்த்து  கூட வைத்தார்கள்.  அவ்வளவு ஏன்... மூணாவது குழந்தைக்கு மூக்கன் என்று பெயர் வைத்த காலமும் இருக்கிறது தெரியும்தானே.

 

நெல்லை, திருவாரூர், சங்கரன்கோவில்காரரா நீங்கள்?

இப்படி பளிச்சென்று சொல்லிவிடலாம். எப்படி?  திருநெல்வேலியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் பிறந்திருந்தால், நெல்லையப்பன், காந்திமதி என்று பெயர் வைப்பார்கள். சங்கரன்கோவில் பக்கம் என்றால், சங்கரநாராயணன், கோமதி என்றும் கோவில்பட்டி என்றால் செண்பகவல்லி என்றும்  திருவாரூர் என்றால் கமலாம்பாள், தியாகராஜன் என்றும்  கும்பகோணம் என்றால் சுவாமிநாதன், சீர்காழிப் பக்கம் என்றால் வைத்தீஸ்வரன், வைத்தியநாதன், சிதம்பரம் என்றால் நடராஜன் ... என இப்படியாகப் பெயர் வைத்த காலகட்டம் இருந்தது. ‘அட... ஆமாம்... என் கூட சென்னைல காலேஜ்ல படிச்ச  பொண்ணு பேரு, செண்பகவல்லி. கோவில்பட்டி போயிட்டு வரும் போது கடலைமிட்டாய் வாங்கிட்டு வருவாப்ல’ என்று நினைவுக்கு வருகிறதா, உங்களுக்கு?

செட்டிநாட்டுப் பெயர்கள்

ராமநாதன், ராமு, மெய்யம்மை, விசாலம், விசாலாட்சி, அழகுநாச்சி, அழகம்மை, மெய்யப்பன், கோலப்பன், நாச்சியப்பன், சிவகாமி, அலமு, அலமேலு,, அண்ணாமலை, சிதம்பரம், அருணாசலம், கண்ணப்பன், பழனியப்பன், மீனாள் என்கிற பெயர் இருந்தாலே, ‘ நீங்க காரைக்குடி பக்கமா?’ என்று கேட்கலாம். ராமநாதபுரம் பக்கம் சேது என்று வைப்பதும் செங்கல்பட்டு பக்கமெல்லாம் கன்னியம்மாள், கன்னியப்பன் என்று வைப்பதும் வழக்கம். ஏனோ தெரியவில்லை... வேலூர்ப்பக்கம் எனக்குத் தெரிந்து பத்துப் பதினைந்து கருணாகரன்கள் தொடர்பில் இருக்கிறார்கள்.

தலைவர் பெயர்கள்

அறுபதுகளின் இறுதியில், காங்கிரஸ் மீது கொண்ட தாக்கத்தால்  காந்தி, நேரு என்று நிறைய பேருக்கு பெயர்கள் வைக்கப்பட்டன. அண்ணாதுரை, கருணாநிதி என்று பெயர் சூட்டியவர்கள் ஏராளம். இந்திரா என்றும்  இந்து என்றும் காமராஜ் என்றும் முத்துராமன், முத்துராமலிங்கம் என்றும் லெனின், ஸ்டாலின் , சரோஜினி, சரோஜா என்றும் பெயர்கள் வைக்கப்பட்டன. இதே காலகட்டத்தில்தான், விஜயலட்சுமிகளும் ஜெயலட்சுமிகளும் சந்தானலட்சுமிகளும் அனந்த லட்சுமிகளும் கோலோச்சினார்கள்.

சாந்தி, வசந்தி, ஜெயந்தி, பிரேமா, காஞ்சனாக்கள்

பிறகு, சாந்திக்கள், வசந்திகள், காஞ்சனாக்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்தப் பெயர்கள் கொண்டவர்களைப் பார்க்க முடிந்தது. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எனில் அஸ்வினி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரோகிணி என்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தால் ரேவதி, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தால் கார்த்திகா, கிருத்திகா, சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்ரா என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்பட்டன.

பொன்னியின் செல்வன் படித்துவிட்டு, குந்தைவை என்றும்  நந்தினி என்றும் பெயர் வைத்தார்கள். தீபம் நா. பார்த்தசாரதி படித்துவிட்டு, அரவிந்தன் , பூரணி என்று பெயர் வைத்தார்கள். அகல்யா படித்துவிட்டு அகல்யா என்றும் சிவசு என்றும் சிவசுப்ரமணியன் என்றும் பெயர் வைத்தார்கள்.  பெரியாரின் தாக்கத்தால், திராவிடன், திராவிட துரை என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள்.

ப்ரியா, ரமேஷ், மகேஷ், சுரேஷ், காயத்ரி...

அப்புறம் வந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அதிகம்  வைக்கப்பட்டது ரமேஷ், மகேஷ், சுரேஷாகத்தான் இருக்கும். முருகன், செல்வம், கணபதி, விநாயகம், முத்துக்குமரன், வேலு, நாராயணன் என்கிற பெயர்கள் கொஞ்சம்கொஞ்சமாக் குறைந்து, கோதண்டராமன், கல்யாணராமன், பலராமன் என்கிற பெயர்கள், பாலாஜிக்களாக மாறின. திடீரென்று ரமேஷ், மகேஷ், சுரேஷ், விக்னேஷ் , ராஜா, ராஜேஷ் என்று வடமொழி உச்சரிப்புடன் பெயர்கள் வரத் தொடங்கின. நளினி, நந்தினி, சுபாஷிணி என்று பெயர்கள் வந்தன. ஆனாலும் ஒரு தெருவில் பத்து ப்ரியாக்கள் இருந்தார்கள். அதில், சண்முகப்பிரியா, வாணிப்பிரியா, சிவப்பிரியா, விஷ்ணுப்பிரியா, மோகனப்பிரியா என்று சேர்ந்துகொண்டன.

தமிழ் சினிமாவில் கூட அதிக படங்களில் ஹீரோயின் பெயர் ப்ரியாவாகத்தான் இருந்தன. ஹீரோ பெயர் ராஜா என்றும் சிவா என்றுமாக இருந்தன.  தெருவுக்கு பத்து ப்ரியாக்கள் என்றால் ஒரே தெருவில் இருபது கண்ணன்கள் இருந்தார்கள். கமல, விமல, கோகுல என்றெல்லாம் சேர்த்து வைத்திருந்தார்கள்.

தொந்நூறுகளில், மிகப்பெரிய உச்சம் தொட்ட பெயர்... காயத்ரிதான். எங்கு திரும்பினாலும் காயத்ரிக்கள் நிறைந்த உலகமாகவே இருந்தது. காவேரி, சரஸ்வதி, யமுனா, ஜமுனா, பாஸ்கரன், ரவி, ரவிச்சந்திரன், மோகன்,  ஹரி, மணிகண்டன்  என்கிற பெயர்கள்  குறையத் தொடங்கின.

அதேபோல, பெயரில் ஸ்ரீ சேர்ப்பதும் ஃபேஷனானது அப்போதுதான். ஸ்ரீராம், ஸ்ரீப்ரியா, நளினி ஸ்ரீ, யுவஸ்ரீ, தேஜாஸ்ரீ எனப் பெயர்களைத் தேடித்தேடி வைத்தார்கள்.

ஐஸ்வர்யா ராஜாங்கம்

அந்தக் காலகட்டத்தில், எல்லா பெயர்களையும் ஓவர்லுக் செய்துவிட்டு, ராஜபாட்டை நடத்தியது என்றால், அது... ஐஸ்வர்யா என்கிற பெயராகத்தான் இருக்கும். தெருவுக்கு பத்து ஐஸ்வர்யா என்றில்லாமல், வகுப்புக்கு பத்து ஐஸ்வர்யா இருந்தார்கள்.  போதாக்குறைக்கு, ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டம் பெற்றது, இன்னும் பாப்புலராகி, எகிடுதகிடாக பிரசித்தி பெற்றது, ஐஸ்வர்யா எனும் பெயர்!

இப்போது  குலதெய்வப் பெயர்கள் இல்லை. தெய்வத்தின் பெயர்களும் இல்லை. தாத்தா பாட்டிகள் பெயர் வைப்பதில்லை. அந்தந்த ஊருக்கே உண்டான பெயர்கள் வைப்பவர்களும் குறைந்துவிட்டார்கள்.  பிறந்த தேதிப்படி, நட்சத்திரப்படி முதலெழுத்து இப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று, ச, ஷ, பா, தே, து என்றெல்லாம் சொல்ல, அதன்படி பெயர் வைப்பது அப்போதும் இருந்தது. இப்போது இது இன்னும் அதிகரித்திருக்கிறது. தேஜஸ்வினி, வியாபினி, மித்ரா, அபராஜிதா, ரேஷ்மா, ஆகாஷ், ஆயுஷ், ஷஷாங், சம்ரக்ஷணா, தாரிகா, பவாரிகா, மோரிகா என இன்னும் இன்னும் பல பெயர்கள் வைக்கிற காலம் இது. கூகுளில் தேடி பட்டியலிட்டு அந்தப் பட்டியலில் இருந்து பெயர் எடுத்து முன்னேயும் பின்னேயும் சேர்த்து வைக்கிறார்கள்.

இத்தாலியில் உள்ள ஒரு கடையின் பெயர், ஜப்பானில் உள்ள சிறுதெய்வம் ஒன்றின் பெயர், ஆங்கில நாவலில் அந்தப் பெயர் செம ஹிட், வாஷிங்டனில் உள்ள முக்கிய வீதியில் உள்ள  ஒரு தெருவின் பெயர் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

என் தமிழாசிரியர் சாலமன் தன்ராஜ் சார், அவருடைய மகன்களுக்கு அமைதி, புயல் என்று பெயர் வைத்திருந்தார். என் நண்பரின் தமிழாசிரியர், நீதி, நேர்மை, மாண்பு என்று பசங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். இசை என்றும் கவின் என்றுமான தமிழ்ப் பெயர்களும் இப்போது அதிகரித்து வருகின்றன.

பெயர்கள் குறித்து சொல்லும் போது, இதையும் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.

பதினாறு வயதினிலே படத்தில்... ‘ஆமாம்.. உன்னை எல்லாரும் கோபாலகிருஷ்ணன்னுதானே கூப்பிடுறாங்க’ என்பார் மயிலு ஸ்ரீதேவி. ‘எவன் கூப்பிடுறான். எல்லாரும் சப்பாணி சப்பாணின்னுதான் கூப்பிடுறான்’ என்பார் கமல். ‘சப்பாணின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறைஞ்சிரு’ என்பார் ஸ்ரீதேவி.

இப்படித்தான், பார்த்துப் பார்த்து வைக்கப்பட்ட பெயர்களைக் கடந்து, இருட்டடிப்பு செய்து, ஏதேதோ  அடைமொழி சொல்லி பெயர் வைத்துக் கூப்பிடுகிறார்கள் பலரும்.

நிழல் நிஜமாகிறது படம் பார்த்திருக்கிறீர்களா? ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் கமல், அனுமந்துவிடம் ‘என்ன பேரு’ என்பார். ‘செவிடன்’ என்று சொல்லுவார் அனுமந்து. ‘உன் பேரென்ன அதைச் சொல்லு’ என்பார். ’செவிடன்னுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க’ என்று பதில் சொல்லுவார். உடனே கமல், ‘உங்க அம்மா இருக்காங்களா. அவங்ககிட்ட போய், நான் பொறந்த உடனே என்ன பேரும்மா வைச்சேன்னு கேட்டுட்டு வா. வந்து சொல்லு’ன்னு அனுப்புவார்.

அனுமந்து கேட்டுவிட்டு வந்து, ‘அம்மாகிட்ட கேட்டேன். எம் பேரு காசின்னு சொன்னாங்க’ என்று அனுமந்து சொல்ல, ‘அட... நல்லாருக்கே பேரு. சரி. இனிமே உன்னை காசின்னுதான் கூப்பிடுவேன்’ என்பார் கமல்.

அப்பாவி அனுமந்துவுக்கு அந்த பேரன்பு தெரியாது. ஆனால் பார்க்கிற ரசிகர்கள், ஒருகணம் கனமாகிப்போவார்கள்.

இன்னும் ஒரேயொரு விஷயம்.

அந்த நபரை உங்களுக்குத் தெரியும். ஆனால் தன்னுடைய பெயரே இதுதான் போலிருக்கிறது என்று நீண்டகாலமாகவே நம்பிவிட்டிருந்தார் அவர். அந்தப் பெயர் என்ன தெரியுமா? ‘ஷட்டப்’!

ஆமாம். எதற்கெடுத்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவரை எல்லோரும் ‘ஷட்டப், ‘ஷட்டப்’ என்றே சொல்லி வாயை மூடிவிடுவார்கள். ‘ஓ... ஷட்டப் தான் நம்முடைய பெயர் போல’ என்று 17 வயது வரை நினைத்திருந்தாராம்.

‘ஷட்டப்’ தான் பெயர் என்று நினைத்துக் கொண்டிருந்தவரை, உலகுக்கே தெரியும். இறந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டாலும் இன்றைக்கும் என்றைக்கும் வாழ்ந்துகொண்டிருப்பார் அவர்.

அவர் பெயர் ‘ஷட்டப்’ அல்ல... சார்லி சாப்ளின்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close