[X] Close

முகத்தில் முகம் பார்ப்போம்!


mugathil-mugam-paarkkalam

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Apr, 2018 10:00 am
  • அ+ அ-

முகத்தில் முகம் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டால், இங்கே நமக்கு எதுவுமே எந்த நிலையிலுமே பிரச்சினைகள் இல்லை. அப்படியே பிரச்சினைகளோ சிக்கல்களோ வந்தாலும் அதை வெகு அழகாக எதிர்கொள்ளும் சாமர்த்தியமும் நிதானமும் நமக்கு வந்துவிடும்.

முகத்தில்  முகம் பார்ப்பதா? கண்ணாடியில்தானே முகம் பார்க்க முடியும் என்பீர்கள். ஆனால் முகத்தில் முகம் பார்க்கலாம் என்று பாட்டே இருக்கிறது, ஞாபகம் வருகிறதா? அதுமட்டுமா? அகம் என்பது உள்ளம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.

அதெப்படி? 

ஆமாம். அகத்தின் அழகு, அதாவது நம் உள்ளத்தின்  சிந்தனை, ஆசைகள், விருப்பு வெறுப்புகள், பொறாமை, கோபம், சோகம் இவையெல்லாமே முகத்தைப் பார்த்தே கண்டறிந்துவிட முடியும். இன்னொன்றைக் கவனித்தீர்களா? அகத்தின் அழகு தெரிகிறது என்றால், அகத்தையே தெரிந்துகொள்ளலாம் எனும் உள்ளுக்குள் உட்கார்ந்துகொண்டிருக்கிற அர்த்தத்தையும் உண்மையையும் உணரமுடிகிறதுதானே.

அகத்தின் அழகு என்பது வெறும் அழகைச் சொல்கிற வார்த்தை என்று நினைத்துவிடாதீர்கள். அகத்தின் லட்சணம் என்பதாகப் பாருங்கள். அதாவது அகத்தின் குணாதிசயம் என்று நினையுங்கள். அதாவது  நம்முடைய குணம்தான் அது என்பதை உணருங்கள்.

சரி... முகத்தில் முகம் பார்ப்பது என்பது என்றால்?

ஒருநாளில் எத்தனை முகங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்.காலையில் எழுந்ததும் மனைவியின் முகம், குழந்தைகளின் முகங்கள், பக்கத்து எதிர் வீட்டுக்காரர்களின் முகங்கள், பேப்பர் போடுகிற தம்பி, பாக்கெட் பால் வழங்குகிற அண்ணன், சிக்னலில் நமக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இருக்கிறவர்கள், நின்றுகொண்டே, வெயிலில் இருந்தபடியே போக்குவரத்தை சீர் செய்யும் போலீஸ் கார சார், தட்டுத்தடுமாறி வயோதிகத்தால் மெதுவாக சாலையை க்ராஸ் பண்ணும்  அந்தப் பெரியவர், ஐம்பது வயது மனைவியை கைப்பிடித்து பத்திரமாக அழைத்துவரும் அறுபதுவயது  ஐயா, உலகின் சோகங்களோ துரோகங்களோ அறியாமல், குருவி குயில்களைப் போல் சிறகடித்து ஓடுகிற குழந்தைகள்... இப்படியானவர்களை தினமும் பார்க்கிறீர்கள்தானே.

‘அண்ணே... ரெண்டு டீ’ என்பீர்கள். ஆனால் உங்கள் டேஸ்ட்டை மனதில் பதிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்ற வகையில் டீ போட்டு, உங்கள் வெள்ளைச்சட்டை கறையாகிவிடக்கூடாதே என்று அக்கறையுடன் கண்ணாடி டம்ளரின் அடிப்பாகத்தைத் துடைத்துத் தருவாரே... அவரின் முகம் பதிந்திருக்கிறதா உங்களுக்கு?

‘என்னண்ணே... பூ வாங்க நேத்திக்கி வரவே இல்லையே...’ என்று மலர்ந்த முகத்துடன்  முழக்கணக்கில் அளந்தாலும் அதையடுத்து கொஞ்சம் மருவும் ஏழெட்டு ரோஜாக்களும் அரை முழ முல்லையும் எக்ஸ்ட்ராவாக வைத்து அன்பு காட்டும் அந்தப் பூக்கார அக்காக்களின் முகங்களும் மனங்களும் நம் வாழ்க்கையையே மணக்கச் செய்பவை!

‘’ஏன் டல்லா இருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா. பாத்துக்கங்க, ஜாக்கிரதை’’ என்று உடன் வேலை பார்க்கும் மனிதர்களுக்கு பிரச்சினைகளே இல்லையா என்ன? அவர்களின் முகங்களில் ஆயிரம் சோக ரேகைகள் ஓடினாலும் அதையெல்லாம் கடந்துதான் அன்புக்கைகளை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதை அறிவோம்தானே!

இப்படியான மனிதர்களை, நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அன்றாடம் இப்படிப் பேசியும் பேசாமலும் உறவாடியும் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாமலும் இருந்தாலும் அந்த முகங்கள், ஒரு நொடியில் நம் கண்களில் பட்டு சட்டென்று பறந்துகொண்டே இருக்கின்றன.

இந்த ஆயிரமாயிரம் முகங்களை, ஒரு நிமிடம்... ஒரேயொரு நிமிடம்... அந்த முகங்களின் மேல் உங்களின் முகங்களை ஒட்டவைத்துப் பாருங்கள். ‘அட... இதுவும் நான் தான். அதுவும் நானே... அந்தப் பொண்ணு முகத்துல என் முகம், அந்தக் கிழவரின் முகத்தின் மேலே என்னுடைய முகம், என்று ஒட்டிவைத்துப் பார்த்தால், எல்லா மனிதர்களுடனும் ஒரு ஸ்நேகிதம் வந்துவிடும். எல்லாரையும் நேசிக்கத் தொடங்கிவிடுவோம்.

’‘நீ வேற... நான் வேறன்னு ஏன் பிரிச்சுப் பேசுறே”  என்பது வெறும் வார்த்தை இல்லை. இதுதான் வாழ்வியலுக்கான இலக்கணம்.

எல்லோர் முகங்களின் மேல் நம் முகம் பார்க்கத் தொடங்கிவிட்டால், யாரைத் திட்டுவீர்கள். உங்களை நீங்களேவா திட்டிக்கொள்வீர்கள். யாரைப் பார்த்து பொறாமைப்படுவீர்கள். உங்களை நீங்களே பொறாமைப் பட்டுக் கொள்வீர்களா? யாரிடம் சண்டையிடுவீர்கள். உங்களுக்கு நீங்களே எதிரியாக முடியுமா உங்களால்?

யாரோடு பிணக்கு  வந்து என்ன செய்யப்போகிறீர்கள். என்ன செய்துவிடமுடியும் நம்மால்?

அகத்தின்  அழகைப் பார்க்கிற அதேவேளையில்... சக மனிதர்களின் முகங்களை, நம் முகங்களை வைத்து, அன்பைப் பரிமாறினால்... முகத்தில் முகம் பார்க்கத் தொடங்கினால்... தனித்தனித் தீவுகளாக இருக்கிற நம்மையெல்லாம் இந்த முகம்... ஒன்றாக்கிவிடும் என்பது உறுதி!

உங்கள் முகத்தில் என் முகம் பார்த்துவிட்டேன். முகங்களில் முகம் பார்க்கப் பழகுவோம்!

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close