[X] Close

மாடியிலே தோட்டம் கட்டி..!


maadi-thottam

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Apr, 2018 10:53 am
  • அ+ அ-

தோட்டம் அழகு. மாடியில் தோட்டம் அதைவிட அழகு.

அங்கே இங்கே என்று வெளியே செல்லாமல், மாடியிலேயே வாக்கிங் செல்பவர்கள் பலர் உண்டு. காலை நேரத்தில் வாக்கிங் என்றால், மாலை நேரங்களில் சற்றே இளைப்பாறல் என மாடியின் பங்கு, அம்மாவின் மடி தரும் நிம்மதியைத் தரவல்லது என்பது அனுபவஸ்தர்களின் கருத்து!

மாடியில் தோட்டம் அமைக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் வழிதான் தெரியவில்லை என்று வருந்தி ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

 தமிழக அரசின் தோட்டக்கலை,  இதுகுறித்து எளிய யோசனைகளை வழங்கி உள்ளது. அருகில் உள்ள இந்த மையங்களைத் தொடர்பு கொண்டாலே, சகல யோசனைகளையும் ஆலோசனைகளையும் வழங்கக் காத்திருக்கிறார்கள் அங்கே உள்ள ஊழியர்கள்.

முதல் கட்டமாக, மாடியில் காய்கறிகளைப் பயிரிடுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

  மாடிப் பகுதியில் அதிகச் சூரியஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படி நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீர்க்கசிவைத் தடுப்பதற்கு நாலுக்கு நாலு சதுர மீட்டரில் பிளாஸ்டிக் விரிப்புகளை விரிக்கவும்.இதன் பிறகு செடிகளை வளர்ப்பதற்கான வழிகளை மேற்கொள்ளலாம்.

 தென்னைநார்க் கழிவு கட்டியுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். - சீலிடப்பட்ட பகுதியைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரித்துப் பிரிக்க வேண்டும்.

 தென்னைநார்க் கழிவுக் கட்டிகளுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடங் களுக்கு ஊறவைத்துக் காத்திருக்கலாம்.  தென்னைநார்க் கழிவு நான்கு முதல் ஐந்து மடங்காக உப்பி அதிகரிக்கும். - அதிகப் படியான நீர் வெளியேறிச் செடிகள் அழுகாமல் இருக்க,  பையின் பக்கவாட்டில் நான்கு துளைகளை இடுங்கள்.

 நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும் என்கிறார் ‘மரம்’ கருணாநிதி. .

 நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தலாம்.

   காய்கறிச் செடிகளை எல்லாக் காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

 நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.

 வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும். என்கிறார்கள்.

  அதேபோல், கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தைக் கலந்து தெளியுங்கள்.  பிறகு அதைச் செய்தித்தாளால் மூடிவிட வேண்டும். அதன் மேல் பூவாளியைக் கொண்டு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் நன்கு முளைத்த பிறகு தாளை எடுத்துவிடுங்கள்.

   அடுத்து நாற்றுவிட்டு நடவு செய்யும் முறையைப் பார்ப்போம்.  நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும் காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றைக் குழித்தட்டில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். நாற்றின் வயது 30முதல் -35 நாட்கள் ஆனதும் செடிகளை வளர்ப்பதற்கான பையில் நடவேண்டும். அதுவரை பையில் கீரை விதைகளை விதைத்துப் பயன் பெறலாம்.

  கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையாகவும் எடுத்துச் சென்று லாபம் பார்க்கலாம். ஆனால் வேலைக்குச் சென்று வருவதால், எங்களுக்கு மட்டுமே பயிரிட்டு வருகிறோம் என்கிறார்கள் பலரும்.

   தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், கிழங்கு வகைகளை நன்கு முதிர்ச்சி அடைந்த பிறகும், கீரைகளை இளம் தளிராக இருக்கும்போதும், செடி அவரை, வெண்டை, கொத்தவரை/ கத்தரி போன்றவற்றை இளம்பிஞ்சுகளாக இருக்கும்போதும் பறிக்க வேண்டும். அப்போதுதான் காய்கறியின் சத்துகளும் மணமும் மாறாமல் பசுமையாகவும் இருக்கும்.

   அறுவடை முடிந்த பின் செடிகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்திய பைகளில் உள்ள ஊடகத்தை ஒரு இடத்தில் ஒன்று சேர்த்துக் கட்டிகள் எதுவும் இல்லாதவாறு உடைத்த பிறகு, நன்கு கிளற வேண்டும். இத்துடன் 20 கிலோ தென்னைநார்க் கழிவு மற்றும் 10 கிலோ மக்கிய உரம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிய பிறகு, பிளாஸ்டிக் பைகளில் நிரப்ப வேண்டும். பிறகு மீண்டும், பழைய நடைமுறையைப் பின்பற்றிப் புதிய நாற்றுகளை வளர்க்கத் துவங்கலாம்.

  ஒரேமாதிரியான காய்கறியைப் பயிரிடுவதால், செடிகள் வளர்ப்பதற்கான ஊடகத்தில் சத்துகள் அனைத்தும் போய்விடும். மேலும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்ப்பதற்காகப் பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். இது கூடுதல் பலன்களைத் தரும் என்கிறார்கள் தோட்டப் பராமரிப்பு வல்லுநர்கள்.

   ஆரம்பகட்டத்தில், தோட்டக்கலையில் எல்.கே.ஜி.யாக இருக்கலாம். பிறகு இதில் கைதேர்ந்தவர்களாகிவிடுவீர்கள். உங்கள் தோட்டத்தை நீங்களே வடிவமைக்கலாம். ஒரு சிறிய இடத்தில் நாற்றங்கால் எனக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாற்றங் காலில்தான் வெண்டை, மிளகாய், கத்திரி, தக்காளி எல்லாம் தன் முதல் 15 நாட்களைக் கழிக்கப்போகின்றன. இதுதான் உங்கள் “காய்கறிப் பயிரின் குழந்தைப் பருவம்“. நாற்றங்காலில் விதைகள் முளைத்து இலைகள் பரப்பி ஒரு 10 செ. மீ. வளர்ந்த பின் சிறிய இடைவெளி விட்டுப் பிடுங்கி நடலாம். ஒவ்வொரு காய்கறிக்கும் நடும் இடைவெளி வேறுபடும். வீட்டுத் தோட்டம் என்பதால் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். 25 முதல் 30 நாளில் வீட்டுத் தோட்டத்தில் கீரை தயார்.

  காய்கறி விதைகளைக் கடைகளில் விசாரித்து வாங்குங்கள். காய்கறிச் செடிகளை வளர்ப்பதற்காகத் தற்போது கன்டைனர்கள் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம். புடலங்காய்,  பாகற்காய் இவையெல்லாம் படரும் தாவரங்கள். எனவே படர்வதற்குப் பந்தல் தேவை. கம்பு மற்றும் ஸ்டீல் கொண்டு நீங்கள் பந்தல் அமைக்கலாம்.

 உங்கள் வீட்டின் வசதியைப் பொறுத்துப் படரும் தாவர காய்கறி வகைகளை தேர்வு செய்யுங்கள். பழைய சாக்கு, பயனற்ற டிரம் இவற்றில் மண் நிரப்பி நீங்கள் வாழை, பப்பாளி வளர்க்கலாம். மாமரம், கொய்யா கூட வளர்க்கலாம். வீட்டு மண் பொல பொல தன்மையுடையதாக இருந்தால்,  சேனைக்கிழங்கு வளர்ப்பது நல்லது.

    காய்கறித் தோட்டம், உடலுக்கு நல்லதென்றால் பூக்களின் அணிவகுப்பு கொண்ட தோட்டம் மனதுக்கு சுகம் தரும். உடலளவிலும் மனதளவிலும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். கொஞ்சம் ஆழ அகலத்துடன் தோட்டத் தொழிலில் ஈடுபட்டால், இந்தச் செடிகள்... பணம் காய்ச்சும் மரங்களாகவும் வாய்ப்பு உண்டு!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close