[X] Close

வியர்வையுடன் குளிக்காதீங்க!


viyarvai-kuliyal

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Apr, 2018 09:58 am
  • அ+ அ-

எப்போதும் கசகச என்று, வியர்வையுடன் இருப்பதுதான் கோடையின் அடையாளம். முகத்திலும் கழுத்திலும் வியர்வை படிந்திருக்கிறதே, வழிகிறதே என்று துடைப்போம். துடைத்துக் கொண்டே இருப்போம்.

காலை எழுந்ததும் வியர்வைதான் நமக்கு குட்மார்னிங் சொல்லி வரவேற்கிறது. அந்த அளவுக்கு ஒரு வெப்பம் தகித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்தத் தகிப்பு, காலையிலேயே தொடங்கியும் விடுகிறது.

இந்த வியர்வை தலையிலும் தலைமுடிக்குள்ளும், காதோரங்களிலும் இருக்கும். ஆனால் என்ன... மணியாச்சு. போடு ஒரு குளியலை... என்று பரபரக்கத் தொடங்கிவிடுகிறோம். சரிதானே.

அதேபோல் இன்னொரு விஷயம்...

தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால், உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும், டவலால் துடைத்து வியர்வையை அகற்றுங்கள். சில நிமிடங்கள் கழித்துக் குளிக்கவைக்கலாம். வியர்வையோடு குளிப்பது, வியர்வை வழிய, வழிய முகம் கழுவுவது இரண்டுமே தவறு. நாமே கூட, வியர்வை முழுவதும் வடிந்த பிறகு குளிப்பதே சாலச் சிறந்தது.

இயற்கை முறையில் எதிர்கொள்வோம்

வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும்.

கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி இருக்கும். இது, அந்தந்தப் பருவ காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மாறும். எதிர்ப்புத் திறனைப் பொறுத்துப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது, பொதுவாகக் காணப்படும் வெப்ப காலப் பிரச்னை என்றாலும் சிலருக்கு உள்ளுறுப்புப் பாதிப்புகள்,  பிடிப்புகள், சருமப் பாதிப்புகள், பருக்கள், மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடலை சமமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறு, கண் பகுதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டு, உலரவிடலாம். மருதாணி இலைகளை அரைத்து, உள்ளங்கை, பாதத்தின் அடிப்பகுதியில்  வைத்துக்கொள்ளலாம்.

உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால், சருமத்தில் பருக்கள், கட்டிகள், சிவப்புத் திட்டுகள், வியர்க்குரு, தொடை இடுக்குகளில் அரிப்பு  போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்கு, எண்ணெய்ப் பசை பிரச்னையும் இருந்தால், அவர்களுக்கு வெயில் காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதி, தேன், வெள்ளரிக்காய் சாறு, வேப்பிலை விழுது, தேங்காய் எண்ணெய், தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் ‘மட் பேக்’ (Mud pack)கிடைக்கும், அதை நீரில் கலந்து, உடல் முழுவதும் தடவலாம். வயிறு, கண் பகுதிகளில் ‘மட் பேக்’ போட்டுக்கொள்ளலாம்.

வெயில் எனும் ஒரேயொரு விஷயம்தான் நம்மைத் தாக்கத் தயாராக இருக்கிறது, ஆனால் அதை வெல்லுவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன நமக்கு. நோ டென்ஷன் ரிலாக்ஸ்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close