[X] Close

கைகட்டி, வாய் மூடி நடமாடுங்கள்! போலீசிடம் 'ஐயா’ போட்டு பேசுங்கள்! அட்வைஸ் சொல்கிறார் அப்பாவியானந்தா!


police-adi-udhai-saamanyan

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Apr, 2018 14:26 pm
  • அ+ அ-

சட்டையை மாட்டிக் கொண்டு, செருப்பையும் அணிந்துகொண்டு, வெளியில் கிளம்பிவிட்டீர்களா? மிக மிக ஜாக்கிரதையாகவும் மிகுந்த பணிவுடனும் செயல்படுங்கள். இல்லையென்றால், ‘அம்மா குத்து, அப்பா குத்து’ என்று பல அடிகளையும் குத்துகளையும் நூறுபேர் முன்னிலையில் வாங்க நேரிடும். கவனமாக இருங்கள்.

இதோ... அப்பாவியானந்தா உங்களுக்காகவே அட்வைஸ் சொல்கிறார்.

1. 'சாலையில் கவனம் சாலையில் கவனம்’ என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் இப்போது தெரிந்திருப்பீர்களே. டூவீலரில் சென்றால், இன்னும் கவனம் தேவை. ‘ஏன் சட்டை மேல்பட்டனைப் போடவில்லை’ என்று கூட காவல்துறை நண்பர்கள் (!) உங்களை நிறுத்திக் கேட்கலாம். அவ்வளவு ஏன்... சட்டையும் பட்டனும் கிழிந்து, பிய்ந்து பறக்குமளவுக்கு அடியும் விழலாம். எச்சரிக்கையுடன் இருங்கள்.

காவல்துறையினர், எடுத்த உடனேயே அவர்கள் ‘யேய்’ என்றுதான் அழைப்பார்கள். ‘இங்கே வாடா’ என்றுதான் அன்பாகச் சொல்லுவார்கள். அசிங்கம் அசிங்கமாகத்தான் எல்லோருக்கு முன்பாகவும் திட்டுவார்கள். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டால்தான், உங்கள் அம்மாவும் நீங்களும் அடியில் இருந்தும் உதையில் இருந்தும் தப்பமுடியும். இல்லையெனில், உங்களை சிறைக்கும் அம்மாவை ஆஸ்பத்திரிக்கும் கர்மசிரத்தையாக அனுப்பிவைத்துவிடுவார்கள்.

2. தி.நகர், வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு என பகுதிகளில் கொஞ்சம் சல்லீசா பொருட்கள் கிடைக்குமே என்று கூடுகிறோம். அந்த மாதிரியான இடங்கள், இன்றைக்கும் சல்லீசாக தர்ம அடி கிடைக்கும் கூடாரமாகவும் ஆகிவிட்டது. ‘நாலாவது படிக்கிற பொண்ணுக்கு விலை கம்மியா ஒரு டிரஸ், தங்கச்சி பொறந்தநாளைக்கு ஒண்ணு எடுத்தா ஒண்ணு இலவசம்னு இருக்கிற சுடிதார்னு வாங்குவதற்காக, நீங்கள் வரும்போது, கையைக் கட்டிக் கொள்ளுங்கள். வாயைப் பொத்திக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கும் உங்கள் முகம், முதுகுக்கும் நல்லது.

3. அங்கே, யார் என்ன கேட்டாலும், ‘ஐயா...’ போட்டு பணிவாகவும் அமைதியாகவும் முதுகு குனிந்து பவ்யமாகவும் பேசுங்கள். எல்லோரிடமும் இதையே மெய்ண்டெய்ன் பண்ணுங்கள். ஒருவேளை... உங்களிடம் பேசுபவர், மப்டியில் கூட இருக்கலாம். காவல்துறையினரை, ஒருபோதும் கைநீட்டிப் பேசிவிடாதீர்கள். அவர்களை அப்படியெல்லாம் பேசப்படாது.

4. ஏன் பேசக்கூடாது என்கிறீர்களா? காவல்துறையினர், சட்டத்தையும் ஒழுங்கையும் சட்டஒழுங்கையும் காபந்து செய்யும் கடமைவீரர்கள். நமக்காகத்தான், அல்லும்பகலும் போராடி வருகிறார்கள். அவ்வளவு ஏன்... டொண்ட்டி ஃபோர் அவர்ஸூம் கடமையே கண், காது, மூக்கு, தொண்டை என்று வாழ்ந்து வரும் அவர்களிடம், முதுகு குனிந்து, கையைக் கட்டிக் கொண்டு, வாயில் கைவத்துக் கொண்டு, ஐயா போட்டு, சன்னமான குரலில் பேசுவதுதான் மரியாதை. குறிப்பாக., ‘ஐயா’ போட்டுப் பேசுங்கள். பெரிய போலீஸையெல்லாம் சின்ன போலீஸ், அப்படித்தான் ஐயா போட்டு பேசுவார்கள்.

5. அம்மாவுடன், மனைவியுடன், குழந்தைகளுடன் செல்பவர்கள் இன்னும் ஜாக்கிரதையாகவும் பணிவுடனும் செல்லவேண்டும். மடக்கிக் கேட்கிற போது, எந்த நேரத்திலும் உங்கள் அம்மாவுக்கு அடிவிழலாம். கண்ணை மூடிக்கொண்டு காலில் விழுந்துவிடுங்கள். மனைவிக்கும் அடிவிழும். காலில் விழுந்து கெஞ்சுங்கள். உங்கள் குழந்தைகள் முன்பு, உங்களுக்கு தர்ம அடி கொடுப்பார்கள். அப்போதும் ‘எவ்ளோ அடிச்சாலும் இவன் அழவே இல்ல. எதிர்க்கவே இல்ல. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் போல’ என்று காவல்துறை நண்பர்கள் சர்டிபிகேட் கொடுக்கும்படி நடந்துகொள்ளுங்கள்.

6. ‘வண்டில மூணு பேர் போறீங்க. ஏண்டா?’ என்று ஒருமையில் கேட்பார்கள் போலீஸ்கார அண்ணன்கள். ‘ஆட்டோல போக வேண்டியதுதானே... வக்கு இல்லாதவன் எதுக்கு டி.நகருக்கு வர்றே’ என்று உங்கள் தன்மானத்தையெல்லாம் உரசு உரசுன்னு உரசுவார்கள். சிரித்த முகத்துடன் இருக்கிற சீனபொம்மையாட்டம் அமைதியே உருவெனக் கொண்டு நில்லுங்கள். இப்படிப் பேசுவதெல்லாம் போலீஸ்காரரின் கடமைகளில் சேராதுதான் என்றாலும், அவர்கள் அப்படி ஸின்ஸியர் சிகாமணிகளாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து, அவர்கள் வேலையை அவர்களைச் செய்யவிடுங்கள். அவர்கள் பாவமில்லையா?

அடுத்த முறை, இதை கவனத்தில் வைத்திருந்து, வீட்டில் இருந்து நடந்தே தி.நகர் பக்கம் வாருங்கள். அப்படி வரும் போது, குடும்பமாகச் சேர்ந்து, கும்பலா ஏன் போறீங்க. போக்குவரத்துக்கு இடையூறு என்று உங்களைப் பிடித்து, தேச விரோதி ரேஞ்சுக்கு உங்களை வெளுத்தெடுக்கிற கடமை வீரர்களை மைண்டில் வைத்துக் கொண்டு, மனைவி செல்ல பத்தடி தள்ளி குழந்தை செல்ல, இன்னும் பத்தடிவிட்டு நீங்கள் செல்லுங்கள். 

7. ஒர்க் லோடு, டென்ஷன், டிப்ரஷன் என்பதெல்லாம் யாருக்குத்தான் இல்லை. ஆனால் காக்கிச் சட்டை போட்டவர்களைப் பார்த்தால், இவையெல்லாம் அவர்களுக்கு மட்டுமேதான் இருக்கிறது. மற்றவர்களுக்கு ஒர்க் லோடோ ஒர்க் இல்லாத லோடோ, டென்ஷனோ மேன்ஷனோ, டிப்ரஷனோ ஆபரேஷனோ எதுவுமே இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

8. இந்த மாதிரியான ஏரியாக்களுக்குச் செல்லும் போது, மனைவிக்கு, குழந்தைக்கு, சகோதரிகளுக்கு என்று வாங்குவதற்கு பணம் வைத்துக் கொள்வது போல், இப்படியானவர்களிடம் அடி வாங்குவதற்கும் தெம்பு வைத்துக் கொள்ளுங்கள்.

9. நீங்கள் சாமான்யர் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே. அப்படியெனில், சட்டமும் புடலங்காயும் உங்கள் வசமில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள். சட்டத்தை ஒழுங்காகக் காப்பாற்றும் கடமை வீரர்களிடம், சட்டம் இருக்கிறது என்பதையும் அவர்கள் வைத்ததே சட்டம் என்பதையும் சட்டையை மாட்டிக் கொண்டு, செருப்பை அணிந்துகொண்டு கிளம்பும் போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்புறம் ஒண்ணு... காவல்துறையே இப்படியான்னா... இல்லதான். நல்லவங்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்றாங்க. ஆனாலும் என்ன... பொண்டாட்டி நல்லா சமைக்கும் போது பாராட்டாத வாய், கொஞ்சம் உப்பு சரியில்லேன்னாலும் புலம்பித் தீர்க்கற புத்திதான் இந்த அப்பாவியானந்தாவுக்கு! 

10. அம்மாவுடன் வண்டியில் வந்ததற்கே இப்படி தர்ம அடி அடிக்கிறாங்களே என்றெல்லாம் நினைத்து, ரொம்பவே ஃபீல் பண்ணாதீர்கள். அரசாங்கத்துறைல, எங்கே பெரிய அதிகாரிகளைப் பாக்கப் போனாலும் அங்கே இந்த மரியாதைக் குறைவான வரவேற்புகளைப் பாக்கலாம். மேலதிகாரி மேல இருக்கற கோபதாபங்களையெல்லாம் சாமான்யன் மேல காட்டித் தீர்த்துக்கோனு யாரு இவங்களுக்கெல்லாம் பாடம் நடத்தினதுன்னு தெரியலை. ஆனா... நமக்கான பாடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நடந்துகிட்டே இருக்கு. கிடைச்சிக்கிட்டே இருக்கு.  

இப்படி அடிப்பது அதர்ம அடி... மக்கள்தான் தர்ம அடி என்கிறார்கள் என்று தெரிந்து புரிந்து தெளிந்தால், என்னைப் போன்ற அப்பாவிகள், காவல்துறைகள் கட்டிக்காக்கிற இந்த சமூகத்தில் நெஞ்சு நிமிர்த்தி அல்ல... கூனிக்குறுகியேனும் வாழ்ந்து தொலைக்கமுடியும்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close