[X] Close

ஜீன்ஸ், லெக்கின்ஸ்... கோடையில் வேணாமே! 


kodai-jeans

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Apr, 2018 10:02 am
  • அ+ அ-

வெயில் நேரத்தில் தோலோடு ஒட்டும் அளவுக்கு ஜீன்ஸ் உடுத்துவதால், தோலில் சிவந்த நிறக் கொப்புளங்கள், கடுமையான அரிப்பு, எரிச்சல், படர்தாமரை போன்ற தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். தொடர்ந்து இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் பயன்படுத்துவதால், கால்களில் நரம்புகளும் தசைகளும்கூடப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த அறிகுறிகளை மொத்தமாக ‘Tight pants syndrome’ என மருத்துவச் சமூகம் அழைக்கிறது. லெக்கின்ஸூக்கும் இது பொருந்தும். 

வீட்டை கூல் ஆக்குங்கள் :

மாநகர்களில் ஒரே ஒரு அறையில் மட்டும் ஏ.ஸி இருக்கும் வீடுகளில் கோடைக்காலத்தில் திண்டாட்டம்தான். இரண்டு பெட்ரூம்களிலும் ஏ.ஸி வைத்திருப்பவர்கள்கூட எகிறும் மின் கட்டணத்துக்குப் பயந்து, ஒரே அறைக்குள் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள்.

கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என எல்லோரும் ஒரே அறையில் நெரிசலை அதிகப்படுத்தினால் இடநெருக்கடியோடு, மனநெருக்கடியும் சேர்ந்துவிடும். வெயிலுக்குப் பயந்து ஒரே அறைக்குள் ஒடுங்குவதைவிட, குடியிருக்கும் வீட்டை குளிர்ச்சியாக்குவது பற்றி யோசிக்கலாம்.

கிடைக்கிற இடங்களில் எல்லாம் செடிகள் வளர்ப்பது, கூரைக்குக் கீழே தெர்மோகோல் அமைப்பது, மாடியில் தோட்டங்கள் அமைப்பது, இளநிற பெயிண்டுகள் அடிப்பது என, வீட்டை வெயிலில் இருந்து பாதுகாத்து, செயற்கைக் குளிரூட்டிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துவிடலாம்.

நோ ஃப்ரிட்ஜ் :

வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், நம் கைகள் திறப்பது ஃப்ரிட்ஜைத்தான். சில்லென தண்ணீரோ, ஜூஸோ குடித்தால்தான் நமக்கு உயிர் வரும். இதைவிட தொண்டைக்கு ஆபத்து தருவது வேறொன்றும் இல்லை. அதிக வெப்பநிலை, அடுத்த நொடியே அதிகக் குளிர் என்கிற வெப்பநிலை மாற்றங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. ‘‘வெயில் காலத்துலகூட ஏன் ஜலதோஷம் பிடிக்குது?’’ என்று சந்தேகக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் இந்த ஃப்ரிட்ஜ் தண்ணீர்தான்.

அரை வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதே எப்போதும் சிறந்தது. சில்லென்ற தண்ணீர்தான் வேண்டும் என்பவர்கள், மண்பானைத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். சாலை ஓரங்களில் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளில், சிவப்பு நிறத்துக்காக ரெட் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடலுக்குக் கெடுதல்தான் என்பதால், மண்பானை வாங்கும் முன் பானையின் தரத்தை உறுதிப்படுத்துவது நல்லது.

வெப்ப காலத்தில் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போய்விடும் என்பதால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களைச் சூடுபடுத்தி உண்ணாமல், அவ்வப்போது சமைத்துப் பயன்படுத்தலாம்.  ஆஸ்பெஸ்டாஸ் அபாயம்கோடையில் நிழலுக்காக வீட்டின் முன்புறமோ, பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தற்காலிகக் கூரைகள் அமைப்பது வழக்கம். அந்த ஷீட் மெலிதாக இருப்பதால், சூரிய வைப்பத்தை அப்படியே உள்வாங்கி, நமக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகளைவிட, பல மடங்கு பாதிப்புகளை இந்த ஷீட்கள் நமக்கு ஏற்படுத்திவிடும். பலவகைப் புற்றுநோய்கள் இதனால் வரும் வாய்ப்பு இருப்பதால், உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஷீட்களைத் தடை செய்துள்ளன. வெயிலுக்குப் பயந்து மேற்கூரை போட திட்டமிடுபவர்கள் ஒலைக் கூரை, ஒடுகளால் செய்த மேற்கூரை போடலாம். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட வேண்டுமெனில், நான்கு புறமும் காற்றோட்டமான இடைவெளியுடன், மேற்பரப்பில் படரும் செடிகளை வளர்த்து, சூட்டை குறைத்துக்கொள்ளலாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close