[X] Close

நீங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா?


neengal-ungalidam-mannippu-kettirukkirikala

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Apr, 2018 13:18 pm
  • அ+ அ-

மன்னிப்பு... எல்லோருக்கும் பிடித்த வார்த்தை. என்ன... யாராவது நம்மிடம் மன்னிப்புக் கேட்டால், உற்சாகமாகிவிடுகிறோம். நம்மை யாரேனும் மன்னிப்பு கேட்கச் சொன்னால்தான், முகம் சுருங்கி, உம்மென்றாகி விடுகிறோம்.

பிறர் நம்மிடம் கேட்பதும் நாம் அடுத்தவரிடம் கேட்பதும் இருக்கட்டும். முதலில், நாம் நம்மிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறோமா?

யோசித்துப் பார்த்தால், நமக்கு நாமேயான மன்னிப்புப் பட்டியல் ரொம்பவே நீளம். ஆனால் அதை நாம் நம்மிடம் கேட்பதே இல்லை.

மெளனமாக இருக்கவேண்டிய தருணங்களும் வெடித்துக் கதறுகிற பொழுதுகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால் நாம்தான், அமைதியாக இருக்க வேண்டியதற்குப் பதிலாக காச்மூச்சென்று கத்தி, களேபரப்படுத்திவிடுகிறோம். அதேபோல், வாய்விட்டு சொல்லவேண்டிய சமயங்களில், மெளனச்சாமியாராகி, இன்னும் பிரஷர் ஏற்றி, நமக்குள்ளேயும் பிரஷர் ஏற்றிக் கொள்கிறோம்.

ஒரு சின்ன ஆங்காரம், ஒரு சிறிய வேதனைச் சம்பவம், நமக்குள் விழுந்த வலிகளுக்கும் அவமானங்களுக்கும் நாம்தானே பொறுப்பு என்பதை நாம் உணருவதே இல்லை. கண்ணை மூடிக் கொண்டு அடுத்தவர் மீது பழி போடுவதே மிக எளிய வழியெனக் கையாள்கிறோம்.

நமக்குப் பிடிக்காத பாகற்காய் சாம்பாரில் இருந்தே தொடங்குகின்றன நம் பிடிவாதங்கள். முப்பது நாளில் ஒருநாள்... அதிலும் ஒருவேளைதானே என்றெல்லாம் யோசிக்காமல், நாலுதெரு தள்ளியிருக்கிற பாகற்காய் வாங்கிய காய்கறிக்கடைக்குக் கேட்பது மாதிரி, கத்தி, திருப்பள்ளியெழுச்சி பாடி, நாமும்  நம்முடைய சூழலைக் கெடுத்துக் கொண்டு, நம் வீட்டாரின் சூழலையும் கெடுத்து... தேவையா இது?  மனைவியிடம் மன்னிப்பைக் கேட்பது இருக்கட்டும். உங்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா? ‘ஸாரிப்பா... பாகற்காய் நல்லதுதானே. ஒருநாள்தானே. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருக்கலாம். தப்புப் பண்ணிட்டேன்’ என்று உங்களுக்கு நீங்களே மன்னிப்பு கேட்டிருக்கலாமே!

தற்கொலை முயற்சி எப்படி தண்டனைக்கு உரியதோ, அப்படித்தான் நாம் நம்மைக் காயப்படுத்திக் கொள்வதும்... நம் சூழலை ரணகளமாக்குவதும்!

சாலையில் செல்கிறீர்கள். டூவீலர் நுழையும் இடத்திற்குள் சட்டென்று உங்களுக்கு வலது பக்கத்தில் வந்த கார், தடக்கென்று லெஃப்ட் எடுக்க... கொஞ்சம் திணறித்தான் சுதாரிக்கிறீர்கள். உடனே, காருக்கு முன்னே சென்று, டிரைவரை முறைத்து, நெற்றிப் பொட்டில் தட்டி, ‘அறிவிருக்கா’ என்று கேட்டு, அவர் கார் கண்ணாடி இறக்கி, சத்தம் போட, பதிலுக்கு நீங்களும் எகிறியடிக்க... இந்த களேபரங்கள்... அந்த ஒருநாளின் பல செயல்களுக்குள் புகுந்து உட்கார்ந்து கொண்டு, இம்சை பண்ணும். மொத்த இம்சையையும் உங்கள் மனம் தாங்கிக் கொள்ளவேண்டும். அந்த கார் டிரைவரைக் கண்டுகொள்ளாமலேயே விட்டிருக்கலாம். ஆனால் நீங்கள், உங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?

உங்களை நீங்களே மதிக்கவில்லை என்றால், பிறகு யார்தான் உங்களை மதிப்பார்களாம்!

உடன் வேலை செய்பவரிடம்  சைலண்டாகக் காட்டுகிற ஈகோ, உள்ளுக்குள் ஒரு மனநோயாகவே மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்போதுதான் புரிந்துகொள்வீர்கள். உங்களுக்கான உணவு, அடுத்தவரின் கையில் இல்லை. அடுத்தவரின் வளர்ச்சியில், உங்களின் வீழ்ச்சி இருப்பதாக நினைத்து, பொருமுகிறீர்கள். புலம்புகிறீர்கள்.

நீரடித்து நீர் விலகாது என்பார்கள். ஆனால் நம்மை நாமே அடித்துப் பதம் பார்க்கிற போதெல்லாம், மிக மிக பரிதாபத்துக்கு உரியவராக நமக்குள் இருக்கிற நாம் காட்சியளிக்கிறோம் என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறோம்.

அழகான சட்டை அணிந்து கொண்டால், ‘செமடா... சூப்பரா இருக்கியே’ என்று கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு, நாமே நம்மைப் பாராட்டிக் கொள்கிறோம். கோடைக்கு ஒட்ட முடி வெட்டிக் கொண்டாலோ, அப்படி வெட்டப்பட்ட முடி அலங்காரம், அழகுற அமைந்திருந்தாலோ, நரைக்குத் திரையென இருக்கும் ‘டை’ அடித்து, இளமை துள்ள இருந்தாலோ, இருப்பதாக நினைத்தாலோ, ‘உங்க பையனை சரியா வளர்த்திருக்கீங்க. ரொம்ப நல்லவனா இருக்கான்’ என்று பள்ளி ஆசிரியை சொல்லும் போதோ, ‘உங்க பொண்டாட்டி,நீங்க சொல்லாம எதையும் செய்யமாட்டாளாம். இதை பயந்து சொல்லலை. அவ்ளோ அஃபெக்‌ஷன்னு சொல்றா. மேட் ஃபார் ஈச் அதர்க்கு நீங்கதான் உதாரணம்’ என்று அக்கம்பக்கத்தார் சொல்லும் போதோ, கண்ணாடிக்கு எதிரில் நின்றுகொண்டோ, மனசுக்குள்ளேயோ உற்சாகமாக, பெருமிதப்பட்டுக் கொள்கிறீர்கள்தானே!

அதேபோல், காயப்படுகிற தருணங்களில், காயப்படுத்துகிற வேளைகளில், ‘ஸாரிப்பா... கொஞ்சம் டென்ஷனாகி, என் மனசை , உடம்பை நானே படுத்தியெடுத்துட்டேன். எல்லாரும் என்னை மன்னிச்சிருங்கப்பா’ என்று ஏன் சொல்லத் தயங்குகிறோம். ஏன் சொல்ல மறுக்கிறோம்.

‘நேத்திக்கி தேவையே இல்லாம ரொம்ப நேரம் டிவி பாத்ததால, காலைல சரியான  தூக்கமில்லாம எழுந்திருக்கும்படி ஆயிருச்சு. கண்ணெல்லாம் எரிச்சல். உடம்பெல்லாம் அயர்ச்சி. ஒரு ஸாரி... உங்களுக்காக, நீங்களே கேளுங்களேன். கேட்டுப் பாருங்களேன்.

புகைபிடிப்பதோ மது அருந்துவதோ... பொய் சொல்லுவதோ அடுத்தவர் குறித்து இல்லாததும் பொல்லாததும் சொல்லுவதோ... கோபம் கொள்வதோ, கோபத்தில் கூப்பாடு போடுவதோ... உண்மையை மறைப்பதோ, அடுத்தவர் குறித்து புரியாமல் இருப்பதோ, புரிந்தும் புரியாதது போல் நடிப்பதோ... அடுத்தவர்களைத் தாக்கும் என்பதெல்லாம் இருக்கட்டும். அந்த ஆக்டோபஸ் கரங்கள், முதலில் நம்மையும் நம் பொன்னான மனதையும் விழுங்கி ஏப்பம் விடும் என்பதை உணருவோம்.

இந்த, இத்தனை வருட வாழ்க்கையில், நாம் நம்மிடம் எதற்காகவெல்லாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று ஒரு பட்டியல் போடுங்கள். அந்தப் பட்டியலின் படி நிறுத்தி நிதானமாக, மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களுக்கு நீங்களே மன்னிப்புக் கேளுங்கள்.

அந்தப் பட்டியலை யாருக்கும் காட்டத் தேவையில்லை. அப்படிக் காட்டினால், அதற்காகவும் ஒருமுறை உங்களுக்கு நீங்கள், கேட்கவேண்டியிருக்கும் மன்னிப்பு!   

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close