[X] Close
 

வீட்டுக்கு ஒரு தோட்டம்!


veettukku-oru-thottam

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Apr, 2018 11:20 am
  • அ+ அ-

           சொந்த வீட்டுக் கனவு கூட நம்மில் பலருக்கு இருப்பதில்லை. ஆனால் நமக்கெல்லாம் இருக்கும் ஆகப் பெரிய ஆசையும் ஆகச் சிறந்த விருப்பமும்... தோட்டம்தான்! யானை, கடல், ரயில், வானம்  போல எல்லோருக்கும் பிடித்த விஷயங்களில் தோட்டமும் தனித்துவம் பெறுகிறது. வீட்டில் பெரிதான தோட்டம் வைத்திருக்கிறோமோ இல்லையோ... நாலைந்து செடிகளாவது வைத்து, தண்ணீரூற்றி, பராமரித்து வருகிறவர்கள் ஏராளம்!

    வீட்டில் தோட்டம் வைத்துப் பராமரிப்பது என்பது,  மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைகிறது. கூடவே, நம் அந்தஸ்தையும் உயர்த்திக் காட்டுகிற செயலாகவும் ஆகிவிட்டது.

 தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் அதீத கவனம் செலுத்தவேண்டும் என்பது அதைவிட முக்கியம்.

   பூச்சு தொற்றுகள் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்பதும் நீரின்றி காய்ந்த நிலையில் செடிகள் இருக்கவேண்டும் என்பது மிக மிக அவசியம். இந்த இரண்டிலும் கண்ணும்கருத்துமாக இருந்தாலே, செடிகளை வளர்ப்பது ரொம்பவே ஈஸி என்கிறார்கள் தோட்டக்கலை வல்லுநர்கள்.

 ‘’தோட்டத்தில் உள்ள செடிகளைக் குழந்தைகளைப் போலப் பராமரிக்க வேண்டும். அவற்றில் பூச்சித் தொற்று ஏற்பட்டால் உடனே பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

    வீட்டுத் தோட்டத்தில் பெரும்பாலும் செம்பருத்திச் செடிகளில் ‘மீலி பெக்’ என்ற பஞ்சுப் பூச்சித் தாக்குதல் இருக்கும். இது பார்ப்பதற்கு வெள்ளைப் பொடி போல இருக்கும். இந்தப் பூச்சித் தாக்குதலில் இருந்து செடிகளைக் காக்க ரோகர் அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூறல் மாதிரி ஸ்பிரே செய்ய வேண்டும். இந்தச் சிறிய ஸ்பிரே தோட்டப் பொருள்கள் விற்கப்படும் கடைகளில் கிடைக்கும் என்கிறார் மகாலட்சுமி கணேசன்.

   இது கோடைகாலம் முடியும் தருணம். இந்தக் காலகட்டத்தில், காலை, மாலை என இரண்டு வேளையும் செடிகளுக்குத் தண்ணீர் விட வேண்டும். குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டாலே போதுமானது. வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். இதைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் எந்தப் பயனுமில்லை.

  வேப்ப எண்ணெய் போல் ஓர் மருந்து, மனிதர்க்கும் இல்லை, தாவரங்களுக்கும் இல்லை. இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை அனைத்துச் செடிகளிலும் தெளியுங்கள். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ளுங்கள். இந்தத் தூளை, செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர்ப் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரம்.  பூச்சிக் கொல்லி மருந்து என்கிறார்கள் செடி வளர்க்கும் பெண்கள்!

    குழந்தைகள் வளர வளர உணவும் உணவின் தேவையும் மாறுபடுகின்றன அல்லவா. செடிகளும் குழந்தைகள்தான். வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரமும் இரண்டு வயதுச் செடிகளுக்கு இரண்டு மடங்கு உரமும் போடவேண்டும்.  இதேபோல, தொட்டிச் செடிகளுக்கும் உரமிட்டு வளர்க்கவேண்டும்.

   வீட்டுக்குள் இண்டோர் பிளாண்ட் வளர்ப்பார்கள். அப்படி வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும். இந்தச் செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தாலே போதுமானது.

  வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம். இதற்கு முன்னதாக, செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்தி விடவேண்டும். இதுவே தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடி பாகத்தில் மட்டும் தண்ணீர் விட்டாலே போதும்!

  இவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணையை ஸ்பிரே செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் வீட்டுத் தோட்டச் செடிகளும், வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளும் எப்போதும் பொலிவாகவும் பசுமையாகவும்  இருக்கும் என்பது உறுதி.

   மாடிப் பகுதி வீணாகிறது என்பதை உணர்ந்த மக்கள் அதிகரிக்கத் துவங்கிவிட்டார்கள். ஒரு சிண்டெக்ஸ் தொட்டியும், கோடையிலும் மின்சாரம் ‘கட்’டான போது வந்து படுத்துக் கொள்ளவும் துணி காயப்போடவும் பயன்படுத்தப்பட்டு வந்த மாடிப் பகுதி, இன்றைக்குத் தோட்டமாக, பசுஞ்சோலையாகத் திகழ்கிறது.

நமக்கே நமக்கென ஒரு தோட்டம்... அந்தத் தோட்டத்தைப் பராமரிப்பதும் செடிகளை வளர்ப்பதும் நம் வேலை, பணி, சேவை, கடமை, ஆசை, பொழுதுபோக்கு! எல்லாவற்றுக்கும் மேலாக, செடிகள்... நமக்கு உறவுக்காரர்கள். நம் குழந்தைகள் என்பதையும் உணருவீர்கள்!

 

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close