[X] Close

குடை, தொப்பி, கூலிங்கிளாஸ்... நமக்கு நண்பன்; வெயிலுக்கு எதிரி!


kudai-thoppi-cooling-glass

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Mar, 2018 15:00 pm
  • அ+ அ-

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். நிழலின் அருமை மட்டுமா? குடை, தொப்பி, கூலிங்கிளாஸ் என சகலத்தின் பயன்களையும் சுட்டுச்சுட்டு சொல்லிக் கொடுக்கிறது வெயில்.

ஏப்ரலில் இருந்து தொடங்கும் கோடைகாலம். மே மாதம் தொடங்கி இறுதி வரை இருக்கும், அக்கினி நட்சத்திர காலம். இந்த வெயின் பேயாட்டம், ஜூன் கடந்து ஜூலை வரை இருக்கும்.

திருச்சி, வேலூர், சேலம், சென்னை முதலான ஊர்களில் வருடம் 365 நாளும் மற்றவை விருந்தாளி போல், வந்துவிட்டுப் போக, இந்த வெயில் மட்டும், ஆதார் கார்டு வாங்கி, ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்து, எட்டு போட்டு டிரைவிங் லைசென்ஸூம் வாங்கி, குடியிருக்கிற அந்தத் தொகுதியின் வாக்காளர் போலவே, தங்குகிறது.

இதோ... மார்ச் மாதம் என்பது இயர் எண்டிங் மாதம் (year ending month) என்பார்கள். வெயிலைப் பொருத்தவரை, இயர் பிகினிங் மாதமாகிவிட்டது.

'என்னா வெயிலுங்க. போன வருஷத்தைவிட இந்த வருஷம் வெயில் செம ஜாஸ்திங்க’ என்று வருடாவருடம் சொல்லுகிற டயலாக்தான் என்றாலும் இந்த வசனத்திற்குள் உண்மை, சுட்டெரிக்கிறது என்பது நிஜம்.

முன்பெல்லாம் மரங்கள், தண்ணிபட்ட பாடாக இருந்தன. இப்போது தண்ணிபடாத பாடாக, மரங்களைப் படுத்தியெடுத்து, சாலைவிரிவாக்கங்களில் குறைக்கத் தொடங்கிவிட்டோம், மரங்களை.

‘மரம்தான்

மரம்தான்

எல்லாம் மரம்தான்.

மறந்தான்

மறந்தான்

மனிதன் மறந்தான்!’ என்கிற கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள், ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.

பின்னே... கவிதையும் ஓர் இளைப்பாறல்தானே.

அதைவிடுங்கள்.

மூட்டைப்பூச்சிக்கு பயந்து கொளுத்தவும் முடியாது. வெயிலுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவும் முடியாது. சித்திரைத் திருவிழாவில் அழகர்மலையில் இருந்து கிளம்பிவரும் கள்ளழகரை, தல்லாகுளம் பகுதியில், எதிர்கொண்டு அழைப்பார்களே.... அதுமாதிரி வெயிலை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

எப்படி எதிர்கொள்வது?

குடையின் கீழே...

டூ இன் ஒன் என்பார்கள். ஆனால் குடை... ஒன் இன் டூ. அதாவது வெயில் படாமலும் பாதுகாக்கும். மழையில் நனையாமலும் காபந்துபண்ணும். ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் கண்டிப்பாக, கையில் குடை வைத்துக்கொள்ளுங்கள்.

‘மழை பெய்ற மாதிரி இருக்குன்னு குடை எடுத்துட்டு வந்தா மழையே காணோமேப்பா’ என்கிற லாஜிக்கெல்லாம் வெயிலுக்கு எடுபடாது. இங்கே லாஜிக் மீறல் நிச்சயம். எனவே, வெயிலைச் சமாளிக்க, குடையுடன் கிளம்பி, குடையுடன் நடந்து, குடையின் கீழ் குடைபட வாழ்வோம். ‘அடச்சே... என்னப்பா இது... இந்த ஆளை ஒண்ணும் பண்ணமுடியலியே...’ என்று வெயிலே அலுத்துக் கொள்ளும்.

கூல்... கூல்... கூலிங் கிளாஸ்

தினமும் காலையில் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி’ மாதிரி இருக்கிற சூரியன், நேரமாக ஆக, மாற்றாந்தாய் மனோபாவத்துடன் நம்மை வறுத்து, வெளுத்து, துவைத்துக் காயப்போட்டுவிடும். அப்போது அதன் முதல் டார்கெட்... நம் கண்கள்தான்!

‘ஆனந்தா, என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்’ என்று பாசமலர் சிவாஜிகணக்காக, தைரியமாக ஒப்படைக்க ஒரு ஜெமினிகணேசன் வேண்டும்தானே. அப்படி தைரியமாக, நம் கண்ணை கண்ணாடிக்குத் தரலாம். குறையொன்றுமில்லை.

நல்ல நல்ல கூலிங்கிளாஸ்கள் வந்துவிட்டன. உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கூட, ஆளுக்கொரு கூலிங்கிளாஸ் வாங்கலாம். அணியலாம். அணிந்துகொண்டு, சூரியனுக்கே டார்ச்லைட் காட்டிய கதை போல, சூரியனுக்கு டார்க் செட்டப் செய்து, குளுமையாகவே ஆக்கிவிடலாம். என்ன... காமாலைக் காரருக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல், கூலிங்கிளாஸ் சூரியனையே நிலவாக்கும்; பகலையே இரவாக்கும். ஆனாலும் கூல் கூல் கூலிங்கிளாஸ் வெயிலுக்கு கைகொடுக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

ஹை... தொப்பி... தொப்பி..

ரகம்ரகமாக, தினுசுதினுசாக வண்ணங்களில் ஜாலம் காட்டுகின்றன தொப்பிகள். கூலிங்கிளாஸ், மிஷ்கினை ஞாபகப்படுத்தினாலோ தொப்பி, பாலுமகேந்திராவை நினைவுபடுத்தினாலோ... நான் பொறுப்பல்ல.

ஆகவே வெயிலுக்கும் நம் தலைக்கும் நடுவே ஒரு திரை இருப்பது, அதுவும் தொப்பியாக ஒரு கிரீடம் போல் வந்து அமர்ந்திருப்பது, அவசியம் மட்டுமல்ல... அழகும் கூட! முன்பக்கம் நீண்டிருக்கும் தொப்பி, வட்டத் தொப்பி, கெளபாய் தொப்பி, எம்ஜிஆர் தொப்பி என்றெல்லாம் கிடைக்கிறது. வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள். வெயிலைத் துரத்துங்கள்.

என்னடா இது இப்படி தலையில் குல்லா போட்டுக் கொள்கிறோமே என்றெல்லாம் ‘கில்டி’யாக நினைக்காதீர்கள். அடுத்தவருக்கு குல்லா போடுவதுதான் தப்பு.

தலையில் தொப்பி, கண்ணில் கூலிங்கிளாஸ், கையில் குடை... ஒரே கல்லில் மூன்று மாங்காய். வெயிலை நோக்கி மும்முனைத் தாக்குதல்.

நம் குடை, நம் கூலிங்கிளாஸ், நம் தொப்பி... நம் பாதுகாப்பு!

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close