[X] Close
 

உங்கள் குழந்தைகளின் ஆர்வமும் தஞ்சை பெரியகோயிலின் ஆச்சர்யங்களும்!  


kodaiyil-periya-koil

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Mar, 2018 10:59 am
  • அ+ அ-

ஆச்சரியமும் வியப்பும் நிறைந்தது சோழ தேசம். குளுகுளு கோடைவாசஸ்தலங்கள் சுற்றுலாவுக்கு ஏற்றது என்றாலும், நம் வரலாறும், நம்மை ஆண்ட மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்கள், குறிப்பாக, நம் சந்ததிக்குத் தெரியவேண்டும்தானே! ஒருகாலத்தில் காவிரியால் வற்றாத செழுமை கொண்டிருந்த சோழ தேசத்திற்கு, ஒருமுறையேனும் சென்று வாருங்கள். சோறு கொடுத்த தேசத்தின் வரலாற்றைப் படித்து வாருங்கள்.

தஞ்சை பெரியகோயிலின் ஆச்சரியங்களை அறிய அறிய, உங்கள் குழந்தைகளின் சரித்திர ஆர்வம் இன்னும் இன்னும் அதிகமாகும்.

தரணி போற்றும் தஞ்சை

உலகம் வியந்த சோழ மன்னர்களின் ஆட்சி, அவர்களின் கலைநயம் மிக்க கட்டுமானங்களுக்கு சாட்சி தஞ்சைப் பெரிய கோயில். தஞ்சாவூர் என்றாலே “இராஜராஜேச்சரம்” எனப் பெருமையுடன் போற்றப்படும் ‘பெரிய கோயில்’தான் நினைவில் வரும். ‘பிரஹதீஸ்வரம்’, ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ என்றும் அழைக்கப்படுகிறது கோயில்.

தென்னகக் கோயில்களில், மிக உயர்ந்த விமானத்தை (சுமார் 216 அடி உயரம்) உடையது பெரியகோயில். நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்ட பெரிய நந்தி, இக்கோயிலுக்கு பெருமையைக் கூட்டுகிறது. சோழர்கள் வழிபட்ட கலைநயம் மிக்க நந்தி, ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ளது.

“கோபுர நிழல் கீழே விழாது, நந்தி வளருகிறது, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி, கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது” எனப் பல செய்திகள் சொல்லப்பட்டாலும், அனைத்துமே உண்மை அல்ல.

ராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது. மூன்று பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் லிங்கத்தின் நடுவில் உள்ள பாணம் நீண்ட தூண்வடிவில் இருக்கிறது. மேல்பாகம் உருளை வடிவம், பீடப்பகுதி சதுரம், நடுப்பகுதியில் எண்பட்டை அமைப்பில் உள்ளது. தரையிலிருந்து 12 அடி 10 அங்குல உயரத்தில் இருந்தாலும், அடிப்பகுதி தரைக்குள் 3 அல்லது 4 அடியாவது புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ 16 அடி உயரமுடைய ஒரே கல்லால் ஆன லிங்கம் இது.

லிங்கம் உள்ள சன்னதி ஒரே வாயிலுடன் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடன் அமைந்துள்ளது. சன்னதி விமானத்தின் உச்சியில் உள்ள பாறை போன்ற அமைப்பு, ஒரே கல் போலத் தோற்றமளிக்கும் வகையில், பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது.  கருவறைக்கு மேலே உள்ள பிராகாரச் சுவர்களில் ஆடல் கலையின் 108 கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் 4 மட்டும் முழுமை பெறவில்லை. மன்னரின் கலை நேர்த்தியைத் தெரிவிக்கும் அடர்த்தியான உதாரணம் இவை.

மண்டபப் பகுதியில் உள்ள துவாரபாலகர் சிற்பத்தின் காலடியில் ஒரு மலைப் பாம்பு, யானை ஒன்றை விழுங்கிக் கொண்டிருக்கும் சிற்பம், சரபோஜி மன்னன், வீரசிங்கம்பேட்டை எனும் ஊரிலிருந்து கொண்டு வந்து (கி.பி.1801) பிரதிஷ்டை செய்த 108 சிறிய சிவலிங்கங்கள் என காண்பதற்கு பல அரிய பொக்கிஷங்களைக் கொண்ட கோயில் இது. பாண்டிய மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், விஜய நகரப் பேரரசுகளாலும் கொண்டாடப்பட்ட பெருமையும் இக்கோயிலுக்கு உண்டு.

கல்வெட்டுக் களஞ்சியம்

கட்டுமானம் மட்டுமின்றி கல்வெட்டுக்களாலும் பெருமை கூடுகிறது தஞ்சைக்கு. கோயில் எழுப்ப உதவிய அத்தனை பேரின் பெயர்களையும் கல்வெட்டில் எழுதி மரியாதை செய்திருக்கிறான் மன்னன் ராஜராஜசோழன்.

மன்னன் ராஜராஜன் கொண்டாடித் தீர்த்த கோயில் இது. கோயில் திருவாயிலிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டின்படி கோயில் விமானம் முழுவதும் மன்னன் பொன் வேய்ந்தான் என்று தெரிகிறது. அவனுடைய சகோதரி குந்தவை நாச்சியார், பட்டத்தரசி லோகமகாதேவியார், மற்ற மனைவியரான சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, லாடமாதேவி ஆகியோரும் கொடைகள் அளித்திருக்கிறார்கள் என்ற விவரமும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

இயல், இசை, நாடகம் சிறப்பாக வளர்ந்த தலம் இது. நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளோடு, நட்டுவனார்கள், உடன்பாடுவோர், ஆரியம் (வேதம் ஓதுதல்), கானம் மற்றும் தமிழ் பாடுவோர், மெராவியம், உடுக்கை, வங்கியம், பாடவியம், வீணை, கொட்டி மத்தளம் ஆகிய இசைக்கருவிகளை இசைப்போர், முத்திரைச் சங்கு ஊதுவோர், பக்கவாத்தியம் வாசிப்போர் எனப் பற்பலரும் இங்கு பணி புரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் இன்றும் உண்டு.

கலை, கட்டுமானம், அதை வெளிப்படுத்தும் கல்வெட்டுக்கள் என பிரமிக்க வைக்கும் சோழ தேசத்தின் மணி மகுடமாம் தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்க்கவும், அதன் தொன்மத்தில் இளைப்பாறவும் சுற்றுலா செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டியம், இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

காலங்கள் மாறினாலும், நகரம் அழிந்து போனாலும், அவன் எழுப்பிய ‘ராஜராஜேச்சரம்’ காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்! ஒருமுறையேனும் நேரில் வந்து பார்த்தால்தான் ஆலயத்தின் பெருமைகளை உணர முடியும்.

காவிரிப்பூம்பட்டினம், கங்கைகொண்ட சோழபுரம், கும்பகோணம் தாராசுரம், திருவாரூர், சிதம்பரம், பிச்சாவரம் என சோழ தேசத்தின் அழகுப் பட்டியல் நீண்டது.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close