[X] Close

உங்கள் வீட்டு ‘டாய்லெட்’; சுத்தம் செய்வது யார்?


toilet-cleaning

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Mar, 2018 13:12 pm
  • அ+ அ-

சுத்தம் விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? வீட்டை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய கலை என்று சுத்தம் பேணுதலுக்கு ஆகச்சிறந்த கெளரவத்தைத் தருகிற நாம், வீட்டில் இடங்களுக்குத் தக்கபடி பாரபட்சம் காட்டுகிறோம்.

முக்கால்வாசி பேர், வீட்டு ஹாலை சுத்தம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ‘யார் வந்தாலும் ஹால்லதான் உக்காருவாங்க. அதனால் ஹாலை ரெண்டுநாளைக்கு ஒருமுறை க்ளீன் பண்ணிக்கிட்டே இருப்பேன்’ என்கிறவர்கள் உண்டு.

ஆனால் வீடு என்பது வெறும் ஹால் மட்டுமா? சமையலறை, பூஜையறை, படுக்கையறை, அவ்வளவு ஏன்... கழிப்பறை கூட வீடு என்பதின் அடக்கம்தானே! ஆனால் கழிப்பறை சுத்தப்படுத்துவது குறித்த விழிப்பு உணர்வு பலரிடம் இல்லை என்பதே உண்மை.

ஒருநாளில், பலநூறு முறை, டிவி வழியே கழிப்பறை சுத்தத்திற்கான அறிவுரையை அப்பாஸ் தலையால் தண்ணிகுடித்து சொல்லித் தருகிறார். ஆனால் நாம்தான் சரிவரக் கேட்பதே இல்லை.

இங்கே இரண்டு விஷயம். ஒன்று கழிவறை சுத்தம். அடுத்தது... அதை சுத்தப்படுத்துவது யார்?

72 சதவிகிதம் வீடுகளில், வீட்டுக்கழிவறையை பெண்கள்தான் சுத்தப்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று. ’ஏம்மா... டாய்லெட்டெல்லாம் க்ளீன் பண்ணமாட்டியா? கொஞ்சம் சரி பண்ணும்மா’ என்று சொல்வது மட்டுமே ஆணின் வேலையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கழிவறை என்றில்லை. அசுத்தத்தையும் தூசுகளையும் கண்டறியும் விஞ்ஞானிகளாகவே ஆண்கள் இருக்கிறார்கள். ‘இந்த டிவி டேபிள்ல அவ்ளோ தூசு இருக்கு. சொல்லிக்கிட்டே இருக்கேன். கேக்கவே மாட்டேங்கிறே’ என்பார்கள்.

‘இந்த பீரோல பேப்பர் மாத்தி, அந்துருண்டை வைச்சு, துணிலாம் அடுக்கி வைச்சா, குறைஞ்சா போயிருவே. நான் கிளம்பினதும் பசங்களும் கிளம்பிடுறாங்க. அப்புறம் என்னதான் பண்றே. சீரியல் சீரியல்னே கட்டிக்கிட்டு அழு’ என்று சொல்கிற ஆண்கள்தான் அதிகம்.

உண்மையிலேயே சுத்தம் செய்தல் என்பது ஆகச்சிறந்த கலை.  அதை ரசித்துச் செய்யவேண்டும்.

நண்பர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை என்றில்லை. என்றைக் கெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ... அந்த நாளில், பாத்ரூமில் இருக்கிற பக்கெட்டுகளையெல்லாம் சோப் பவுடர் போட்டுக் கழுவி, வெளியே கவிழ்த்து காயவைப்பார். பாத்ரூம் சுவர்களில் படிந்திருக்கும் ஒட்டடைகளை அடிப்பார். கழிவறை ஸிங்க், வாஷ் பேஸின் முதலான இடங்களில், ஹார்பிக் அல்லது இன்ன பிற திரவத்தை ஊற்றி, ஊறவைப்பார். அந்த நேரத்தில், பாத்ரூம் ஸிங்க்கில் முதல்நாள் இரவு பயன்படுத்தப்பட்டு கழுவுவதற்கான பாத்திரங்களை, தேய்த்து, கவிழ்த்துவைப்பார். இப்போது ஸ்ங்க்கில் பாத்திரங்கள் எதுவுமே இருக்காது.

அடுத்து, அந்த ஸிங்க், சமையல் மேடை என நன்றாகக் கழுவி சுத்தம் செய்வார். பிறகு மின்விசிறியைச் சுழல விட்டு, அதன் கீழே ஒரு ஐந்துநிமிடம் இளைப்பாறல். இதன் பிறகு, பாத்ரூம் க்ளீனிங் ஆபரேஷன். டாய்லெட் ஸிங்க், பாத்ரூம் தரை என தேய்ப்பதற்காக உள்ள இரண்டு விதமான பிரஷ்களைக் கொண்டு, தேய்த்து, தண்ணீர் விட்டு, தேய்த்து, தண்ணீர் விட்டு, பளிச்சென்று ஆக்கியிருப்பார்.

அதேபோல், பாத்ரூம் சுவர்களில் உள்ள டைல்ஸ் பகுதிகளையும் லிக்யுடு போட்டு, பிரஷ்ஷால் க்ளீன் செய்வார். பிறகு வெளியே கவிழ்த்து வைக்கப்பட்டு காய்ந்த பக்கெட்டுகளையும் கப்புகளையும் எடுத்து வந்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு, பாத்ரூம் மூலைப்பகுதிகளில், பினாயில் தெளித்துவிட்டு, வெளியே வருவார்.

டாய்லெட் சுத்தம் செய்கிற கணவன்மார்கள் வெகு குறைவு என்றுதான் ஆய்வு சொல்லுகிறது.

‘பாவம்... அவருக்கு சண்டே ஒருநாள்தான் ரெஸ்ட்டு. அதனால அவரை எந்தவேலையும் ஏவறதே இல்லீங்க. சுருண்டு தூங்கறவரைப் பாக்கவே பாவமா இருக்கும்’ என்கிறார்கள் பெண்கள்.

‘என்னைப் புரிஞ்சுக்கிட்ட மனைவி கிடைக்கறது வரம். என் மனைவி அப்படித்தான். என்னை எந்த வேலையையும் செய்யவிடமாட்டாங்க. வீட்டு வேலை, வீட்டைச் சுத்தம் பண்ற வேலைன்னு எல்லாத்தையும் பக்காவா செஞ்சிடுவாங்க. வீட்டை அப்படி சுத்தமா வைச்சிருப்பாங்க’ என்று மனைவிமார்களுக்கு திருவாளர்கள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கொடுக்கிறார்கள்.

ஆதிக்க சிந்தனைகளுக்குள் போகத்தேவையில்லை. என்றாலும் கூட, ஒரு கழிவறை சுத்தத்தில், உளவியலாக பல விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

காந்தியப் பொருளாதாரத் தத்துவத்தின் அதிகாரபூர்வ கருத்தாளராகப் போற்றப்பட்ட ஜே.சி.குமரப்பாவைத் தெரியும்தானே.  தன் வாழ்வின் பெரும்பகுதியை கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சிக்காகச் செலவிட்டவர். 1934-ம் ஆண்டு காந்தி தலைமையில் தொடங்கிய அகில இந்திய கிராமக் கைத்தொழில் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றிய குமரப்பா, அழிந்துவரும் கிராமத் தொழில்களை மீட்டெடுப்பதற்காக கடுமையாகப் பாடுபட்டார். ஆங்கிலப் புலமை கொண்டவர். உலக ஞானம் அறிந்த மகாபுத்திசாலி.

மகாத்மா காந்தியிடம் சேரவேண்டும், அவரின் கொள்கைகள்படி வாழவேண்டும். மகாத்மாவின் கொள்கைகளை இந்தியா முழுக்கச் சொல்லவேண்டும் என்கிற ஆசைகளுடனும் கனவுகளுடனும் லட்சியங்களுடனும் மகாத்மாவைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார்.

‘அப்படியா... ரொம்பநல்லது. உங்களைப் போன்றவர்கள்தான் நம் நாட்டுக்குத் தேவை’ என்ற மகாத்மா அடுத்து என்ன சொன்னார் தெரியுமா?

‘சரி... பின்பக்கம் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்யத் தொடங்குங்கள்!’

பால் பாக்கெட்டை அம்மாவிடமும் நாளிதழை அப்பாவிடம் தருகிற மனோபாவங்களும் குறியீடுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நாம்தான் அப்டேட்டுக்கு வரவேண்டும்.

இனிய குடும்பத்தலைவர்களே! ஒரேயொரு முறை வீட்டின் கழிவறையைச் சுத்தம் செய்து பாருங்கள். அதனுள்ளே உள்ள உளவியல் புரியவரும். அத்துடன் மனதின் ஏதோவொரு பக்கத்தில் இருக்கிற தேவையற்றதான கனம் காணாமல் போகும். மனசு தக்கையாகும். நீங்களே உணர்வீர்கள்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close