[X] Close

பொய்யை அதிகமாக்கிய செல்போன்!


poi-cellphone

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Mar, 2018 11:29 am
  • அ+ அ-

அண்டப்புளுகன் ஆகாசப் புளுகன் என்பதுதான், பொய் பேசுபவர்கள் குறித்துச் சொல்லுகிற அதிகபட்ச வார்த்தை. இந்த வாசகம், செல்போன் கண்டுபிடிக்காத காலத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. செல்போன் நம் நாடி, நரம்பு, ரத்தம், நாளம், செல்கள் என செல்போன் பரவியும்விரவியும் கிடக்கிற, இந்தக் காலத்தில், பொய்பேசுவோர் குறித்துச் சொல்ல வார்த்தைகளைத் தேடணும் போல!

அடேங்கப்பா... எங்கு திரும்பினாலும் எந்தக் குரலாக இருந்தாலும், எவரோ எவருக்கோ செல்போனில் சொல்லிக்கொண்டிருக்கிற பேச்சில்... அங்கிருந்து ஏதோ ஒரு பொய், நம் காதுகளில் விழுந்து குடைந்துகொண்டே இருக்கின்றன.

‘என்ன... போனே பண்றதில்ல’ என்று நண்பர்களோ உறவினர்களோ கேட்டால், சட்டென்று பதில் வருகிறது. ‘பழைய போன் ரிப்பேராயிருச்சுன்னு புதுபோன் வாங்கினேன். அதுல நம்பர் மிஸ்ஸாயிருச்சு’

எதிர்முனைக்காரர், இதை பாதி நம்புவார்; மீதி நம்பாமல் கடந்துவிடுவார். இங்கே, நம்மாள் சொல்கிற அதிகபட்ச பொய்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிற ஸ்டார் வேல்யூ பொய் இதுதான்.

ஆபீஸ், சினிமா, வெளியூர்ப் பயணம், கோயில், காதுகுத்து என எதுவாக இருந்தாலும் சரி... நம்முடன் வரும் நண்பரோ இன்னபிற பரிதாபத்திற்கு உரிய ஜீவன்களோ... ‘அப்புறம்... கிளம்பிட்டீங்களா? 9 மணிக்கு சந்திக்கலாம்னு சொன்னீங்களே...’ என்று கேட்பார்கள். எட்டு மணிக்குக் கிளம்பினால்தான் ஒன்பது மணிக்கு பார்க்கமுடியும். ஆனால் மணி எட்டரையாகியிருக்கும். நம்ம தலைவர், இப்பத்தான் பல்லும் பிரஷ்ஷூமா இருப்பார். ஆனால் வீட்டில் இருந்துகொண்டே அவர் சொல்லுவார்...

‘’இங்கெல்லாம் செம டிராபிக். இதோ... வந்துக்கிட்டே இருக்கேன். ஒருபத்துபதினஞ்சு நிமிஷம் லேட்டாகும் போல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க’ என்பார். அவரை, அந்த வீடு, வேற்றுகிரகவாசி போல பார்க்கும்.

இப்படித்தான், நந்தனம் சிக்னலில், கிண்டி நோக்கிச் செல்ல நின்றுகொண்டிருந்தவருக்கு, ஏதோ போன் வந்தது. ‘ஆமா சார்... இதோ... வந்துட்டேன் சார்... வந்துடுறேன் சார்... சின்னமலை வந்துட்டேன் சார்...’ என்றதும் பக்கத்தில் இருந்த டூவீலர் பெண்ணும் ஆட்டோக்கார அண்ணனும் அவரை ஏற இறங்கப் பார்த்தார்கள். ‘ஏம்பா... சின்னமலை வந்தாச்சா’ என்று ஆட்டோ பயணி கேட்க, ஆட்டோக்காரர், ‘இல்லீங்க... சைதாபேட்டை தாண்டினாத்தான் சின்னமலையே வரும்’ என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார்.

இந்த சமயத்தில் நண்பர் ஒருவரைச் சொன்னதையும் சொல்லியாகவேண்டும். முன்பெல்லாம்... அதாவது சிலபல மாத வருடங்களுக்கு முன்பு வரை, எதிர்முனைக்காரர் வீட்டிலிருந்து கிளம்பிட்டாரா என்பதை சுற்றிக் கேட்கிற சப்தங்களைக் கொண்டு ஓரளவு அனுமானித்துவிட முடியும். ‘கிளம்பிட்டாரு போல இருக்கு. வண்டி ஹார்ன் சத்தமெல்லாம் கேக்குது’ என்று ஆறுதல்பட்டுக் கொள்வார்கள்.

ஆனால், அந்த நம்பிக்கைக்கும் ஆப்பு வைத்துவிட்டது ஒரு ‘ஆப்’. வண்டிவாகன இரைச்சல்கள் சத்தத்தைக் கொண்ட ஆப் இருக்கிறதாம். அதை டெளன்லோடு செய்து வைத்திருக்கிறார்கள் பலரும். யாரேனும் பேசும்போது, டூவீலர், கார், பஸ் ஹார்ன், ஆம்புலன்ஸ் சைரன் என சத்தங்கள் கேட்குமாம். ’டிராபிக்ல இருக்கேன். அப்புறமாக் கூப்பிடுறேன்’ என்பார். நாமும் கொழந்தைப்புள்ளையா நம்பிவிடுவோம். ஆனால், மார்புவரை கட்டிய லுங்கியுடன், ஹாலில் கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு, சோம்பல் முறித்து சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இதிலென்ன கூடுதல் விஷயம்... அடுத்தமுறை நீங்கள், அதே நபருக்குப் பேசும்போது, இப்படியான டிராபிக் ஆப் யூஸ் செய்தால், வரிசைக்கிரமமாக வரும் சப்தங்களால், அண்ணன் மாட்டிக்கொள்ள நேரிடும். உண்மையை ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. பொய்யைத்தான் ஞாபகம் வைச்சிக்கணும் என்பார்களே! அதேபோல், இந்த ’ஆப்’பை, யாருக்கு எப்போது எதைப் பயன்படுத்தினோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வது... மகனே... அவர் சமர்த்து!

’உங்களுக்கு வாட்ஸ் அப்ல மெசேஜ் அனுப்பினேன். பேஸ்புக்ல மெசேஜ் அனுப்பினேன். மெயில் பண்ணியிருந்தேனே... பாக்கலியா...’ என்றெல்லாம் அப்பாவித்தனமாக பதிலுக்கு பத்துப் பதினைந்து நாட்கள் கூட காத்திருப்பவர்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் சொல்ல ஆயிரமாயிரம் பதில்கள் இருப்பதுதான், செல்போன் யுகத்தின் ஆகப்பெரிய சாபம்.

’அட ஏம்மா கேக்கறே. பத்துநாளா டிஸ்பிளே போச்சு. யார் போன் பண்றாங்கன்னே தெரியாது. எடுத்துப் பேசினாத்தான் தெரியும்’

’அப்படியா... அனுப்பிச்சிருக்கீங்களா. எந்த மெயிலுக்கு அனுப்பினீங்க. அந்த மெயிலை, நான் சிஸ்டத்துலதான் பாக்கறேன். அதுல அனுப்பிச்சிடுங்களேன்’

‘தெரியலம்மா. ரெண்டுநாள் லீவுல, பசங்கதான் போனை வைச்சிருந்தாங்க. ஏதோ நோண்டிக்கிட்டு, அப்படியே அழிச்சிட்டாங்க போல...’

‘எங்கேம்மா பாக்கமுடியுது. ஆபீஸ்ல செம வேலை. பத்துநாளா பேஸ்புக் பக்கமே வரலை. பாத்தீங்கன்னா தெரியும்’

பொய்... பொய்... பொய்... மிக எளிதாகவும் சுலபமாகவும் வலியின்றியும் பொய்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். சொல்லிக் கொண்டே இருக்கிறோம். கடந்துகொண்டே இருக்கிறோம்.

’நேத்து உங்களுக்கு போன் பண்ணேன். எடுக்கவே இல்லை’ என்பார்கள். ‘அப்படியா... எந்த போன் வந்தாலும் எடுக்காம இருக்கமாட்டேனே. புல் ரிங் போச்சா?

‘இல்ல.. லைன் பிஸி லைன் பிஸின்னே வந்துக்கிட்டிருந்துச்சு’

‘நேத்திக்கி அஃபீஸியலா ஒர்க். அரக்கோணம் தாண்டி நாலஞ்சு ஊருங்களுக்குப் போயிருந்தேன். அது கிராமமா... அதான் டவர் கிடைக்காம இருந்திருக்கும்’

‘அப்புறம் அடிச்சேன். ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு’

‘சார் நான் ஸ்விட்ச் ஆஃப் செய்யவேமாட்டேன் சார். ஆச்சரியமா இருக்கு’

இப்படியான மணிரத்ன நறுக்சுருக் டயலாக்குகள், பொய்கள் தாங்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

ஒரே வார்த்தையில் சொல்வது என்றால்... செல்போனுக்கு பழகியது போல, பொய்க்கும் பழகிட்டோம். அதுமட்டும் உண்மை!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close