[X] Close

சாம்பாரின் வயசு என்ன?


age-of-sambar-gravy

  • kamadenu
  • Posted: 29 Mar, 2018 15:16 pm
  • அ+ அ-

இன்றைக்கு இட்லிக்கோ, சோற்றுக்கோ நாம் முதலில் தேடும் சாம்பாரின் வயசு, வெறும் 300தான்.

இவ்வளவு குறுகிய காலத்தில் புகழ்பெற்ற சாம்பாரின் வரலாற்றைத் தேடிப் போனால், தஞ்சையை ஆண்ட சாம்போஜி என்ற அரசர் சிறந்த சமையல் கலை நிபுணராக இருந்ததாக அந்தக் கதை தொடங்கும். அவருக்கு ரொம்பப் பிடித்த ஆம்தி என்ற மராட்டியக் குழம்பை வைப்பதற்குத் தேவையான கோகம் புளி ஒரு நாள் கிடைக்காமல் போன நிலையில், அந்தத் தகவலை அவரிடம் தெரிவிக்க அரண்மனை சேவகர்கள் பயந்தார்களாம்.

அப்போது சமர்த்தியமான ஒரு சேவகர், கோகம் புளியைவிட, தஞ்சையின் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் புளியம்பழம் நல்ல புளிப்பைத் தரும் என்று கொடுத்தாராம். அதை வைத்து சாம்போஜி செய்ததே சாம்பார் என்று அந்தக் கதை முடியும். இது ஒரு செவிவழிக் கதை. இந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.

17ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆள ஆரம்பித்த மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார். ஆனால், அதன் உண்மைக் கதையோ சற்று வித்தியாசமானது.

மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக நாம் பயன்படுத்தும் புளியை, அவர்கள் அப்போது பயன்படுத்தவில்லை. கோகம் எனப்படும் ஒரு வகைப் புளியையே பயன்படுத்திவந்தனர். அது மகாராஷ்டிரம், குஜராத்தில்தான் அதிகம் விளைகிறது.

நடந்த கதை

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி 1 (சாம்போஜி அல்ல. அவர் சமையல் கலை நிபுணரும் அல்ல) காலத்தில்தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம்.

ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான கோகம், மகாராஷ்டிரத்தில் இருந்து ஒரு நாள் வரவில்லை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள், நாம் பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள். அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருள்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா.

ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது. எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு விருந்தில் சாம்பாரைப் படைத்துள்ளார். அதன்பிறகு சாம்போஜியை கௌரவிக்கும் வகையில், அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பொருள்படும் வகையில், சாம்பார் என்ற பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.

ஆதாரங்கள்

சாம்பார் தொடர்பாக போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவை இரண்டும், உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கிறது.

அதன் வெளிப்பாடுதான், இந்த நூல்கள். பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் சரபேந்திர பக்ஷாஸ்திரத்தில் வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அதற்குப் பிறகு மற்ற சாம்பார் வகைகள் பிரசித்தி பெற்றிருக்கலாம்.

ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. சம்பாரம் என்பது மசாலா பொருள்களை அரைத்துச் சேர்ப்பது என்றும், அதனால்தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

சாம்பாருக்கான அதே மூலப்பொருள் களைக் கொண்டு குழம்புகளை உடனடியாகச் செய்வதற்கு தஞ்சை மக்கள் ரெடிமேட் மிக்ஸ் ஒன்றை வைத்திருந்தார்கள். மிளகாய், மல்லி விதை கலந்த மல்லிப் பொடியையும் அத்துடன் சேர்த்துப் பயன்படுத்துவது வழக்கம்.

இறைச்சி உணவுகளில் இந்த மசாலா சேர்க்கப்பட்டது. தஞ்சை சைவ உணவுக்காரர்களின் வாரிசுகள் அரசு வேலைகளுக்காக சென்னை, மும்பை, தில்லி போன்ற வடக்குப் பகுதிகளுக்குச் சென்றபோது, எளிதாக சாம்பார் தயாரிப்பதற்கு அவர்களது அம்மாக்கள் மேற்கண்ட முறையில் ரெடிமேட் சாம்பார் பொடியை உருவாக்கிக் கொடுத்தனர். அதுவே இன்றைக்கு, ரெடிமேட் சாம்பார் பொடியாக, தனியாக விற்பனை செய்யப்படும் அளவுக்கு வந்துவிட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close