[X] Close

இ.எம்.ஐ...இல்லாத வாழ்க்கை! . வாழ முடியுமா நம்மால்?


emi-life

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Mar, 2018 15:45 pm
  • அ+ அ-

ஆழி சூழ் உலகு என்று கம்பர் சொன்ன வார்த்தை, இன்றைக்கு இ.எம்.ஐ. சூழ் உலகு என்று சொல்லப் பயன்படுத்தப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என்பது போல், இந்தக் காலகட்டத்தில், இ.எம்.ஐ இன்றி எதுவுமே அமையாது; அமைத்துக் கொள்ளவும் முடியாது போல!

இருபது முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், ஒரு வார்த்தை புழக்கத்தில் இருந்தது. ‘பத்துப்பைசா கூட யார்கிட்டயும் கடன் வாங்காம வாழணும்’ என்று வாழ்ந்த காலம் அது. அதாவது, கைநீட்டி கடன் வாங்குவது  கவுரவக் குறைச்சலாகவே பார்க்கப்பட்டது. அதிலும் வட்டிக்கு கடன் வாங்குவது, மிகப்பெரிய மோசமான காரியம் என்றார்கள்.

ஆனாலும் கல்வி, மருத்துவம், கல்யாணம், மரணம் முதலான விஷயங்களுக்கு கடனென்ன... பிச்சை கூட எடுக்கலாம் என்று சொல்லிவந்ததைப் படித்திருப்போம். ஆனால் இன்றைய நிலை? இ.எம்.ஐ. காலம். 

இ.எம்.ஐ. அதாவது Equated Monthly Instalment. நாம் கடனாகப் பெறுகிற தொகையை, எத்தனை மாதங்கள், வருடங்கள் என்று கணக்கிட்டு, அதற்குத் தக்கபடி மாதந்தோறும் ஒரு தொகையைச் செலுத்தவேண்டும். அதுதான் இ.எம்.ஐ.

வங்கியில் கடன் கேட்பதற்கு லோலோ என அலைந்த காலமெல்லாம் உண்டு. என் நண்பர் விளையாட்டாக, ‘லோன்  அப்படின்னு ஏன் பேரு வந்துச்சு தெரியுமா. அதை வாங்கறதுக்காக லோலோனு அலையறதுனாலதான்’ன்னு சொல்லுவார். இப்போது அப்படியெல்லாம் இல்லை. உங்கள் மெயில் ஐடியிலும் மொபைலிலுமாக தினமும் குற்றாலம் அருவி கணக்காக, கொட்டிக் கொண்டே இருக்கின்றன லோன் அழைப்புகள். அதிலும் ‘பத்துநிமிடத்தில் ஒரு லட்சம் வரை லோன்’ என்று  30 நாட்களில் ஹிந்தி கற்கலாம் மாதிரி விளம்பரம் பண்ணுகிறார்கள்.

அடுத்தகட்டமாக, நீங்கள் அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருப்பீர்கள் (நானா... என்று அதிர்ச்சியாகவேண்டாம்). அல்லது டூவீலரில் வேட்டையாடு விளையாடு கமல் ஸ்டைலில், ஸ்டைலாக சென்று கொண்டிருப்பீர்கள். போன் வரும். ஏற்கெனவே செல்போனுக்கும் உங்கள் காதுக்கும் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் (ஹெட்போன், ப்ளூடூத் இத்யாதிகள்). ‘சார் வணக்கம். ...... பேங்க்லேருந்து பேசுறோம்’ என்று பெண் குரல் கெஞ்சும். உங்களுக்கு பர்சனல் லோன், ஹோம் லோன், அந்த லோன், இந்த லோன் என  தரலாம் என்று விவரிக்கும். முக்கால்வாசி பேர், ‘அதெல்லாம் வேணாங்க. வேணும்னா சொல்றேன்’ என்பார்கள். ‘ஏங்க... யாருங்க கொடுத்தா என் நம்பரை. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க’ என்று டென்ஷனில் எகிறுவார்கள் சிலர். ‘ஆமாம்... லோன் வேணும். ஒரு அம்பது கோடி கிடைக்குமா?’ என்று நக்கலடிப்பார்கள் இன்னும் சிலர். ‘எனக்கு ரொம்பலாம் வேணாம். ஒரு மூணு லட்ச ரூபா கடன் இருக்கு. அதையெல்லாம் அடைக்கணும். லோன் கிடைக்குமா’ என்று குலசாமியை வேண்டிக்கொண்டே கேட்கிற அப்பாவிகளும் உண்டு. ஆனால், மல்லையாக்களுக்கும், மிகப்பெரிய நகைக்கடைகளுக்கும்தான் அள்ளியள்ளிக் கொடுக்கிற லோன் , நமக்கும் எட்டும் கனிதான். என்ன... கொஞ்சம் அலையணும்.

அதிருக்கட்டும். டூவீலருக்கு மாதம் ஆயிரம் முதல் மூவாயிரம் வரை, வாஷிங் மிஷின், ஏசி, ஃபிரிட்ஜ் என சில ஆயிரங்கள் மாதந்தோறும் கட்டி வந்த நிலை  இன்றைக்கு காருக்கு மாதம் ஏழாயிரம், பத்தாயிரம் என்றும் வீட்டுக்காக கிட்டத்தட்ட இருபதாயிரம் முப்பதாயிரம் என்று இ.எம்.ஐ. கட்டக்கூடிய நிலைக்கு வந்ததுதான் பொருளாதார வளர்ச்சி என நினைத்துக் கொண்டிருக்கிறோம். என்ன நவீனமோ... என்ன உலகமயமாக்கலோ?

கணவனுக்கு ஒரு வண்டி, மனைவிக்கு ஒரு வண்டி. பிள்ளைக்கு ஒரு வண்டி, மகளுக்கு ஒரு ஸ்கூட்டி. இவை அனைத்துக்கும் இ.எம்.ஐ. அடுத்து மொத்த குடும்பமும் செல்வதற்கு ஒரு கார். முன் தொகை சில லட்சங்கள் கட்டினால், மிச்சசொச்ச லட்சங்களை சில ஆயிரங்களாக மாதந்தோறும் தரலாம், இ.எம்.ஐ.யாக!

இன்றைக்கு சென்னையில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பா'லோனோ'ர் வெளியூர்க்காரர்கள்.. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நாமக்கல், கோவை, நெல்லை, ராமநாதபுரம், காரைக்குடி, வேலூர், பட்டுகோட்டை என பல ஊர்க்காரர்கள். கல்யாணம், காதுகுத்து, கோயில் கொடை என்று ஊருக்குப் போகும் போது, ‘’ஏம்பூ... இம்புட்டு வருசமா பட்டணத்துல வேலை பாக்கிறியே... சொந்தமாவீடுகீடுன்னு  வாங்கிருக்கியா’ என்று  ஆயாக்களும் ,ஐயாக்களும் கேட்பார்கள் என்பதற்காகவே இங்கே ஒரு வீடு.

சொந்த வீடு, கிரகப்பிரவேசம் எல்லாம் முடித்துவிட்டு, டைல்ஸ் தரையில் படுத்துக் கொண்டு, ‘சொந்த வீட்ல இருக்கற சுகமே தனிதான்’ என்றெல்லாம் டயலாக் பேசி நெகிழவே முடியாது. ‘இன்னும் 20 வருஷம் கட்டணுமாமேப்பா. அப்படிக் கட்டினாத்தான் இந்த வீடு நம்ம வீடாம். அம்மா போன்ல யார்கிட்டயோ சொல்லிட்டிருந்தா’ என்று ஐந்தாம் வகுப்பு மகள்கள் நடத்துகிற பாடமெல்லாம் வேதங்கள்!

மாதாமாதம் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட மணி நேரத்தில், இ.எம்.ஐ. இயந்திரம், பாய்ந்தோடி வந்து, நம் அக்கவுண்டில் இருந்து பணத்தை பீறாய்ந்துகொள்ளும் அதிசயம்... உலகின் ஆகச்சிறந்த அதிசயங்களில் தலையாயது. அன்றைய நாளில், பிபி, அல்சர், மயக்கம், தலைச்சுற்றல், ரத்தக் கொதிப்பு, சத்தக் கொதிப்பு என எல்லாமே எகிறியடிக்கும் லோன்வாசிகளுக்கு!

சமீபங்களில், ஐ.டி. நிறுவன இளைஞர்களும் யுவதிகளும்தான், இப்படியான இ.எம்.ஐ. இக்கட்டுகளுக்கு ரொம்பவே ஆளானார்கள். வேலைக்குச் சேர்ந்து, ஆபீசில் வங்கிக் கணக்கு ஓபன் செய்து கொடுத்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், வங்கியில் இருந்தே போன் வரும். உங்கள் சம்பளம் ஐம்பதாயிரமா. அதற்கு ஐந்து லட்சம் வரை பர்சனல் லோன் தரலாம் சார் என்பார்கள். இவர்களும் ராயல் என்ஃபீல்டு வாங்கி, ஸ்கோடா  வாங்கி, திருவான்மியூருக்கு அந்தப் பக்கத்தில் 200 வீடுகள் கொண்ட அபார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கி... எல்லாம் இனிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், ஆட்குறைப்பு என்று ஏதேதோ சொல்லி, வேலையைப் பறிக்க, அவர்களின் மன உளைச்சலுக்கும் வலி அவமானத்திற்கும்  தீர்வே இல்லாத நிலையை கவனித்திருக்கிறீர்களா.

காசு இருக்கணும். டூவீலர் வாங்கணும். பணம் இருக்கணும். கார் வாங்கணும். இடமும் காசும் பணமும் இருக்கணும். வீடு வாங்கணும். அவசரப்பட்டுட்டோமோ என கலங்கி யோசித்தபடி இருக்கும் போது, அடுத்ததாக எங்கோ ஓரிடத்தில் வேலை கிடைக்கும். பல்பு எரியும். ஒளிவட்டம் தோன்றும். நம்பிக்கைத் துளிர்விடும்.

புது அலுவலகம். புது வங்கி. புது வங்கிக் கணக்கு.

’வணக்கம் சார். எங்க பேங்க்ல சேலரி அக்கவுண்ட் ஓபன் பண்ணிருக்கீங்க. உங்க சேலரிக்கு ஏழு லட்சம் வரை லோன் தரலாம் சார். ஃபார்ம்ல ஸைன் பண்ணினா, ரெண்டே நாள்ல, உங்க அக்கவுண்ட்ல லோன் பேமெண்ட் விழுந்துரும் சார்...’ என்று அழகிய தமிழில், தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ கலந்து பெண் குரல் சொல்ல...

’மறுபடியும் முதல்லேருந்தா...’ என்று வடிவேலு ரியாக்‌ஷன் காட்டி நிற்பான் தமிழன்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close