[X] Close

மதுராந்தகம் சென்னைக்கு அருகிலா..? பயணங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவதில்லை!


urban-travel

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Mar, 2018 11:54 am
  • அ+ அ-

பத்துமணி ஆபீசுக்கு ஏழு மணிக்கே கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்கிற தூரத்தில் இருக்கிறார்கள் பெரும்பான்மையானவர்கள்.

சென்னைக்கு அருகே, சென்னைக்கு அருகே என்று இவர்கள் கூவிக்கூவி, மதுராந்தகத்தைக் கூட சென்னைக்கு அருகேயாக்கிவிட்டார்கள். வீட்டில் இருந்து டூவீலரில் ரயில்வே ஸ்டேஷன். அங்கிருந்து ரயிலேறி, சென்னைக்குள் நுழைந்து, பஸ் பிடித்து ஆபீஸ் வாசலில், வலதுகாலை வைப்பதற்குள், மேலதிகாரி நான்குமுறை, ’வந்தாச்சா’ மெசேஜ் போட்டிருப்பார். பக்கத்து சீட் கொலீக்... ‘மாமனார் ஊரில் இருந்து வருகிறார். ஸ்டேஷன் போய் பிக்கப் செய்து, வீட்டில் விட்டுவிட்டு, லேட்டாகத்தான் வருவேன். ஒருமணி நேரம் பர்மிஷன்’ என்று சொல்லியிருப்பார்.

மேலும், செங்கல்பட்டில் இருந்து கிளம்பும் எலக்ட்ரிக் ரயிலில், செங்கல்பட்டிலேயே சீட் கிடைப்பதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்தான். அதேபோல், எக்மோரில் இறங்குவதற்கு முன்னதாக, சேத்துப்பட்டில் சீட் கிடைப்பதெல்லாம், ‘ஹூம் எதுக்கும் அதிர்ஷ்டம் வேணும்’ என்கிற ரகத்தைச் சேர்ந்தவைதான்.

‘’நமக்கெல்லாம் சொர்க்கம் நிச்சயம் தெரியுமா?’’ என்று என் நண்பர் சொல்லுவார். ஏனென்று கேட்டேன். ‘’‘பிரைம்டைம்ல, காலைலயும் சாயந்திரத்துலயும் ரயிலுக்குள்ளே நசுங்கி, பிதுங்கி, கரும்பு மாதிரி சக்கையா வெளியே  வர்றோமே. இதுதான் நரக வேதனை. கிட்டத்தட்ட வாழ்றபோதே நரக சுகத்தை (!) அனுபவிச்சிடுறதால, நமக்கெல்லாம் ஸ்டிரெயிட்டா சொர்க்கம்தான்’’ என்றார் சிரிக்கவே சிரிக்காமல்.

ஆக, எட்டுமணி நேர வேலை கூட கடினமில்லை. அதற்கு முந்தைய, பிந்தைய மெனக்கெடல்களும் பயணங்களும்தான் கொடுமைடா சாமீ . அப்படிப்பட்ட பரிதாபத்துக்கு உரியவர்கள் சூழ் உலகு இது.

சமீபகாலங்களில், அலுவலகத்திற்கும் வீட்டுக்குமான தூரங்கள், தூரங்களாகிக் கொண்டே இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு சென்னை மாதிரியான ஊரில், மாம்பலம், மயிலாப்பூர் தாண்டி நங்கநல்லூர், ஆதம்பாக்கம் போனார்கள். பிறகு அந்தப் பக்கம் பம்மலும் பல்லாவரமும் இந்தப் பக்கமும் மடிப்பாக்கமும் வேளச்சேரியும் என்றானது. இன்னொரு கட்டத்தில், தாம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், மனைகளாகவும் வீடுகளாகவும் அபார்ட்மெண்டுகளாகவும் முளைத்து நின்றன.

கடந்த 15 வருடத்தில், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என ஸ்டேஷன் ஸ்டேஷனாக, ஊர் ஊராகச் சென்று செங்கல்பட்டு மார்க்கத்தின் இரண்டு பக்க கிராமங்களும் மெல்ல மெல்ல நகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. ‘நம்ம வருமானத்துக்கெல்லாம் சிட்டிக்குள்ளாற வீடுலாம் வாங்கமுடியுமா சார்’ என்று அலுத்துச் சொல்லிவிட்டு, ரயிலில் தூங்கி வழிகிறவர்களைப் பார்க்கவே பாவமாகத்தான் இருக்கிறது.

கூடுவாஞ்சேரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள காயரம்பேடு எனும் பகுதியில் வசிக்கிறார்  நண்பர். காலையில், ஏழேமுக்காலுக்கெல்லாம் பையன் பள்ளிக்குச் செல்லும் பஸ் வந்துவிடுகிறது. அவனை வழியனுப்பிவிட்டு வருவதற்குள், மனைவி ரெடியாக இருப்பார். நண்பருக்கு அண்ணாநகரில் அலுவலகம். அவரின் மனைவிக்கு அடையாரில் வேலை. இருவரும் ஆளுக்கொரு டூவிலரில் ஏறி, கூடுவாஞ்சேரி ரயில்நிலையம் வந்து, ரயிலேறி, கிண்டி வரை ஒன்றாகப் பயணித்து, ஆளுக்கொரு திசையாய் பிரிகிறார்கள். அப்படிப் பயணம் செய்யும்போதுதான், வாழ்க்கை குறித்த திட்டமிடல்கள் ரயில்வேகத்தில் அலசி ஆராயப்படுகின்றன.

அட... காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், பொன்னேரி என வெகு தொலைவில் இருந்தும் கூட வேலை நிமித்தமாக பல்லாயிரக்கணக்கான மக்கள், தினமும் நகரத்திற்கு வந்து சென்றவண்ணம் இருக்கிறார்கள். 

 ’என்ன சார் பண்றது? சிட்டியை விட்டு அவுட்டர் வந்தாத்தான் நம்ம பட்ஜெட்டுக்கு வீடு கிடைக்குது. போதாக்குறைக்கு, சம்மர் வந்துருச்சுன்னா, நாலஞ்சு மாசத்துக்கு தண்ணிப் பிரச்சினை, சிட்டில இருக்கும். ஆனா  அவுட்டர்ல  இதெல்லாம் இல்ல. நங்கநல்லூர்ல இருக்கும்போது, நைட் ரெண்டுமணிக்கு பாலாறு தண்ணி திறந்துவிடுவான். அடிபம்புல இரண்டு குடம் அடிச்சிட்டு, அடுத்த ரவுண்டுக்கு அரைமணி நேரம் காத்திருக்கணும். பத்து குடம் பிடிக்கறதுக்குள்ளே பொலபொலன்னு விடிஞ்சிரும் போங்க!’’ என்று தூக்கக் கண்களின் சோகம் மாறாமல் சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு சோகம்... வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் பலர், அவர்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷனில் இறங்காமல், தூங்கிவிடும் நிலையும் ஏற்படும். பாவம்... கூடுவாஞ்சேரிக்கு பதிலாக மறைமலைநகர், பரனூர், செங்கல்பட்டு என்று இறங்கி, அடுத்த ரயிலைப் பிடித்து வீடு வந்த சேர்ந்த கதையை, சிரிக்கச் சிரிக்க ஆனால் ஒருவித வலியுடன் சொல்கிறவர்கள் அதிகம். 

ஆனால் என்ன... வேலைக்கு முன்னே இரண்டுமணி நேரம், வேலை முடிந்து இரண்டு மணி நேரம் என பயணிக்கிற வாழ்க்கை, ஒருவகையில் கஷ்டம்தான்.

சென்னைக்கு வெளியே இருக்கிறீர்களா நீங்கள்? உங்கள் பயண தூரம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன் வாசகர்களே!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close