[X] Close

நல்லவரா... கெட்டவரா?   நீங்களே மார்க் போடுங்க!


neengale-mark-nallavara-kettavara

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Mar, 2018 14:50 pm
  • அ+ அ-

’நீங்க நல்லவரா... கெட்டவரா?” - வேலுநாயக்கரிடம் பேரன் கேட்கும் இந்தக் கேள்வி, செம ஹிட்டு. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு வந்த நாயகன் பட வசனம் இது. வெறும் சினிமா வசனமா இது. சாதாரணக் கேள்வியா இது.

யோசிக்க யோசிக்க, சுவாரஸ்யமும் உண்மையும் கலந்த அற்புதக் கலவையை நோக்கிய கேள்வி இது என்பதை உணரமுடிகிறதுதானே.

சரி... ‘நீங்க நல்லவரா... கெட்டவரா?’ என்று பேரனோ பேத்தியோ வந்துதான் கேட்க வேண்டும் என்றில்லை. மனைவியோ பிள்ளைகளோ நம்மிடம், நம் சட்டையைப் பிடித்து, மனதை உலுக்கிக் கேட்கவேண்டும் என்பதெல்லாம் கிடையாது. உற்ற நண்பனோ உறவினர்களோ , ‘ஏம்பா... நீ நல்லவனா... கெட்டவனா?’ என்று கேட்கும் வரைக் காத்திருக்கவேண்டிய  பொறுமைக்கெல்லாம் காலம் விடவே இல்லை.

பிறகு யார் கேட்கவேண்டும் என்பதுதானே யோசனை.

இதற்குப் பதில்... யார் கேட்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

சரி... யாராவது வந்து கேட்டால்தானே சொல்லமுடியும் என்பீர்கள்.

கேட்டால் சொல்வது இருக்கட்டும். சொல்வதற்கு முன்னதாக உங்களுக்குத் தெரியுமா, இதற்கான பதில்.

ஆமாம். நீங்கள் நல்லவரா... கெட்டவரா... என்று யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அப்படியே பதில் சொல்வதாகவே வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னதாக, உங்களுக்கு நீங்களே தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டாமா? அதாவது நமக்கு நாமே அறிந்துகொள்ளத் தேவையில்லையா?

நல்லவரா... கெட்டவரா என்று  நாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டால்தானே, இந்தக் கேள்வியைப் பிறர் கேட்கும்போது, நம்மால் பதில் சொல்லமுடியும்.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பொதுவான சில விஷயங்கள் குறித்த பேச்சு அது. ஆனால் அந்தப் பேச்சு, தனிமனித ஒழுக்கம் குறித்த பேச்சானது. பொதுவாகவே ஒழுக்கம் என்றால் உடல் சார்ந்த விஷயத்தை மட்டுமே சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ‘’தொந்நூறு சதவிகிதம் உண்மையானவனா இருக்கேன். மிச்சசொச்ச வாழ்க்கை முடியறதுக்குள்ளே அந்த பத்துசதவிகிதத்தையும் நிரப்பிடணும்னு ஒரு ஆசை. எண்ணம், அதான் செயலே. இந்த ஆசையும் எண்ணமும் செயலுமே நம்மளை மிச்சமுள்ள பத்துசதவிகிதத்தையும் நேர்பண்ண வைச்சிரும்’ என்றார்.

உண்மைதான். விருப்பம், எண்ணம், செயல்... இந்த மூன்றும் மிகமிக முக்கியம். இந்த மூன்றிலும் உண்மை இருந்துவிட்டால், இங்கே எல்லோரும் நல்லவரே!

சரி... சின்னதான ஒரு டெஸ்ட்... இது உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்கிற பரீட்சை.  ஒழுக்கப் பட்டியல் போட்டுப் பாருங்கள். அதற்கு மதிப்பெண்ணும் கொடுத்துக் கொள்ளுங்கள். அதை பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நீங்கள் நல்லவரா... கெட்டவரா... என்பது எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை. உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதே அவசியம். அதுவே முக்கியம்.  

1. எதற்கு எடுத்தாலும் பொய் சொல்வீர்களா?

2. எப்போதாவது பொய் சொல்வீர்களா?

3. பொய்யே சொல்லமாட்டீர்களா?

அடுத்த கேள்வி...

1. ஆபீசில் லேட்டாக வருவதற்கு பொய் சொல்வீர்களா?

2. வீட்டுக்கு லேட்டாக வருவதற்கு பொய் சொல்வீர்களா?

3. நண்பர்களிடம்  பொய் சொல்வீர்களா?

4. எந்தத் தருணத்திலும் பொய்யே சொல்லமாட்டீர்களா?

அடுத்த கேள்வி...

ஒரு அலுவலகத்தில் இருந்து இன்னொரு அலுவலகத்திற்கு வந்த பிறகு அந்த அலுவலகம் பற்றி என்ன நினைப்பீர்கள்.

1. பழைய நிறுவனத்தின் வளர்ச்சியை ஏற்பீர்களா?

2. அந்த நிறுவனத்தின் நிறைகளைச் சொல்லுவீர்களா?

3. பழைய ஆபீசின் குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பீர்களா?

4. பழைய நிறுவனத்தால், நீங்கள் அடைந்த வளர்ச்சியைச் சொல்லுவீர்களா?

அடுத்த கேள்வி...

1. யாரேனும் உதவி கேட்டு வந்தால் செய்வீர்களா?

2. பணமில்லை என்று சொல்லி கைவிரிப்பீர்களா?

3. என்னால் முடிந்தது என்று தருவீர்களா?

4. உதவிதான் கேட்பார்கள் என்று போனே எடுக்கமாட்டீர்களா?

அடுத்த கேள்வி...

1.உங்களுக்கு ஒருவர் செய்த உதவியை மறந்துவிடுவீர்களா?

2.மறக்காமல் நன்றி சொல்லிக் கொண்டிருப்பீர்களா?

3. சொல்லமாட்டேன். மறக்கவும் மாட்டேன் என்கிறீர்களா?

4. செய்த உதவி, செய்த நபர்... மறந்தேவிடுவீர்களா?

அடுத்த கேள்வி...

1. உங்களுக்கு துரோகம் செய்தவரை மறந்துவிடுவீர்களா?

2. மன்னித்து விடுவீர்களா?

3. மறக்கவும் மன்னிக்கவும் மாட்டீர்களா?

4. பழிக்குப் பழி உணர்வுடன் இருக்கிறீர்களா?

5. அவன் நல்லாவே இருக்கக் கூடாது என மனதில் நினைக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம், உண்மையாக, நேர்மையாக, நீங்களே  பதில் சொல்லிக் கொள்ளுங்கள். மார்க் போட்டுக் கொள்ளுங்கள்.

எது எதற்கு எவ்வளவு மார்க் என்றா கேட்கிறீர்கள்.

முதல் விஷயம்...நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டு உள்வாங்கி, பதில் சொல்லும் மனநிலைக்கு வந்துவிட்டாலே, பாதி நல்லவராகிவிடுகிறீர்கள். கேள்விகளுக்கு உண்மையாக பதில் சொல்வதில், மீதமும் நல்லவராகி விடுகிறீர்கள்.

மற்றபடி, பூமியில்  இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. நீங்க நல்லவரா... கெட்டவரா... என்பதும் கூட அப்படித்தான்!

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close