[X] Close

அப்படியொரு லவ் லெட்டர்!


punai-peyar-ladies-name

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Mar, 2018 11:25 am
  • அ+ அ-

ஒரு ஆண், பெண்ணின் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டு  எழுதினால், பல சுவாரஸ்யங்களையும் இடைஞ்சல்களையும் சந்திக்கவேண்டியிருக்கும் போல!

பெண்ணின் பெயரை ஆண் வைத்துக்கொண்டு, எழுதுவது என்பது இந்தக் காலத்தில் குறைந்துவிட்டது. ஆனால்  அப்போது இப்படியான பாணி நிறையவே  உண்டு. அதற்கு மிகப்பெரிய உதாரணம்... சுஜாதா. அப்போது ரா.கி.ரங்கராஜன் மிகவும் பிரபலம் என்பதால், தன் பெயரான ரங்கராஜனை மறைத்துக் கொண்டு, தன் மனைவி பெயரில், சுஜாதா என்று எழுதினார்.

ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதினார். புஷ்பாதங்கதுரை என்று எழுதும் போது ஒருவிதமாகவும் ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதும் போது வேறுவித கதைக்களம், எழுத்து நடை என்று கையாண்டது, அப்போது பிரமிப்பாகப் பேசப்பட்டது.

அப்போது பேனா நண்பர்கள் என்று ஓர் வட்டம் உண்டு. கிட்டத்தட்ட இன்றைக்கு பேஸ்புக் இருக்கிறதே. இதற்கெல்லாம் முப்பாட்டன் அது. பத்திரிகைகளில், பேனா நண்பர்கள் என்ற தலைப்பில், சிலரின் பெயரும் முகவரியும் பிரசுரமாகும். பார்க்காமலேயே காதல் என்பது போல், இது பார்க்காமலேயே நட்பு. இதிலென்ன கூத்து என்றால், சில ஆண்கள் கற்பனையாக பெண் பெயரில்  பேனா நண்பர்களாக முகவரி கொடுத்திருப்பார்கள். பெண் பெயரில் உள்ளவர்களுக்கே, பேனா நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள் என்பது பெரிய அதிசயமில்லையே!

இதெல்லாம் இருக்கட்டும்.

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணனுடன் சமீபத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது, பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது ஆரம்பகாலத்தில், அவர், தன் அம்மா பெயரான ஜானகி என்ற பெயரில், அமுதசுரபிக்கு எழுதினார். தொடர்ந்து மூன்று இதழ்களில், பிரசுரமானது. மேலும் முதல் பரிசும் கிடைத்தது.

இதை கவனித்த வாசகர் ஒருவர், எழுத்தாளரும் அமுதசுரபியின் ஆசிரியருமான விக்கிரமனுக்கு, ‘மாதாமாதம் பரிசு கொடுக்கிறீர்களே... ஜானகி உங்களுக்கு உறவா?’ என்று கேட்டு நக்கலாக எழுதியிருந்தார். அதற்கு விக்கிரமன், ‘நன்றாக எழுதுகிறவர்கள் எல்லோருமே எனக்கு சொந்தக்காரர்கள்தான்’ என்று பதிலளித்தார். இந்த இரண்டுமே பிரசுரமாகியிருந்தது.

அப்போதெல்லாம் படைப்பாளிகளின் பெயருடன் முகவரியும் வெளியிடும் வழக்கம் இருந்தது. அந்தவேளையில், ஜானகிக்கு, அதாவது அம்மாவின் பெயரில் எழுதிய திருப்பூர் கிருஷ்ணனுக்கு ஒரு ஆண் வாசகரிடம் இருந்து, கடிதம் வந்தது. அது காதல் கடிதம்.

தன்னுடைய பெயருக்கு வந்த கடிதத்தை, காதல் கடிதத்தைப் பார்த்துவிட்டு, முதலில் பதறிப் போய்விட்டார் அவருடைய அம்மா. அப்போது அவருக்கு 60 வயது. இந்தக் கடிதத்தால், வீடே களேபரமாகிப் போயிருந்த நிலையில், திருப்பூர் கிருஷ்ணனின் தந்தையார், ‘கொடுடா அந்த லெட்டரை...’ என்று வாங்கிப் படித்தார். படித்ததும் அவர் முகமே மாறிப்போயிருந்தது. கடும் கோபமானார்.

எல்லோரும் அப்பாவைப் பார்க்க, அவர் உஷ்ணத்துடன் உக்கிரத்துடன் சொன்னார்... ‘என்னடா இது. என்ன லெட்டர்டா இது. இவ்ளோ எழுத்துப்பிழையோட இருக்கு. தமிழை இப்படிக் கொன்னுருக்கான் ’’ என்று சொல்ல... திருப்பூர் கிருஷ்ணனின் வீடு, சிரித்து அடங்க வெகு நேரமானது.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close