[X] Close

15 கட்சிகளை திரட்டி மோடிக்கு எதிராக அரசியல் போர்- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சாணக்கியம் பலிக்குமா?


chandra-babu-naidu

  • kamadenu
  • Posted: 18 Nov, 2018 10:58 am
  • அ+ அ-

சந்திரபாபு நாயுடு... இந்திய அரசிய லில் கடந்த 40 ஆண்டுகளாக ஒலிக்கும் பெயர். பாஜக உடனான கூட்டணி உறவை முறித்துக் கொண்ட இவர், தற்போது பிரதமர் மோடிக்கு எதிராக தேசிய அளவில் போர் தொடுக்கத் தயாராகி வருகிறார்.

அதிரடி மாற்றங்கள்

ஆந்திர அரசியலில் கடந்த 9 ஆண்டுகளாக அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. தென்னகத்தின் பெரிய மாநிலமான ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிந்தது. இதனால் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி கரையத் தொடங்கியது. காங்கிரஸ் இடத்துக்கு, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் உருவான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வரத் தொடங்கியது.

தொடர்ந்து, 2014-ல் மக்களவை தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜகவுடன் இணைந்தார் சந்திரபாபு நாயுடு. நடிகர் பவன் கல்யாணும் ஆதரவு தெரிவிக்க, ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் அவரது தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றது.

வியூகத்தில் மாற்றம்

4 ஆண்டுகள் வரை பாஜகவுடன் உறவு நீடித்தாலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனால் கோபம் அடைந்த நாயுடு, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியது டன் பாஜகவுடன் கூட்டணி உறவையும் முறித்துக்கொண்டார்.

இதனால் 2019 தேர்தலுக்காக ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பவன் கல்யாண் மீது பாஜகவின் பார்வை விழுந்தது. விடுவாரா நாயுடு… ஆந்திர மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் ஏமாற்றிய மோடிக்கு எதிராகத்தான் போர் என அறிவித்தார். முதலில் காங்கிரஸ் அல்லாத 3-வது அணி என திட்டமிட்ட சந்திரபாபு நாயுடு பிறகு தனது வியூகத்தை மாற்றிக் கொண்டார். காங்கிரஸுடன் இணைந்து மோடியை எதிர்ப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

ஒரே கல்லில் 3 காய்கள்

காங்கிரஸுடன் அணி சேர்வதால் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகளை பெறலாம். அதே சமயத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் உள்ள அதிருப்தியாளர்களை வெளி யேறச் செய்து அக் கட்சியை பலவீன மாக்கலாம். அடுத்து, தெலங்கானாவில் பலம் வாய்ந்த டிஆர்எஸ் கட்சியை, அங்கு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸுடன் இணைந்து வீழ்த்தலாம். இவ்வாறு ஒரே கல்லில் 3 காய்களை அடிக்கலாம் என சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அதே சமயத்தில் பாஜகவுக்கு எதிரான சுமார் 15 கட்சிகளை காங்கிரஸ் அணியில் சேர்த்து 2019 தேர்தலில் வெற்றி பெற்றால், மத்திய அமைச் சரவையில் இடம்பெற்று முக்கியத் துறைகளை பெறலாம். மேலும் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட திட்டங்களை பெற்று ஆந்திராவின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு கடந்த அக்டோபர் 27-ம் தேதியும் பிறகு கடந்த 1-ம் தேதியும் டெல்லி சென்றார். அங்கு சரத் பவார், சரத் யாதவ், பரூக் அப்துல்லா, அர்விந்த் கேஜ்ரிவால், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், சீதாராம் யெச்சூரி, சுரவரம் சுதாகர் ரெட்டி, யஷ்வந்த் சின்ஹா என பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது 3-வது அணியாக இல்லாமல், காங்கிரஸுடன் இணைந்து 2019 தேர்தலை சந்தித்தால், பாஜவை வீழ்த்தலாம் என பேச்சு நடத்தினார். பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அவர் சந்தித்தார். பரம எதிரியான காங்கிரஸுடன் சேர்ந்து பாஜகவை வீழ்த்தும் தெலுங்கு தேசம் கட்சியின் திட்டம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இது ஆந்திர அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஸ்டாலினுடன் சந்திப்பு

டெல்லியில் இருந்து திரும்பிய வேகத்தில் பெங்களூரு சென்ற நாயுடு, அங்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமியை சந்தித்தார். பிறகு சென்னை வந்த அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். பிறகு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை விட ஸ்டாலின் திறமையானவர் என பாராட்டினார். மேலும் அதிமுக அரசை 'ரிமோட் அரசு' என விமர்சித்து அக்கட்சியின் உதவியை நாட மாட்டோம் என உணர்த்தினார்.

ஒரு காலத்தில், ஆந்திர மாநிலம் காங்கிரஸின் கோட்டையாக விளங்கி யது. இதனை உடைத்தெறிந்தவர் என்.டி.ராமாராவ். காங்கிரஸுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி, வெறும் 9 மாதங்களில் ஆட்சியை பிடித்தார். இவருக்கு பிறகு சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றாலும் அவ்வளவு எளிதாக தெலுங்கு தேசம் கட்சியை காங்கிரஸால் வீழ்த்த முடியவில்லை. ஆந்திராவில் கடந்த 36 ஆண்டுகளில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளது. தெலங்கானா மாநிலம் அமைந்த பின்னர், ஆந்திராவில் காங்கிரஸ் இருக்குமிடம் தெரியாமல் போனது. இந்நிலையில் பரம எதிரியாக விளங்கிய மற்றும் செல்வாக்கு இழந்த காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் இணைவதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். இரு கட்சிகளிலும் இதைப் பிடிக்காத சிலர் வெளியேறி வருகின்றனர். இது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் என்டிஆரின் ஆன்மா சந்திரபாபு நாயுடுவை மன்னிக்காது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

அரசியல் சூழல்

ஆந்திராவில் தற்போதுள்ள அரசியல் சூழலில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் 2019 தேர்தலில் தனித்து களமிறங்குதாக அறிவித்துள்ளார். என்றாலும் தேர்தல் நெருங்கும்போது இவர் பாஜகவுடன் செல்ல வாய்ப்புள்ளது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் பாஜகவுடன் நெருங்க வாய்ப்புள்ளது. இந்த இரு கட்சிகளில் ஒன்றுடனோ அல்லது இரண்டுடனோ பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. சந்திரபாபு நாயுடுவுடன் சேர்வதால் ஆந்திராவில் இழந்த செல்வாக்கை மீண்டும் படிப்படியாக பெறலாம் என்பது காங்கிரஸ் கட்சியின் திட்டமாக உள்ளது.

இத்தகைய சூழலில் சந்திரபாபு நாயுடு தனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் மூலம் இந்திய அரசியலில் இம்முறை பெரும் மாற்றத்தை கொண்டு வருவார் எனவும், ஆந்திரா வில் மீண்டும் ஆட்சியை கைப்பற்று வதுடன் தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப் பார் எனவும் ஆந்திர அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். என் றாலும் அவரது சாணக்கியம் பலிக்குமா என்பது 2019 தேர்தலுக்குப் பிறகே தெரியும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close